தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா கே

கோவை கல்லுாரி ஒன்றில், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவி அவர்.

சென்னையில் வசிக்கும் பெற்றோர் வீட்டுக்கு வரும்போதெல்லாம், என்னையும் சந்திப்பது வழக்கம்.

அன்றும், முன்கூட்டியே தகவல் தெரிவித்து, என்னை சந்திக்க அலுவலகம் வந்திருந்தார்.

லென்ஸ் மாமா கேபினை எட்டிப்பார்த்து, 'மாமா இல்லையா?' என்று அக்கறையுடன் விசாரித்தார்.

'மாமா, வெளியே போயிருக்கிறார். நீ வரும் தகவலை அவருக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளேன். (இது போல் வாசகியர் வரும்போது, தனக்கு சொல்ல வேண்டும் என்று மாமா, எனக்கு கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்.) 'லஞ்ச்' உன்னுடன் தான் சாப்பிட போவதாகவும், காத்திருக்கும்படியும் சொல்லி, சென்றுள்ளார்...' என்றேன், நான்.

'மாமாவுக்கு தான் என் மீது எவ்வளவு அக்கறை மணி, ஒருநாளாவது இப்படி சொல்லியிருக்கீங்களா?' என்று கோபித்துக் கொண்டார், வாசகி.

'மாமா போல் எனக்கு பேச வராது...' என்று கூறி, அவரை பற்றி விசாரித்தேன்.

தன் கல்லுாரி மற்றும் படிப்பு பற்றியெல்லாம் சொல்லியவர், 'மணி... ஒரு விஷயத்தை பற்றி சொல்லியே ஆகணும்...' என்று ஆரம்பித்தார்:

கோவையில், கல்லுாரி மாணவியரிடையே சமீபகாலமாக, ஆங்கில நாவல்கள் படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், புத்தக வடிவில் அல்ல; 'வாட்பாட்' என்ற வலைதளத்தில் வெளியாகும் ஆங்கில நாவல்களை படிக்கும் மோகம் அதிகரித்துள்ளது. படிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பது வரவேற்கதக்கது தான். ஆனால், ஆங்கில நாவல்களில் வெளிப்படும் கருத்துத்தான் கண்டனத்துக்குரியது, என்றவர், சிறிது இடைவெளி விட்டார்.

அவருக்கு, டீ வரவழைத்துக் கொடுத்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தேன். தொடர்ந்தார், வாசகி: அந்நாவல்களில் வரும், 'ஹீரோ'கள் அனைவருமே, கோடீஸ்வரர் வீட்டு பிள்ளைகளாக இருப்பர். பெண்களை இரக்கமில்லாமல் கட்டுப்படுத்தும் தன்மையுள்ள முரட்டு இளைஞர்களாகவும் இருப்பர். கதாநாயகிகளோ, உலகமே தெரியாத, அமைதியான, ஒவ்வொன்றுக்கும் நாயகனை சார்ந்திருப்பது போல் அமைந்திருக்கும்.

இக்கதைகள் அனைத்தும், ஆணாதிக்கத்தையும், காமத்தையும் பிரதானமாக கொண்டிருக்கிறது. இதைப் படிக்கும் பெண்கள், நிஜ வாழ்க்கையிலும் தங்களை அடக்கி ஆளும் முரட்டுத்தனமான, பணக்கார ஆண்கள் தான், தங்களுக்கு கணவராக வர வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி கருதும் பல பெண்களை கண்கூடாக பார்த்தும், கேட்டும் உள்ளேன்.

இந்நாவல்களில், பெண் என்பவள், ஆணைவிட எல்லா விதத்திலும் தாழ்ந்தவள் போலவும், அவன் காட்டும் வன்முறை தான், அன்பு என்பது போலவும் எழுதப்பட்டுள்ளன.

அதாவது, 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நம் தமிழ் நாவல்களில் இப்படிப்பட்ட கருத்துகள் தான் மேலோங்கி இருந்துள்ளது என, என் அம்மா சொல்ல கேட்டுள்ளேன்.

ஜெயகாந்தன், ஜானகிராமன் போன்ற சில புரட்சிகர கருத்துகளை வெளிப்படுத்தும் எழுத்தாளர்கள் வந்த பிறகே, இந்நிலை மாறியது என்றும் சொல்லியிருக்கிறார், என் அம்மா.

இந்த ஆங்கில நாவல்கள், அந்த கால நாவல்களையே கொஞ்சம் மாற்றி, புது மொந்தையில் தருகின்றன.

