தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (11)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (11)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (11)

1


PUBLISHED ON : ஜூன் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட, அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: க டந்த, 1984ல், ஒருநாள் தன் காரில் ஏறச் சொன்னார் ஆசிரியர், வலம்புரி ஜான். எங்கே என்ன என்று கூட நான் கேட்கவில்லை. கார் நேரடியாக போயஸ் கார்டன் உள்ளே சென்று நின்ற இடம், வேதா நிலையம்.

அதுதான், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீடு என்று, எனக்கு அதுவரை தெரியாது.

என்னை வரவேற்பறையில் உட்கார வைத்து, உள்ளே சென்றார், வலம்புரி ஜான். 10 நிமிடங்களுக்கு பின், கையில் காக்கி நிற கவர் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண்ணிடம், 'சிஸ்டர் இவர் பெயர், பிரபு. எங்க, 'தாய்' இதழின் துணை ஆசிரியர். எப்ப வேணும்னாலும் அவர் இங்கே வருவாரு...' என்றார், ஆசிரியர்.

அப்பெண்மணி பெயர், மாலதி என்றும், அவர் தட்டச்சு செய்பவர் என்றும், பிறகு அறிந்து கொண்டேன்.

அலுவலகத்திற்கு வந்து காக்கி கவரில் இருந்து அந்த பேப்பரை வெளியில் எடுத்தார், ஆசிரியர். குண்டு குண்டு கையெழுத்தில், கட்டுரை ஒன்றை ஜெயலலிதாவே எழுதியிருந்தார். எழுதியதை, தனியாக தட்டச்சு செய்தும் கொடுத்திருந்தார். 'அவர் கைப்பட எழுதியது யார் கண்ணிலும் படக்கூடாது. தட்டச்சு செய்து கொடுத்ததை மட்டும், அச்சிடுவதற்கு கொடுத்துவிடு...' என்று உத்தரவிட்டார், வலம்புரி ஜான்.

'எனக்கு பிடித்த புத்தகம், எனக்கு பிடித்த ஊர்!' என்ற தலைப்பில், 'தாய்' இதழில், வாராவாரம் வித்தியாசமான பல தகவல்களை எழுதினார், ஜெயலலிதா. அவர் எழுதிய, ஒவ்வொரு தகவலும் பல புதிய செய்திகளை தந்தன. பெரும்பாலும், ஜெயலலிதா எழுதுவதை ஆசிரியரே நேரில் சென்று வாங்கி வருவார். எழுத்து பிழை எதுவும் வராமல், கவனத்துடன் என்னை, பிழைத் திருத்தம் செய்ய சொல்வார். அலுவலகத்தில் இருந்த எல்லாருக்கும் இந்த உத்தரவு பறந்தது.

ஆசிரியர், அலுவலகத்தில் இல்லாத ஒரு நாள் காலை தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியை எடுத்தேன். 'வணக்கம். நான், ஜெயலலிதா பேசுகிறேன்...' என்றது எதிர்முனையில் இருந்து வந்த குரல்.

'வணக்கம்மா, சொல்லுங்க...' என்றேன்.

'யார் பிழை திருத்தம் செய்வது?' என, கேட்டார்.

'நான், ராசி அழகப்பன், சூரியகாந்தன் மற்றும் பழனி பாரதி எல்லாரும் பார்ப்போம்...' என்றேன்.

'நிறைய தவறுகள் இருக்கு. ஒற்றெழுத்துக்கள் விடுபட்டு இருக்கு. இனிமேல், இது மாதிரி பிழைகள் வந்தால், ஒவ்வொரு பிழைக்கும், பத்து ரூபாய் சம்பளத்தில் பிடிக்க சொல்லி விடுவேன்...' என்று சொல்லி, போனை வைத்து விட்டார்.

தமிழில், ஈ.வெ.ரா., அறிமுகப்படுத்திய எழுத்து நடைமுறைக்கு வந்த நேரம். அந்த எழுத்து முறைதான் வரவேண்டும் என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டு, அதன்படி செயல்படுத்தப்பட்ட நேரம். அதை செயல்படுத்திய முதல் நாளிதழ், தினமலர்; வார இதழ்களில், 'தாய்' இரண்டும் தான். ஜெயலலிதாவும் அதையே பின்பற்றினார்.

ஜெ யலலிதா, அ.தி.மு.க., கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, 15 நாட்களிலேயே கொள்கை பரப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

வலம்புரி ஜான் ஏற்கனவே, ஜெயலலிதா வீட்டில் தட்டச்சு செய்து வந்த உதவியாளர், மாலதியை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்ததால், ஜெயலலிதாவுக்கு கட்சி பொறுப்பு வந்ததற்கு வாழ்த்து சொல்லி, என் கடிதத்தை, அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன்.

