PUBLISHED ON : ஏப் 12, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன் தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
சித்ரா லட்சுமணனின், 'திரைக்கதிர்' இதழுக்காக, கண்ணதாசனிடம், 'விபசார குற்றங்களில், பெண்ணைத்தான், விபசாரி என்று விமர்சிக்கிறோம். விபசாரத்திற்கு துணை போகும் ஆண்களை ஏன் விமர்சிப்பதில்லை?' என்று கேள்வி கேட்டேன். அ தற்கு, 'ஆண் - பெண் இருவருக்கும் இதில் பங்கு உண்டு. சங்ககாலம் தொட்டு பெண்ணைத் தான் நாம் குற்றவாளி என்கிறோம். விபசாரி என, ஒரு பெண்ணை விமர்சிக்கும் போது, விபசாரத்தில் அவருடன் பங்கேற்றவனை விபசாரன் என, சொல்ல மறுக்கிறோம். ஆனால், முதல் குற்றவாளி ஆண் என்பதே என் கருத்து...' என, பதில் சொன்னார், கவியரசர் கண்ணதாசன்.
என் கேள்விக்கு, ஐம்பது ரூபாய் பரிசு அளித்திருந்தது, 'திரைக்கதிர்' இதழ்.
அரசியல்வாதியான, ப.நெடுமாறன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் என்ற கட்சியைத் துவங்கினார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற துவக்க விழாவுக்கு, கவியரசர் கண்ணதாசன் வந்தார். விழா மேடையிலிருந்து அவர் கீழே இறங்க, அருகே நின்ற என் தோளில் கைவைக்க, அவர் கீழே இறங்க உதவினேன். அப்போது அவரிடம், 'திரைக்கதிர்' இதழில் நான் எழுதிய கேள்வியையும் அவர் தந்த பதிலையும் நினைவுபடுத்த, கவியரசருக்கும் மிகவும் மகிழ்ச்சி.
' தம்பி நீ கேட்ட கேள்விக்கு இன்னைக்கு வரை என்கிட்ட முழுமையான பதில் இல்லை. எனக்கு எப்பவும் மறக்கமுடியாத கேள்வி...' என கவியரசர் சொன்னது, எனக்கு மகிழ்ச்சியளித்தது.
மதுரைக்கு திரையுலகம் சார்ந்து எந்தப் பிரபலங்கள் வந்தாலும் பார்த்து பேட்டி எடுப்பது என, என் பணி படிப்போடு சேர்ந்து மாறியது.
கடந்த, 1981ம் ஆண்டு,- ஜனவரி 4 முதல் ஜனவரி 10ம் தேதி வரை மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் திடலில் பிரமாண்டமான கூட்டம். மத்தியில் பிரதமராக இருந்த இந்திராவும், தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், அரசியல் ரீதியாக பிரிந்திருந்த நேரம். அவர்கள் இருவரையும் இணைத்து வைத்தது இந்த தமிழ் மாநாடு.
உலகத் தமிழ் மாநாட்டில், 700 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான மலர் வெளியிடப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தான் மலர் குழு தலைவர். மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த கருத்தரங்குக்கு, அப்போதைய முதல்வர், எம்.ஜி.ஆர்., மனைவி வி.என்.ஜானகியுடன் பார்வையாளராக வந்து அமர்ந்து விட்டார். நம்மோடு முதல்வர் உட்கார்ந்து விட்டார் என, தெரிந்து கூட்டம் ஆர்ப்பரித்தது.
எ ம்.ஜி.ஆரே உட்கார்ந்த பின் மற்றவர்கள் சும்மா இருப்பரா! சத்தியவாணி முத்து, நெடுஞ்செழியன் எல்லாரும் வந்து உட்கார்ந்து, விழா கருத்தரங்கை ரசித்தனர்.
மாநாட்டின் இறுதி நாள், மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து, மக்கள் வெள்ளத்தில் நீந்தி மாநாட்டு திடலை அடைந்தார், அப்போது, பிரதமராக இருந்த இந்திரா.
மாநாட்டில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, 'காவிரி தந்த கலைச் செல்வி' என்கிற நாட்டிய நாடகம், ஜெயலலிதாவின் பரத நாட்டியம் இடம்பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின், ஜெயலலிதா வெளியே தலைகாட்டியது இந்த மாநாட்டில் தான். அமைச்சர் ஆ ர்.எம்.வீரப்பன் தான் நாட்டிய நிகழ்ச்சியை ஒருங்கிணைந்திருந்தார். 'உன்னதம்' இதழில் ஜெயலலிதாவின், 'செகன்ட் இன்னிங்ஸ்' என, நான் எழுதினேன்.