இந்நாவல்களை படிக்கும் இளம் பெண்களில் சிலர், 'நாம் வேலைக்கு போக வேண்டாம்; பணக்கார கணவன் கிடைத்தால் போதும்...' என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர்...' என்று அச்சம் தெரிவிக்கின்றனர், சமூக ஆய்வாளர்கள்.

இப்படி கூறி முடித்தார், வாசகி.

அருகில் இருந்த உதவி ஆசிரியை ஒருவர், 'இவர் சொல்லும் ஆங்கில நாவல்களை, அச்செயலியில் நானும் படித்துள்ளேன். இவர் சொல்வது அனைத்தும் உண்மை. இத்தகைய நாவல்களை தடை செய்ய வேண்டும். ஆனால், சமூக வலைதளங்களுக்கு எந்த, சென்சாரும் இல்லையே?

'ஒரு ஆணின் பணமோ, முரட்டுத்தனமோ தங்களுக்கு பாதுகாப்பு தந்துவிடாது. சுயமரியாதையும், பொருளாதார சுதந்திரமுமே பெண்களுக்கு கவசமாக இருக்கும். கற்பனை உலகில் உலாவி, நிஜ வாழ்க்கையில் கோட்டை விடாமல் இருக்க, இளம் பெண்கள் தான் உறுதியாக இருக்க வேண்டும்...' என்றார், உ.ஆ.,

'மணி... உங்களுக்கு அந்த கதை ஒன்றை காப்பி செய்து அனுப்புகிறேன். படித்துப் பார்த்து, உங்கள் கருத்தை கூறுங்கள்...' என்றார், மாணவி. ஆமோதிப்பதாக தலையசைத்தேன்.

அப்போது, உள்ளே வந்த லென்ஸ் மாமா, 'பேசி முடிச்சுட்டீங்களா? ரொம்ப பசிக்குது. சாப்பிட போலாமா?' என்று அழைத்தார். 'நான் வரவில்லை...' என்றதும், மாணவியுடன் கான்டீன் நோக்கி சென்றார், லென்ஸ் மாமா.



'சின்னச் சின்ன மலர்கள்!' நுாலில், முன்னாள் முதல்வர், கருணாநிதி கூறிய நகைச்சுவை துணுக்குகள்: மா லையில் வீடு திரும்பிய கணவனைப் பார்த்து மனைவி சொன்னாள்: அத்தான், உங்களை எதிர்நோக்கி, கதிரவன் வரவு பார்க்கும் கமலம் போல் காத்திருந்தேன்! அதற்கு அவன் சொன்னான், 'கமலம், கதிரவனைக் கடைக்கு அழைப்பதில்லையே!'

* 'படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்' என்பது, பழமொழி. 'படிப்பது கட்டபொம்மன் நுால், பிடிப்பது எட்டப்பனுக்கு வால்!' என்பது, புதுமொழி

* மளிகைக்கடையில், பொருட்கள் வாங்கும் சாதாரணப் பேர்வழி கொஞ்சம் உளுந்தை எடுத்து தன் கூடையில் போட்டுக் கொண்டால், அது திருட்டு. கடைக்காரன், முக்கால் கிலோவை, முழு கிலோவாக அளந்தால் அது, வியாபாரத் தந்திரம்

* சாதாரண மனிதன் பொய் சொன்னால், அது பஞ்சமா பாதகம். வக்கீல் சொன்னால், அது திறமை

* குடிசையில் வாழும் குப்பன் குடித்துவிட்டு ஆடினால், அவனுக்கு குடிகாரப் பட்டம். அதே காரியத்தை பெரிய மனிதர் என்று பேசப்படுவோர் செய்தால், 'என்ஜாய்மென்ட்!'

* சோம்பேறி கனவு காணும்போது கூட, கடைக்காரனைப் பார்த்து, 'உரித்த வாழைப்பழம் இருந்தால் கொடு...' என்பது போல தான் கனவு காண்பான்

* காதலுக்கு கண்ணில்லை என்பது காதல் மொழி. காதலிப்பவர்கள் தான் கண்ணை மூடிக்கொண்டு காதலிப்பர். ஆனால், ஊரார் கண்கள் எல்லாம் அவர்கள் மீதே இருக்கும்!

கவிஞர் கண்ணதாசன் வெளியூர் செல்ல புறப்பட்டு கொண்டிருந்த சமயம். கருணாநிதியை சந்தித்து, 'நான் சிங்கப்பூர் போகிறேன். என்ன வாங்கி வர வேண்டும்...' என்றார்.

அதற்கு, 'நல்ல பெயர் வாங்கிட்டு வாங்க...' என்று, கருணாநிதி கூற, அதிர்ந்து சிரித்தார், கண்ணதாசன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us