தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா கே

'ச்சே... பேப்பரை திறந்தாலே, காம கொடூரன்களின் லீலைகள் தான். பிஞ்சு குழந்தைகளை எப்படி இப்படி கசக்கி பிழிய முடிகிறதோ... இவர்களையெல்லாம் அரபு நாடுகளில் செய்வதை போல் நடுத்தெருவில் நிற்க வைத்து, சாட்டையால் அடித்துக் கொல்ல வேண்டும்...' என்று ஆத்திரப்பட்டார், உதவி ஆசிரியை ஒருவர்.

'கொடுமைக்காரர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நம் நாட்டில் கொடுமையான குற்றங்கள் நடைபெறும் போதெல்லாம், 'இங்குள்ள சட்டங்கள் போதாது; இத்தகைய குற்றங்களுக்கு, சவுதி அரேபியாவில் வழங்கப்படுவது போன்ற கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவிப்பர்.

'ஆனால், இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் கடைபிடிக்கப்படுவது பொதுச் சட்டமல்ல. இஸ்லாமிய மதச் சட்டமான ஷரியா சட்டம். அதனால்தான் கடுமையான குற்றங்களுக்கு அங்கு பயங்கரமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன...' என்றார், செய்தியாளர் ஒருவர்.

'சாட்டையடி தவிர, வேறு தண்டனைகள் கொடுக்கப்படுகிறதா? அது, என்ன மாதிரியான தண்டனைகள்?' என்றார், உ.ஆ., சொல்ல ஆரம்பித்தார், செய்தியாளர்: திருட்டு: தொடர்ச்சியான அல்லது பெரிய அளவிலான திருட்டுக் குற்றங்களுக்கு கைகளைத் துண்டிக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. இருப்பினும், சமீபகாலமாக இது போன்ற தண்டனைகள் குறைக்கப்பட்டு, சிறைத்தண்டனை மற்றும் கசையடிகளாக மாற்றப்பட்டுள்ளன.

விபசாரம்: திருமணமானவர்கள் இக்குற்றத்தைச் செய்தால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையும், திருமணமாகாதவர்களுக்கு கசையடிகளும் வழங்கப்படுகின்றன. தற்போதைய சூழலில், கல்லெறிந்து கொல்லும் தண்டனை அரிதாகவே நிகழ்கிறது.



சூனியம் மற்றும் கருப்பு மாந்திரீகம்:
இது, அங்கு மிகப்பெரிய குற்றம். இதற்கு மரண தண்டனை. அதாவது, வாளால் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டு கூட இக்குற்றத்திற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பதிவுகள் உள்ளன.

ஓரினச்சேர்க்கை: இது, ஷரியா சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறைத்தண்டனை, கசையடிகள் அல்லது மரண தண்டனை வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

சவுதி அரேபியாவின் சட்டத்தில் மதம் தொடர்பான குற்றங்கள் மிகவும் தீவிரமானவை.

தெய்வ நிந்தனை: இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கை பற்றி அவதுாறாகப் பேசுவது தெய்வ நிந்தனையாகக் கருதப்படுகிறது. இதற்குத் தொடக்கத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், சர்வதேச அழுத்தம் காரணமாக பல நேரங்களில், நீண்ட காலச் சிறைத்தண்டனை மற்றும் கசையடிகளாக இவை மாற்றப்படுகின்றன.

இஸ்லாத்தைவிட்டு வெளியேறுதல்: ஒரு முஸ்லிம் தன் மதத்தைத் துறந்து வேறொரு மதத்திற்கு மாறினால் அல்லது நாத்திகராக மாறினால் அதற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மனம் வருந்தி மீண்டும் மதம் திரும்ப மூன்று நாள் அவகாசம் அளிக்கப்படும்; மறுக்கும் பட்சத்தில் தண்டனை நிறைவேற்றப்படும்.

சவுதி அரேபியாவில், மார்ச் 12-, 2022ல், ஒரே நாளில், 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்கள் பயங்கரவாதம், கொலை மற்றும் பிற கொடூரமான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டனர். நவீன கால சவுதி வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல்முறை.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் மேற்கொண்டு வரும் சமூக சீர்திருத்தங்கள் காரணமாக, சமீபகாலமாக, தண்டனை முறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முன்பு சவுதி அரேபியாவின் முக்கியச் சதுக்கங்களில் பொதுமக்களின் முன்னிலையில் தலை துண்டிக்கப்படும் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் நாட்டின் பிம்பத்தை மேம்படுத்தும் நோக்கில், தற்போது இத்தகைய தண்டனைகள் சிறைச்சாலை வளாகத்திற்குள் ரகசியமாக நிறைவேற்றப்படுகின்றன.

சவுதி அரேபியா தன் சட்டங்களை நவீனமயமாக்க முயன்றாலும், மத ரீதியான அடிப்படை விதிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இன்றும் மிகக் கடுமையான தண்டனைகளையே பின்பற்றி வருகிறது. 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், குற்றங்களைக் கட்டுப்படுத்த இத்தகைய கடினமான சட்டங்கள் அவசியம் என்ற வாதமும் தொடர்ந்து வருகிறது.

- என்று கூறி முடித்தார்.

'நம்மூர் போல, ஆளுக்கு தகுந்தபடி வளைந்து கொடுக்கும் தண்டனையாக இல்லாமலும், அரபு நாடுகள் போன்று தீவிர தண்டனையாக இல்லாமலும், அரத பழசான விதிமுறைகளை மாற்றி, குற்றவாளிகள் திருந்துவதற்கு ஏற்ப, தண்டனை முறைகளில் மாற்றம் செய்வது அவசியம்...' என்றேன், நான்.



ஒருமுறை குமரப்பா என்ற சுதந்திர போராட்ட தியாகி, அப்போது தமிழக முதல்வராக இருந்த, காமராஜரை பார்க்க வந்திருந்தார். அவரை, ஆளுநர் மாளிகையில் தங்க வைத்து, கவுரவப்படுத்த வேண்டுமென்று விரும்பினார், காமராஜர். அதற்கு ஏற்பாடு செய்யுமாறு, ஆளுநர் மாளிகை அதிகாரியிடம் கூறினார்.

ஆனால், 'ஜனாதிபதி, சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு விருந்தினர் மற்றும் வெளிநாட்டு துாதர் போன்றோர் வந்தால் மட்டுமே, ஆளுநர் மாளிகையில் தங்க வைக்க அரசு விதிமுறைகளில் இடம் இருக்கிறது...' என்று கூறி விட்டார், அந்த அதிகாரி.

அதற்கு, 'இவரைப் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளால் தான், இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அவர்கள் தங்குவதற்கு விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை என்றால், அந்த விதியை மாற்றுங்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளும், ஆளுநர் மாளிகையில் தங்கலாம் என்று விதியைச் சேர்த்து, ஒரு புது அரசாணையை உருவாக்கி, அதில் என் கையெழுத்தை வாங்குங்கள்...' என்றார், காமராஜர்.

அந்த அதிகாரியும் அப்படியே செய்தார். தியாகி குமரப்பாவும், ஆளுநர் மாளிகையில் தங்க வைத்து கவுரவப்படுத்தப்பட்டார்.

அப்போது, காமராஜர் சொன்ன கருத்து, 'சில விதிகளுக்கு முன் உதாரணம் இல்லாவிட்டால், நாம் தான் அதை உருவாக்கி, நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அத்துடன் மனிதனுக்காகத்தான் விதிகள்; விதிகளுக்காக மனிதனில்லை...' என்றார்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us