தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரைநட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (5)

திரைநட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (5)

திரைநட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (5)


PUBLISHED ON : மே 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன் தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்

திரைப்படப் படப்பிடிப்பு தளங்களில் செய்தி சேகரித்து நான் அவ்வப்போது எழுதி வந்ததால், வெளிப்புற படப்பிடிப்புக்கு என்னை அழைத்து இருந்தார், படத்தயாரிப்பு மக்கள் தொடர்பாளரான, சித்ரா ராமு. ஊட்டியில் படப்பிடிப்பு. நடிகர் கார்த்திக், நடிகை ராதா இருவரும் நடிக்க, பிரபல படத்தொகுப்பாளர். என்.வெள்ளைச்சாமி இயக்கிய படம், நேரம் வந்தாச்சு.

என்னுடன் பிரபல பத்திரிகையாளர்கள், நவீனன் மற்றும் சுரா வந்திருந்தனர். கார்த்திக், ராதா நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. கவிஞர் வாலி எழுதிய, 'காதல் மந்திரத்தில் தந்திரத்தில்...' எனத் தொடங்கும் பாடல் அது. படப்பிடிப்பு இடைவேளையின் போது, என் கையில், 'தாய்' வார இதழ் இருந்தது. கார்த்திக்கிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

என் கையில் இருந்த இதழை கேட்டு வாங்கிய, கார்த்திக் அட்டைப் படத்தை உற்றுப் பார்த்தார். அட்டையில் நடிகை, ஜெயப்பிரதாவின் படம் வெளியாகி இருந்தது.

'இவங்க, எவ்வளவு, 'ப்யூட்டிபுல்.' பார்த்துகிட்ட இருக்கலாம்...' என்று சிலாகித்தார். கார்த்திக்.

'நீங்களும், ராதாவும் ராசியான ஜோடி என்பதால், இதிலும் சேர்ந்து நடிக்கிறீங்களா?' என்றேன்.

அவர் சிரித்தபடி, 'இருக்கலாம்...' என்றார். இந்த படத்தில், நிருபர் கேரக்டரில் நடிப்பதாக சொன்னார், கார்த்திக். வாழ்த்து சொன்னேன். படத்தின் டான்ஸ் மாஸ்டரான, புலியூர் சரோஜா நடன அசைவுகள் சொல்ல. பாடல் படமாக்கப்பட்டது.

உணவு இடைவேளையின் போது. படத்தின் இயக்குளரான, வெள்ளைச்சாமியிடம், 'படத்தொகுப்பில் ஓய்வின்றி வேலை பார்க்கும் உங்களால், எப்படி படப்பிடிப்பிலும் கவனம் செலுத்த முடிகிறது? என்றேன்.

'இவரைப் போன்ற துடிப்பான இளைஞர்கள் என்னுடன் இருப்பது எனக்கு பலம்...' என்றார். தன் அருகிலிருந்தவரை சுட்டிக்காட்டி. அவர் அறிமுகம் செய்த அந்த இளைஞர், ஆர்.வி.உதயகுமார்.

பின்னாளில், இயக்குனராகி பல வெற்றி படங்களை தந்தவர். உதவியாளராக அங்குமிங்கும் ஒடிக் கொண்டிருந்தார்.

'காதல் மந்திரம் போட்ட கார்த்திக்!' என்ற தலைப்பில், நான் சேகரித்த செய்தியை எழுதிக் கொடுத்தேன். கவிஞர் மு.மேத்தா இதில் பாடல் எழுதியதாக கேள்விப்பட்டு, சென்னை திரும்பியதும், அவர் பணிபுரிந்த, மாநில கல்லுாரிக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்னேன். திரைப்பட பாடல் எழுத, மு.மேத்தா பெரிதாக அலைய மாட்டார். மனோபாலா இயக்கிய ஆகாய கங்கை என்ற படத்திலும், மு.மேத்தா பாட்டு எழுதி இருந்தார். கார்த்திக், சுஹாசினி நடித்த படம் இது. 'தேனருவியில் மறைந்திடும் மலரோ...' என்று அந்தபாடல், இன்றும் மறக்க முடியாத பாடலாக இருக்கிறது.

