
வாழு வாழ வை!
சமீபத்தில், நண்பரின் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அவர் சிறு மளிகை கடை வைத்து படிப்படியாக முன்னேறி, இன்று நகரில் மூன்று மற்றும் வெளியூரில், இரண்டு, 'டிபார்ட்மென்ட்' ஸ்டோர் வைத்து, பெரும் வணிகராக, கோடீஸ்வரராக வளர்ந்துள்ளார்.
இருந்தபோதும், ஆரம்பநிலையை மறப்பதில்லை. அவர் காரில் சென்றாலும், என்னைப் போன்று சைக்கிளில் செல்லும் தெரிந்த சிறுவியாபாரிகள் எதிரில் வந்தால், காரை நிறுத்தி, இறங்கி வந்து நலம் விசாரித்து, உடன் சாப்பிட்டு அல்லது சாப்பிட ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு தான் செல்வார்.
அவரது மகளின் திருமண விழாவில், சிறு வியாபாரிகள் முதல் பெரும் வணிகர்கள் வரை வந்து மணமக்களை வாழ்த்தினர். மொய் வாங்கவில்லை. மாறாக தாம்பூல பை வழங்கும் இடத்தில் இரண்டு ஸ்டால்கள் போட்டு, சிறு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை எப்படி பெருக்குவது, எப்படி வங்கி கடன் பெறுவது மற்றும் தானும் ஒரு பங்களிப்பு தொகை தரும் உறுதியளிப்பு அடங்கிய ஒரு கையேட்டையும் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.
தான் மட்டும் முன்னேறினால் போதும், பொருளாதாரத்தில் நமக்கு கீழ் தான் மற்றவர்கள் இருக்க வேண்டும் என்ற பொறாமை மனநிலை கொண்டோருக்கு மத்தியில், தான் வாழ்ந்தால் மட்டும் போதாது பிறரும் வாழ வேண்டும், சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற மனநிலை கொண்ட நண்பரை பாராட்டி வந்தேன்.
- பெ.பொன்ராஜபாண்டி, மதுரை.
ஆசிரியரின் புது முயற்சி!
என்னுடன் பணியாற்றும் ஆசிரிய நண்பர் ஒருவர், 'மாவட்ட தலைநகரில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு செல்வோமா?' என்றார்.
நான், தயங்கினேன். காரணம், கடந்தாண்டு வாங்கிய புத்தகங்களே இன்னும் படித்து முடிக்கப்படாமல் இருந்தன. என்னை விட அதிக எண்ணிக்கையில் புத்தகம் வாங்கியதாகக் கூறிய அவர் அனைத்தையும் படித்து முடித்து விட்டார் என்றதும், எனக்கு வியப்பு.
இது எப்படி சாத்தியம் என்று கேட்டதற்கு, மாலை அவர் வீட்டிற்கு என்னை வர சொன்னார்.
அங்கு போனபோது, அவருடைய மூத்த மகன் ஒரு அறையில், ஆங்கில நாவலை ஆர்வமுடன் படித்துக் கொண்டிருந்தான். கூடத்தில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் அவரது மகள் ஒரு கட்டுரை புத்தகத்தை சத்தமாக நண்பருக்கும், அவரது மனைவிக்கும் வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். கட்டுரையின் ஒரு அத்தியாயத்தை, பத்து நிமிடத்தில் வாசித்து முடித்ததும் புத்தகத்தை மூடி வைத்து விட்டு, தன் பள்ளி பா டங்களை படிக்கப் போய்விட்டாள், அவர் மகள்.
'இப்படித்தான் நான் தினமும் படிக்கிறேன்...' என்றவர், 'தன் மகனுக்கு பாடப் புத்தகத்தை தாண்டி வாசிப்பு பழக்கமே சிறிதும் இல்லாமல் இருந்தது. அவனை இப்படி தினமும், 10 பக்கம் வாசிக்க சொல்லி, நானும், மனைவியும் கேட்போம். இப்போது அவனுக்கு வாசிப்பு பழக்கம் அதிகமாகி, பாடங்களை படித்து முடித்த பிறகு அவனுக்கு விருப்பமான புத்தகங்களையும், நாவல்களையும் படிக்க ஆரம்பித்து விட்டான். அவனைப் போல், இப்போது பள்ளியில் படிக்கும் மகளையும் தினமும் கால் மணி நேரமாவது வாசிக்க சொல்லி கேட்டு, அனைத்து புத்தகங்களையும் படிப்படியாக படித்து முடித்து விடுகிறோம். இது தான் அந்த ரகசியம்...' என்றார்.
மேலும், 'பாட புத்தகத்தை தாண்டி வாசிப்பு பழக்கம் இருப்பதால் பொது அறிவில் என் மகனும், மகளும் சிறந்து விளங்குவதாக அவர்களது ஆசிரியர்கள் கூறுவது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது...' என்று கூறினார், நண்பர்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த அவரை பாராட்டினேன். இனி, நானும் அப்படியே செய்வது என, முடிவு செய்துள்ளேன்.
- எம். முத்துகுமார், கரூர்.
நல்லதொரு ஏற்பாடு!
தோழியின் ஊர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு சென்றிருந்தேன். விழாவிற்கு செல்லும் வழியில், தெருக்களில் சில இளைஞர்கள் கையில் தடியுடன் வலம் வந்தபடி இருந்தனர்.
அதுகுறித்து தோழியிடம் கேட்டேன். அதற்கு, 'கோவில் விழாவின்போது, ஊர் மக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று விடுவர். அப்போது, திருடர்கள் வீடுகளில் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த சம்பவங்கள் இங்கு பலமுறை நடந்துள்ளன. அத்தகைய பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, விழா கமிட்டியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கல்லுாரி மாணவர்களை அழைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி விட்டனர். இதனால், வீடுகள் வெறிச்சோடியிருந்தாலும் திருடர்கள் வர வாய்ப்பில்லை.
இந்த பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக, ஊர் மக்கள் அனைவரும் நிம்மதியாக கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிகிறது...' என்றாள்.
விழா கமிட்டியினரை பாராட்டினேன்.
- அ.மீனாட்சி, கன்னியாகுமரி.

