PUBLISHED ON : மே 03, 2026

பா - கே
நீண்ட இடைவெளிக்கு பின், நானும், லென்ஸ் மாமாவும் சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள, குதிரையேற்ற பயிற்சி மையமான, 'மதராஸ் ரைடிங் ஸ்கூல்' பக்கம் சென்றிருந்தோம். குதிரையேற்ற பயிற்சி பெறுவதற்காக, நாங்கள் அடிக்கடி அங்கு சென்றிருக்கிறோம். பயிற்சி முடிந்த பிறகு, அங்கு போவதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை. 'உள்ளே போய் ஒரு, 'ரவுண்டு' சுற்றிப்பார்த்துட்டு வருவோம், மணி...' என்றார், மாமா. எனக்கும் அந்த ஆவல் இருந்ததால், உடனே சம்மதித்தேன். அனுமதி பெற்று, உள்ளே சென்று பார்த்ததில், நாங்கள் பயிற்சி பெற்ற குதிரையை காணவில்லை; பயிற்சியாளரும் இல்லை. ஆனால், அன்று பார்த்த, கால்நடை மருத்துவர் இருந்தார். அவரிடம் நலம் விசாரித்தோம். 'நீங்கள் பயிற்சி பெற்ற குதிரைகளும், பயிற்சியாளரும், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். இப்போதுள்ள குதிரைகளை பார்க்கிறீர்களா?' என்று கேட்டு, குதிரைகள் இருந்த பகுதிக்கு எங்களை அழைத்து சென்றார். மைதானத்தில் இரண்டு, மூன்று பேர் குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். குதிரைகள், நன்கு பராமரிக்கப்பட்டு வருவது, அதன் கொழுத்த உடலும், மினுமினுப்பும் பறைசாற்றியது. குதிரைகள் கட்டி வைத்திருந்த இடத்தை சுற்றியும், புதர் மண்டி கிடந்தது. 'இதை சீரமைக்கக்கூடாதா? பாம்பு ஏதாவது இருந்து, குதிரைகளை கடித்து விடாதா?' என்றார், மாமா. 'உம் அக்கறைக்கு மிக்க நன்றி. பாம்பு கடித்தால், நமக்கு தான் ஆபத்து. ஆனால், குதிரைக்கு ஒன்றும் ஆகாது...' என்றார், மருத்துவர். 'நிஜமாகவா? நாக பாம்பு கடித்தால் கூடவா?' என்றேன் ஆச்சரியத்துடன், நான். 'ஆமாம். குதிரைகளுக்கு, பாம்பின் விஷம் ஏன் ஏறாது என்று சொல்கிறேன்...' என்று கூற ஆரம்பித்தார், மருத்துவர்: உலகின் மிக விஷத்தன்மை வாய்ந்த பாம்பு, ஒரு யானையை கூடக் கொல்லக்கூடியது; ஆனால், அதன் கடியிலிருந்து தப்பிப் பிழைக்கும் ஒரே விலங்கு, குதிரை தான்.
ஒரு பாம்பு எவ்வளவு தான் விஷமுள்ளதாக இருந்தாலும், மிகவும் அஞ்சப்படும் ராஜநாகமாக இருந்தாலும் கூட, அதன் கடியால் குதிரை இறப்பதில்லை.
பாம்பு கடித்த பிறகு, குதிரை மூன்று நாட்களுக்கு லேசான உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும். ஆனால், அதன்பின், எதுவுமே நடக்காதது போல அது முழுமையாக குணமடைந்து விடும்.
இயற்கையின் மிகவும் வியக்கத்தக்க அற்புதங்களில் ஒன்று இது. மேலும், மனித உயிர்களை காக்கக்கூடிய விஷமுறிவு மருந்து குதிரைக்குள்ளேயே மறைந்திருக்கிறது.
இந்த விஷமுறிவு மருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, தெரியுமா?
முதலில், பாம்புகளிடமிருந்து நஞ்சு சேகரிக்கப்படுகிறது. அந்த நஞ்சிலிருந்து மிகச்சிறிய அளவு குதிரையின் உடலில் செலுத்தப்படும்.
குதிரையின் நோய் எதிர்ப்பு மண்டலம் இதற்கு பதிலளித்து, அந்த நஞ்சின் வீரியத்தை முறியடிப்பதற்காக, 'ஆன்ட்டிபாடிஸ்' என, ஆங்கிலத்தில் சொல்லப்படும், எதிர்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு பிறகு, இந்த எதிர்ப்பொருட்கள் குதிரையின் ரத்தத்தில் நிறைந்திருக்கும்.
பின்னர், குதிரையிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, அதிலுள்ள சிவப்பு ரத்த அணுக்கள் நீக்கப்படும். ரத்தத்திலுள்ள, 'பிளாஸ்மா' (ரத்தத்தின் வெள்ளை நிறப் பகுதி) பதப்படுத்தப்பட்டு, விஷ முறிவு மருந்தாக மாற்றப்படுகிறது.