இயக்குநர், மனோபாலா அப்போது, ஆழ்வார்பேட்டையில் சீதம்மா காலனியில் குடியிருந்தார். ஒருநாள் என்னை, மனோபாலாவிடம் அறிமுகம் செய்து வைத்தார், மு.மேத்தா. அவர் மூலம், எனக்கு சினிமா சார்ந்த நட்பு வட்டம் விரிவானது.

அலுவலகத்தில், எனக்கு திரைப்பட விமர்சனம் எழுதும் வாய்ப்பு வந்தது. ஆரம்பமே அமர்க்களம் தான். மணல் கயிறு படம் பற்றி விமர்சனம் எழுத வாய்ப்பு கிடைத்தது. எஸ்.வி.சேகரின் அறிமுகமும் கிடைத்தது. உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில், எஸ். வி.சேகர், சின்னி ஜெயந்த் உட்பட பலரும் மாலை நேரம் அங்கே சந்திப்போம்.

மணல் கயிறு திரைப்படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்தை அப்படத்தின் இயக்குநர், விசு அடிக்கடி சொல்லிக் காட்டுவார்.

இயக்குனர், ராம.நாராயணன் ஒரே சமயத்தில், மூன்று நான்கு படப்பிடிப்புகளை நடத்துவார். உதவியாளர்கள், கோலப்பன், சோழராஜன், குமரேசன், பேரரசு என, தனித்தனி குழுவாக படப்பிடிப்பு நடக்கும். ஒரு பக்கம் பாடல் காட்சி என்றால், இன்னொரு பக்கம், சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சி இருக்கும்.

பெரும்பாலும் கலைஞர்கள், அன்போடு, 'மாமா' என்றே இவரை அழைப்பர். அவரும், மற்றவர்களை, 'மாப்ள...' என்றே அழைப்பார்.

ராம.நாராயணன், மீனாட்சி குங்குமம் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். விஜயகுமார் மற்றும் ஸ்ரீபிரியா நடித்திருந்தனர். காரைக்குடி நாராயனன் தான் இயக்குனர். இப்படத்தை, தயாரித்த போது, கவியரசர் கண்ணதாசனை அணுகி ஒரு பாடல் எழுதி தரும்படி கேட்டனர். அவரும் எழுதித் தந்தார். 'உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?' என்று, கவியரசரிடம் கேட்டனர். 'நான் கேட்டதை எல்லாம் உங்களால் தர முடியாது. நீ கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்...' என்றாராம், கண்ணதாசன்.

'பட பூஜைக்கு தாங்கள் அவசியம் வர வேண்டும்...' என்றார், காரைக்குடி நாராயணன். எத்தனை மணிக்கு பூஜை?' என்று கவிஞர் கேட்சு, 'அதிகாலை 6:40 மணிக்கு...' என்றதும், கவிஞர் சிரித்தபடி, 'அதிகாலையை நான் பார்த்தது இல்ல. வர முயற்சி பண்றேன்...' என்றவர், பூஜை நேரத்துக்கு சரியாக வந்து இறங்கியதை பார்த்து, எல்லாருக்கும் ஆச்சரியம்.

'எங்கள் படத்துக்கெல்லாம் நீங்கள் இப்படி அதிகாலை வருவதில்லையே...' என, பூஜைக்கு வந்திருந்த, ஏ.வி.எம். சரவணன் கேட்க, உடனே, கண்ணதாசன், 'காரைக்குடியில் இருந்து வந்தவர் இயக்குனர், நாராயணன், தயாரிப்பாளர், ராம.நாராயணன் என்று, காரைக்குடியில் இருந்து எத்தனையோ பேர் சினிமாவுக்கு வந்திருக்கோம். காரைக்குடி ஊர் பெயரை முன்னாடி போட்டு, ஊருக்கு பெருமை சேர்க்கிறதால வந்தேன்...' என்றார், கவிஞர்.

அடுத்து, ராம.நாராயணன் சொந்தமாக தயாரித்து, இயக்கிய படம், அமை. சந்திரசேகர் இதில் கதாநாயகன். கதாநாயகி உஷா. தமிழ் சினிமாவில் வித்தியாசமான சிந்தனைகளோடு வெளிவந்த படம். ஆனால், சரியாக வசூலாகவில்லை.

சுமார், 125 படங்களுக்கு மேல் டைரக்ட் செய்த, ராம.நாராயணன் அவருக்கு பிடித்த படம் என்று அமை படத்தைத் தான் என்று சொல்வார்.



-தொடரும்.

- ஆர்.பிரபாகரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us