மறுநாள் காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது, தொலைபேசியில் என்னை அழைத்தார், ஜெயலலிதா.

'உங்கள் வாழ்த்து கிடைத்தது. நன்றி. கடலுாரில் மாநாடு நடக்கிறது. முடிந்தால் வாங்க...' என்றார். அவரே அழைத்த பின் போகாமல் இருப்பேனா! கடலுார் மாநாட்டில், எம்.ஜி.ஆருக்கு வெள்ளி செங்கோல் வழங்கியது அப்போது தான். அந்த செய்தியை, 'தாய்' இதழில் நான் எழுதியதை படித்துவிட்டு, 'ரொம்ப சுருக்கமா, தெளிவா எழுதுறீங்க...' என, பாராட்டினார்.

ஜெ யலலிதா சத்துணவு திட்டக்குழு உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்ட நேரம். ஒரு வார இதழில், சத்துணவு திட்டத்தை விமர்சித்து ஒரு செய்தி வெளிவந்திருந்தது.

மறுநாள், காலை 9:00 மணிக்கு, என்னை அலுவலகத்தில் இருந்த போனில் அழைத்தார், ஜெயலலிதா...

'சினிமாவில் வாய்ப்பே இல்லாத ஒரு நடிகை, சத்துணவு திட்டம் பற்றி குறைத்து பேசி இருக்கிறார். அவரை கண்டித்து எழுதி, எனக்கு வாசித்துக் காட்டுங்கள்...' என்றார். அந்த பேச்சின் போது கடுமையான கோபத்தில் இருந்தார். 'தாய்' இதழின் முதல் பக்கத்திலேயே, அந்த செய்தி வந்தே ஆக வேண்டும் என்று உத்தரவும் போட்டார்.

அலுவலக உதவியாளர், மணி அப்போது தான் அன்றைக்கு வெளிவந்திருந்த மற்ற இதழ்கள் வாங்கி வந்தார். ஜெயலலிதா அம்மா குறிப்பிட்ட வார இதழை படித்துப் பார்த்தேன். இதழின் இடது பக்கம் நடிகையின் பேட்டி. வலது பக்கம் பிரபல எழுத்தாளர் பேட்டி. எழுத்தாளர் தான் சத்துணவு திட்டத்தை விமர்சனம் செய்திருந்தார். உடனே, நான், ஜெயலலிதாவை தொலைபேசியில் அழைத்து, 'மேடம் நீங்க சொன்ன மாதிரி அந்த நடிகை சத்துணவு திட்டம் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரு எழுத்தாளர் தான் அப்படி சொல்லி இருக்கிறார்...' என, குறிப்பிட்டேன்.

'மன்னிக்கவும் அந்த எழுத்தாளரை உடனே தாக்கி எழுதி, அது முதல் பக்கம் அச்சில் வர வேண்டும்...' என்றார்.

சத்துணவு திட்டத்தை விமர்சித்து பேட்டி தந்திருந்தவர் எழுத்தாளர், நா.பார்த்தசாரதி. 'நா.பா., நாவடக்க வேண்டும்!' என்று தலைப்பையும், ஜெயலலிதாவே சொன்னார்.

அப்போது, ரஷ்ய சுற்றுப்பயணத்தில் இருந்த, வலம்புரி ஜான் எப்படியும் தொலைபேசியில் அழைப்பார். அவரிடம் இதை சொல்லி, அனுமதி வாங்க வேண்டும் என்று காத்திருந்தேன்.

காலை 11:00 மணிக்கு ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெயலலிதா பேசிய தகவலை சொன்னதும், உடனே, அவர் சொன்னபடி செய்தி போடச் சொல்லி விட்டார். நான் எழுதியதை தொலைபேசியில், ஜெயலலிதாவிடம் வாசித்துக் காட்டினேன்.

'நன்றாக இருக்கிறது. முதல் பக்கத்திலேயே வந்து விட வேண்டும்...' என்றார்.

ஜெ யலலிதாவுக்கு பத்திரிகையாளராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக, பத்திரிகையாளரான, சோவிடம் பேசி, 'துக்ளக்' இதழில், பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார், ஜெயலலிதா.

ஜெயலலிதா எழுதிய, 'நெஞ்சிலே ஒரு குரல்!' என்ற கட்டுரைத் தொடர், 'தாய்' இதழில் வெளிவந்தது. கட்டுரையில் சின்ன எழுத்துப் பிழை வந்தாலும், கண்டிப்புடன் பேசுவார், ஜெயலலிதா.



- தொடரும்

ஆர்.பிரபாகரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us