PUBLISHED ON : ஜூன் 14, 2026

பா.கே
செய்திப்பிரிவில், உதவி ஆசிரியராக புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார், இளைஞர் ஒருவர். புதிது என்பதால், சங்கோஜப்பட்டு, சற்று ஒதுங்கியே இருப்பார். அவரை, சகஜ நிலைக்கு கொண்டுவர பேச்சு கொடுத்து வந்தனர், மற்றவர்கள்.
அந்த. உ.ஆ., இளைஞனுக்கு, முன் தலையில் சற்று வழுக்கை விழுந்திருக்கும். ஆனால், கருகருவென தாடி, மீசையை அழகாக, 'டிரிம்' செய்து, அவ்வப்போது, சற்று மாறுதல் செய்தும் வருவார்.
'----' அவரது பெயரை குறிப்பிட்டு, 'என்னப்பா, ஒருநாளைக்கு, பாரதியார் போல் மீசையை முறுக்கி விட்டுட்டு வர்றீர்... இன்னொரு நாள், ஹிட்லர் மாதிரி, மூக்குக்கு கீழே வண்டு மாதிரி கொஞ்சமா மீசை வைத்து வர்றீர். இன்னொரு நாள், வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி, கட்ட மீசை வைத்து வர்றீர். தாடியையும், பிரெஞ்ச் தாடி, தாகூர் தாடி என, மாற்றி மாற்றி அலங்காரம் செய்து கொள்கிறீரே... ஏதாவது வேண்டுதலா? என்று கலாய்த்தார், உ.ஆசிரியை ஒருவர்.
அந்த இளைஞர், பதில் சொல்லாமல், வெட்கப்பட்டு, புன்னகைத்தார்.
மனிதர்களின் முக அலங்காரங்களில் மிகவும் தனித்துவமான அடையாளமாக கருதப்படுவது, மீசை. உலகின் பல பகுதிகளில், மீசையை சுற்றி உருவான வரலாறும், பழக்க வழக்கங்களும் மிகவும் சுவாரஸ்யமானது...' என்று, 'திண்ணை' நாராயணன் கூறியதும்,
'வந்துட்டார்யா, தகவல் களஞ்சியம்... நீ வாப்பா...' என்று அந்த இளைஞரை, டீ குடிக்க, வெளியே அழைத்து சென்றார், லென்ஸ் மாமா.
'அந்த பையனை சமாதானப்படுத்தலாம்ன்னா இந்த மாமா, நடுவில் புகுந்துட்டார்...' என்று அலுத்துக் கொண்டார், நாராயணன்.
'நீங்க சொல்லுங்க. நான் கேட்கிறேன்...' என்று, நான் சொன்னதும், கூற ஆரம்பித்தார், நாராயணன்:
வெறும் தோற்ற அலங்காரமாக மட்டுமின்றி, பல நாடுகளின் கலாசாரம், வீர மரபு, சமூக அந்தஸ்து, அரசியல் அடையாளம் மற்றும் ஆண்மையின் குறியீடாகவும், மீசை விளங்கியுள்ளது.
பண்டைய எகிப்தில், பாரோ மன்னர்கள் அணிந்த செயற்கை மீசைகள், அதிகாரத்தின் அடையாளமாக கருதப்பட்டன. ஆண் மன்னர்களுடன், சில பெண் ஆட்சியாளர்களும் கூட, விழாக்களில், உலோகத்தால் செய்யப்பட்ட, போலி மீசைகளை அணிந்ததாக, வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
பண்டைய கிரேக்கத்தில், வீரர்களும் தத்துவஞானிகளும் மீசையை, அறிவும், ஆண்மையும் சேர்ந்த அடையாளமாகக் கருதினர். ஆனால், அலெக்சாண்டர், போரின்போது, எதிரிகள் மீசையைப் பிடித்து இழுக்கக் கூடும் என்பதால், தாடி மற்றும் நீண்ட மீசையை வெட்ட, தன் படை வீரர்களுக்கு உத்தரவிட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்தியாவில், குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் மீசை, பெருமையின் சின்னமாக கருதப்படுகிறது. ராஜ்புத் சமூகத்தில் நீண்ட முறுக்கு மீசை, வீரத்தையும், மரியாதையையும் குறிக்கும்.
இந்திய ராணுவத்தின் சில பாரம்பரிய படைப்பிரிவுகளில், இன்று வரை மீசைக்கு தனித்துவமான மரியாதை வழங்கப்படுகிறது.