விஷப் பாம்புக்களால் கடி பட்ட மனித உயிர்களை காப்பதற்காக, இந்த விஷ முறிவு மருந்து அவர்களுக்கு செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் மட்டும், ஏராளமான விஷ முறிவு மருந்து உற்பத்தி மையங்கள் உள்ளன. இந்த உயிர்காக்கும் மருந்தை உற்பத்தி செய்வதற்காக, அங்கே, நுாற்றுக்கணக்கான குதிரைகள் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கப்படுகின்றன.
இந்த சாதுவான விலங்கின் உதவியால் தான், பூமியிலேயே மிகவும் ஆபத்தான விஷ பாதிப்புகளிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம்.
குதிரைகள் மட்டும் இல்லாவிட்டால், பாம்புக்கடியால் எத்தனையோ மனித உயிர்கள் பலியாகியிருக்கும்.
- என்றார், மருத்துவர். 'அடடா... இந்த விஷயம் இதுவரை தெரியாமல் போய்விட்டதே?' என்றார், லென்ஸ் மாமா. 'இங்கு வந்ததற்கு, ஒரு நல்ல, 'மேட்டர்' கிடைத்தது...' என்று கூறி, மருத்துவரிடம் விடைபெற்று, அங்கிருந்து திரும்பினோம்.
ப
பெருந்தலைவர் காமராஜர் சிறுவயதில், நாடகத்திலும் நடித்திருக்கிறார். நாடகத்தில், அவர் நடிக்கும்போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. அவர் நடித்த நாடகத்தின் பெயர், 'மார்கண்டேயன்!'
மார்கண்டேயன் கதை, நம்மில் பலரும் அறிந்திருப்பர். 16 வயது வரை தான் அவனுக்கு ஆயுள் என்பது விதி. அதன்பிறகு, அவனை, எமதர்ம ராஜா பிடித்துக்கொண்டு போய் விடுவார். நாடகத்திலே, காமராஜருக்கு, சிவபெருமான் வேடம். மார்கண்டேயனாக நடிக்கும் ஒரு பையன், எமனாக நடிக்கும் ஒரு ஆள், சிவபெருமானாக நடிக்கும் காமராஜர் ஆகிய மூவரும் வருவது போன்ற காட்சி.
நாடக கதையின் படி, மார்கண்டேயனுக்கு, 16 வயது முடிந்து விட்டது. எமதர்மராஜா, மார்கண்டேயனை பிடித்து போக, பாசக் கயிறோடு வரும்போது, மார்கண்டேயன், சிவபெருமான் காலில் விழுந்து, 'என்னை காப்பாற்றுங்கள்...' என்று சொல்லி கெஞ்சுவான். சிவபெருமான் அந்த, எமனை விரட்டி அடித்து, அந்தப் பையனை காப்பாற்றுவார். இதுதான் கதை.
அந்தக் கதைப்படி போயிருந்தால் பிரச்னை எதுவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே, ரொம்ப மனித நேயம் உள்ளவர், காமராஜர்.
எமதர்மராஜா பாசக்கயிறை பிடித்தபடி வருகிறார். சிவபெருமானாக நடித்த, காமராஜர் காலை, பிடித்து கொள்கிறான், மார்கண்டேயன். கொஞ்சம் வசனம் பேசி முடிந்தவுடனே சிவபெருமான், எமதர்மராஜாவிடம், 'நீ அந்தப் பையனை தொடக்கூடாது. என்னை நம்பி வந்திருக்கிறான். அவனை விட்டுவிடு...' என்று வசனம் பேசுவார், காமராஜர்.
எமதர்மராஜாவாக நடித்தவர், ஏற்கனவே ஒரு மூர்க்கமான ஆள். வசனத்தின்படி, உடனே அவர் மார்கண்டேயனை விட்டு போயிருக்க வேண்டும். ஆனால், என்னவோ தெரியவில்லை, அந்தப் பையனை, மூர்க்கமாக தாக்கி, பிடித்து இழுக்கப் போனார். உடனே, சிவபெருமானாக வேடமணிந்த, காமராஜருக்கு இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அது நாடகம் என்பதையும், நடிப்பு என்பதையும் மறந்து, சிறுவனை, ஒரு முரட்டு ஆள் அடிக்க வருகிறானே என்ற எண்ணம் தான் அப்போது, காமராஜர் மனதில் இருந்தது.
ஏனென்றால், தீமையைக் கண்டு பொங்கி எழுகிற மனோபாவம் எப்போதுமே அவரிடம் இருந்தது. உடனே, எமனாக நடித்தவரை ஓங்கி ஒரே தள்ளாக கீழே தள்ளிவிட்டார்.
'நான் சொல்லிட்டே இருக்கிறேன். அந்தப் பையனை ஒன்றும் செய்யாதேன்னு. திரும்பவும் அந்த பையனை தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்கிறீயே. உனக்கு மனிதாபிமானம் இல்லையா?' என்று, எமனை திட்டித் தீர்த்தார், காமராஜர்.
நாடகம் பார்த்தவர்கள், கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