' உன்னதம்' இதழுக்குப் பின், 'உங்கள் விசிறி' என்ற பத்திரிகை நடத்தினேன். 'உன்னதம்' இதழில், நடிகர், சிவாஜி பேட்டி வெளிவந்ததால் விளம்பரங்களை கொடுக்க ஆரம்பித்தனர், வியாபாரிகள். இருந்தாலும், தொடர்ந்து, 'உன்னதம்' இதழை நடத்த முடியாமல் நின்று போனது. நண்பர் மார்ஷல் முருகன் துணையோடு, 'உங்கள் விசிறி' இதழை நடத்தினேன்.
மதுரைக்கு, ரிஷிமூலம் திரைப்படத்தில், சிவாஜியுடன் நடித்த நடிகர், சக்ரவர்த்தி வந்தபோது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பெரியகுளம் தான் இவரது சொந்த ஊர். தேனியில் நடந்த படப்பிடிப்புக்குப் போகும் வழியில் அவரைப் பார்த்தேன். ரிஷிமூலம் படத்திற்குப் பின், நிறைய படங்களில், 'ஹீரோ'வாக நடித்தார், சக்ரவர்த்தி.
இயக்குனர், ஜோதி என்பவர், குங்குமக் கோலங்கள் என்று ஒரு படம் எடுத்தார். இதற்கு இசை, ஸ்டாலின் வரதராஜன். இவர், இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனின் மூத்த மகன். மதுரையில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவார். அவரைப் பத்திரிகைக்காக அடிக்கடி சந்திக்க, மிக நெருக்கமான நண்பராக மாறிவிட்டார். அப்படி ஒரு தடவை அவருடன் போகும் போது, படப்பிடிப்பில் விஜயகாந்தை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. விஜயகாந்திடம் என்னை பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார், ஸ்டாலின் வரதராஜன்.
இளையராஜாவின் ஊரான, பண்ணைபுரத்துக்கு ஸ்டாலின் வரதராஜனுடன் சென்று இளையராஜாவின் அம்மாவை சந்தித்து பேசினேன். சாதாரண விவசாயப் பெண்மணி போல பேசினார். சினிமா பார்க்கிறது ரொம்ப அபூர்வம் என்றவர், 'துணைக்கு யாராவது இருந்தா கூடப் போவேன்...' என்றார்.
நிழல்கள் படத்தில் இடம்பெற்ற, 'பூங்கதவே தாள் திறவாய்...' பாடல் வெளியான நேரம் அது. இதை, இளையராஜாவின் வீட்டில், அவரது அம்மா முன்பாகவே, அப்பாடலை வாசித்துக் காட்டினார், ஸ்டாலின் வரதராஜன். இளையராஜாவின் அம்மாவுக்கு அதைக் கேட்டு அவ்வளவு சந்தோஷம். என்னை வற்புறுத்தி சாப்பிட வைத்தார்.
மதுரையில் இருந்தபடி பத்திரிகையாளராக வளர்ந்து வந்தபோது எனக்கு சென்னைக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை.
மதுரைக்கு, பத்திரிகையாளர், நவீனன் வந்திருந்தார். அவரை பெரியகுளத்தை சேர்ந்த வாசகர், ஷாஜஹான் எனக்கு அறிமுகம் செய்து வைத்து, 'தம்பி நல்லா எழுதுவார். அவரை எப்படியாவது சென்னைக்கு கூட்டிட்டு போங்க'ன்னு சொன்னார். நவீனன், நான் நடத்திய இதழ்களைப் பார்த்துவிட்டு, 'ரொம்ப அருமையா இருக்கு. சென்னைக்கு வந்து வேலை பார்க்க முடியுமா?' என கேட்க, தலையாட்டினேன்.
நானும், நண்பன் லியோவும் ஒரு நாள் சென்னைக்கு கிளம்பிவிட்டோம். அவனுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை. எனக்கு திரைப்பட இயக்குனராக ஆசை. சென்னை வந்து இருவரும் சினிமா வாய்ப்பு தேடும் போது, ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பலரையும் சந்திக்க நேர்ந்தது.
'சினிமா வாய்ப்பு வாங்கித் தர்றோம்...' என, காசு பறிப்பவர்களாகவே இருந்தனர். பகுதி நேரமாக எழுத ஆரம்பித்தேன். வானொலியில் நடிகை, சுஹாசினி பேசியதை கேட்டு, அப்படியே எழுதி, நவீனனிடம் கொடுத்தேன். அது ஒரு பக்க செய்தியாக, 'பூவாளி' இதழில் வெளியானது. ஆறு மாத காலம் பகுதிநேர பத்திரிகையாளராகவும், உதவி இயக்குநருக்கு வாய்ப்பு தேடுபவனாகவும் என் பயணம் தொடர்ந்தது.
- தொடரும்
- ஆர். பிரபாகரன்