துருக்கி நாட்டில் மீசையின் வடிவம், ஒருவரின் அரசியல் மற்றும் சமூக சிந்தனையைக் கூட வெளிப்படுத்தும் என்று, சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிலர் தடித்த மீசையை பாரம்பரிய அடையாளமாக வைத்துக் கொண்டிருக்க, சிலர் மெல்லிய மீசையை நவீன நகர வாழ்க்கையின் குறியீடாகக் கருதுகின்றனர்.
மெக்சிகோ மற்றும் லத்தீன், அமெரிக்க நாடுகளில், புரட்சியாளர் எமிலியானோ சபாட்டாவின் தடித்த மீசை, விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டத்தின் சின்னமாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது.
கடந்த, 19ம் நுாற்றாண்டில், ஐரோப்பாவில், மிகப்பெரிய ஆண்களின் நாகரிகப் போக்காக மீசை மாறியது. பிரிட்டன் ராணுவத்தில், ஒரு காலத்தில், வீரர்கள் கட்டாயமாக மீசை வளர்க்க வேண்டும் என்ற விதியும் இருந்தது.
இங்கிலாந்தை ஆண்ட, விக்டோரியா மகாராணி காலத்தில், மீசை, ஒழுக்கம் மற்றும் அதிகாரத்தின் குறியீடாகக் கருதப்பட்டது. பின்னர், முதல் உலகப்போருக்குப் பிறகு, வாயு முகமூடிகளை சரியாக அணிய வசதியாக, பல படைவீரர்கள் மீசையை சுருக்கத் தொடங்கினர்.
ஜப்பானில், சாமுராய் வீரர்கள் காலத்தில், மீசை மற்றும் தாடி, வீர மரபின் அடையாளமாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில், மேற்கத்திய தோற்றம் பரவியபோது, சுத்தமான முக அலங்காரம் பிரபலமானது.
சீனாவின் சில அரச மரபுகளில், நீண்ட மீசை, ஞானத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இன்றைய உலகிலும், மீசை ஒரு கலாசார சின்னமாகவே தொடர்கிறது.
வெவ்வேறு காலகட்டங்களிலும், நாடுகளிலும், மீசை வெறும் முகமுடி என்ற அளவில் மட்டுமின்றி, அது அடையாளம், அதிகாரம், மரபு, போராட்டம் மற்றும் தனித்துவமான மனித வெளிப்பாட்டின் வரலாற்று சின்னமாகவே இருந்து வருகிறது
என்று, நாராயணன் கூறி முடித்ததும், லென்ஸ் மாமாவும், புது உ.ஆ., இளைஞரும் உள்ளே வந்தனர். 'தம்பி, மீசையின் பராக்கிரமத்தை கேட்காமல் போயிட்டியே! சரி, சரி... மீசை கருகருவென வளர, நல்ல ஐடியா இருக்கு...' என்றார், நாராயணன். 'ஓய், நாணா... நாளைக்கு மீசை முழுக்க, 'ஷேவ்' செய்துட்டு வரச் சொல்லியிருக்கிறேன்...' என்றார், அதிரடியாக, லென்ஸ் மாமா. 'தம்பியை ரொம்ப கலாய்க்காதீங்கப்பா. நாளைக்கு, சிங்கம் படத்தில் நடிகர், சூர்யா வைத்திருப்பது போல், மீசை, தாடியை, 'டிரிம்' செய்துட்டு வாப்பா. உன் முகத்துக்கு அழகாக இருக்கும்...' என்று சமாதானப்படுத்தினார், உ.ஆசிரியை.
ப
வகுப்பில், கர்ணனை பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார், ஆசிரியர்.
'குருவாகிய பரசுராமர், கர்ணன் மடியில் தலைவைத்துப் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு வண்டு, கர்ணனின் தொடையைக் கடித்தது. ஆசிரியருக்கு, துாக்கம் கலைந்து விடுமே என்பதற்காக, தொடையை அசைக்காமல் வலியை பொறுத்துக் கொண்டான், கர்ணன்.
'குருவுக்கு, அவன் செலுத்திய மரியாதையை பார்த்தீர்களா?' என்று ஆசிரியர் சொன்னதும், சட்டென்று ஒரு மாணவன் எழுந்து, 'ஐயா, கர்ணன் வண்டு கடித்த வலியைப் பொறுத்துக் கொண்டதற்கு காரணம், குரு மீதுள்ள மரியாதை அல்ல. கண் விழித்துக் கொண்டால், மீண்டும் பாடம் நடத்தத் துவங்கி விடுவார் என்ற பயம் தான், அதற்கு காரணம்...' என்றான்.
இதைக்கேட்டதும் வகுப்பே, 'கொல்' என சிரித்தது. ஆசிரியர் செய்வதறியாமல் திகைத்தார்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
