தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபத்தன்று, தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக, லோக்சபா சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளதே, தமிழக அரசு. அப்படியெல்லாம் நினைத்தபடி நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய முடியுமா?' என்று கேட்டார், உதவி ஆசிரியை ஒருவர்.

'உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வது அவ்வளவு சுலபமல்ல. ஆளும் கட்சியே நினைத்தாலும் செய்ய முடியாது...' என்றார், மூத்த செய்தியாளர்.

'பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது?' என்றார், உ.ஆ.,

'இதற்கு மிகப்பெரிய விளக்கம் சொல்ல வேண்டும்...' என்று கூற ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்:

நீதிபதியை நீக்குவதற்கு, மிகப்பெரிய நடைமுறைகள், விதிமுறைகளும் உள்ளன. குறிப்பாக, அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளை அவசியம் பின்பற்றியாக வேண்டும்.

நீதிபதி வழங்கிய, ஒரு குறிப்பிட்ட தீர்ப்பை மட்டும் வைத்து, தவறான செயல்பாடு என, கூறி விட முடியாது.

அரசால் கொண்டுவரப்படும் பதவி நீக்க தீர்மானத்தை, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் கொண்டு வர முடியும்.

லோக்சபா எனில், 100 எம்.பி.,களும், ராஜ்ய சபா எனில், 50 எம்.பி.,களும் அந்த நோட்டீசில், ஆதரவு கையெழுத்து போட வேண்டும்.

இரு சபைகளின் தலைவர்கள், அந்த நோட்டீசை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என, முடிவெடுப்பது அவர்களது தனி உரிமை.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் சட்ட நிபுணர் என, தலா ஒருவர் வீதம், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி, அறிக்கை தயார் செய்வர். குற்றச்சாட்டு உண்மை என, நிரூபணமானால் பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரை, இரு சபையிலும் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்படும். இறுதியாக, ஓட்டெடுப்பு நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இதற்கு, இரண்டு பங்கு நீதிபதிகளின் ஆதரவு கட்டாயம் தேவை. முடிவாக, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அவர் தான், நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிடுவார்.

- என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.

அம்மாடியோவ், இவ்வளவு பெரிய வழிமுறைகளா என்று வியந்தேன்.

'அது இருக்கட்டும்... உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாமே...' என்று ஆரம்பித்தார், இன்னொரு, உ.ஆ.,

'அதுபற்றி பேசக்கூடாது. நாம் ஏதாவது சொல்ல போய், அவதுாறு வழக்கு போட்டுட போறாங்க...' என்று அலறினார், மூத்த செய்தியாளர்.

'சரி... சரி... வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வேண்டாம். நீதிமன்றங்களின் வரலாறு பற்றி சொல்லுங்களேன்...' என்று உ.ஆ., கேட்டதும், தொடர்ந்தார், மூத்த செய்தியாளர்:

இந்திய உச்ச நீதிமன்றம், மிக உயர்ந்த அரசியலமைப்பு மற்றும் இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றமாக விளங்குகிறது

* அக்டோபர் 29, 1954ல், இந்தியாவின் முதல் ஜனாதிபதியான பாபு ராஜேந்திர பிரசாத், உச்ச நீதிமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டினார். இந்தோ-பிரிட்டன் கட்டடக்கலை பாணியில் எழுப்பப்பட்டது

* ஆரம்பத்தில், ஆண்டுக்கு, 28 நாட்கள் மட்டுமே நீதிமன்றம் செயல்பட்டது. இன்று ஆண்டுக்கு, 190 நாட்கள் செயல்படுகிறது

* நீதிமன்ற வளாகத்தின் முன்பகுதி புல் வெளியில், கருப்பு வெண்கலத்தால் ஆன, கையில் புத்தகத்துடன் இருக்கும் ஒரு பெண்ணின் சிலை, பிப்ரவரி 20, 1980ல் நிறுவப்பட்டது

* அந்த பெண், இந்தியக் குடியரசை பாதுகாக்கும் தாயாகவும், கையில் இருக்கும் புத்தகம், நாட்டின் சட்டங்களையும், சம நீதியையும் குறிக்கிறது

* உச்ச நீதிமன்றத்தின் பழைய பெயர், 'பெடரல் கோர்ட் ஆப் இந்தியா!'

* உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாத சம்பளம், 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். நீதிபதி ஓய்வு பெற்றபின் கிடைக்கும், 'பென்ஷன்' தொகை, ஒரு ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய்

* நீதிபதி கையில் வைத்து, அவ்வப்போது மேஜையின் மீது தட்டும் மர சுத்தியலின் பெயர், 'கேவல்' எனப்படும். இந்த சுத்தியல், ஓக், மகோனி மற்றும் ரோஸ்வுட் மரத்தால் செய்யப்படும்

* உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது, 65. மாநில நீதிபதிகளின் ஓய்வு வயது, 62

* பொதுவாக, 10 லட்சம் பேருக்கு, 15 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இன்று, 79 லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி தான் இருக்கிறார்

* இந்தியாவின், மிகப்பெரிய உயர் நீதிமன்றம், அலகாபாத் நீதிமன்றம். இங்கு, 160 நீதிபதிகள் உள்ளனர்

* இந்தியாவில், 28 மாநிலங்கள் உள்ளன. ஆனால், 25 நீதிமன்றங்கள் தான் உள்ளன. ஒரு நீதிமன்றம், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு செயல்படுகிறது

* புதுடில்லி, யூனியன் பிரதேசமாக இருந்தாலும், தனியாக நீதிமன்றம் செயல்படுகிறது

* உயர் நீதிமன்றங்களில் மிக அழகானது என கருதப்படுவது, இரட்டை மாநிலமான, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம். இது, நவம்பர் 1, 1966ல் திறக்கப்பட்டது.

இந்த நீதிமன்றம், 40 அறைகளுடன், அனைத்து வசதிகளும் கொண்டது

* இந்தியாவின், மிகச்சிறிய உயர் நீதிமன்றம் சிக்கிம் மாநிலத்திலுள்ள, நீதிமன்றம். இங்கு, மூன்று நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்

* அசாம் மாநில உயர் நீதிமன்றம், நாகாலாந்து, மிஜோரம் மற்றும் அருணாச்சல பிரதேசங்களின் வழக்குகளை கையாளுகிறது

* இந்தியா முழுவதும், 23,790 நீதிபதிகள் உள்ளனர்.

- என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.

'அப்பாடா... இவ்வளவு விஷயங்களா...' என, ஆச்சரியமானார், உ.ஆ.,

'எல்லாம் சரிதான்... ஆனாலும், லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளதாக செய்தி வருகிறதே...' என்றார், லென்ஸ் மாமா.





மூக்கு கண்ணாடி கடை வைத்திருக்கும் ஒருவர், வேலை விஷயமாக வெளியில் கிளம்பும்போது, தன் மகனை கடையை பார்த்து கொள்ள சொன்னார்.

'யாராவது விலை கேட்டால் என்ன சொல்வது?' என்று, தன் அப்பாவிடம் கேட்டான், மகன்.

'யாராவது வந்து கண்ணாடி எவ்வளவு என்று கேட்டால், 400 ரூபாய் என்று சொல். அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை என்றால், ஒரு லென்ஸ்க்குத்தான், 400 ரூபாய், இரண்டு லென்ஸ்க்கும் சேர்த்து, 800 ரூபாய் என்று சொல். அப்போதும், எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை என்றால், லென்ஸ்க்கு மட்டும் தான் இந்த விலை. ப்ரேமுக்கு தனியாக, 400 ரூபாய் என்று சொல்...' என்றார், அவனது அப்பா.

இப்போது புரிகிறதா வியாபார யுக்தி!

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us