PUBLISHED ON : ஜூன் 21, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட, அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
இசைஞானி இளையராஜா தன் மூத்த சகோதர ர், பாவலர் வரதராஜன் பெயரில் உருவாக்கிய பட நிறுவனம் தான், 'பாவலர் கிரியேஷன்ஸ்!' சகோதரர்கள், பாஸ்கர் மற்றும் கங்கை அமரன் இருவருக்கும் திரைப்பட வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தில், இளையராஜாவின் தம்பி, கங்கை அமரனை இயக்குனராக்கினார். அதுதான், கோழி கூவுது திரைப்படம்.
சுரேஷ் ஜோடியாக இதில் அறிமுகமானவர், பெங்களூரை சேர்ந்த, விஜி என்ற நடிகை. கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனி அருகே தான் இவர் குடியிருந்தார். கோழி கூவுது படம் வெளியாகி, சக்கைப் போடு போட, விஜிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அவரைச் சந்தித்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் கூறியது...
'என் தந்தை அஸ்வத் விரும்பியதால்தான் நடிக்க வந்தேன். எனக்கு சினிமாவில் நடிப்பதை விட, படிப்பதில் தான் ஆர்வம் இருந்தது. பெங்களூரில் ஒரு புகைப்படக்காரர் என்னை படம் எடுத்த போது, என் கண்கள் வித்தியாசமாக இருப்பதாகவும், சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்யும்படி, அப்பாவிடம் சொன்னதால், அவருக்கு என்னை நடிகையாக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அப்பாவுடைய விருப்பத்திற்காக தான் நான் நடிக்க வந்தேன்...' என்றார், விஜி. மிகவும் எதார்த்தமாக பேசுவார். தமிழ் தட்டுத்தடுமாறி வரும்.
விஜியின் பிறந்த நாள், ஜனவரி 1. ஒவ்வொரு வருடப்பிறப்பு அன்றும், பார்வையற்ற குழந்தைகளுக்கான, 'லிட்டில் பிளவர்' பள்ளிக்கூடம் சென்று குழந்தைகளோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவார். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாததை பற்றி அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார்.
உணவு விஷயத்தில் அவரது முதல் விருப்பம், பிஸி பேளாபாத். இது நம்ம ஊர், சாம்பார் சாதம் போல் இருக்கும். கர்நாடகாவில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது இதுதான். படப்பிடிப்பு நாட்களில், மசால் தோசை தான், விஜியின் விருப்பமாக இருக்கும். வடபழனியில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த, நெல்லை சைவ ஹோட்டலில், சாதா தோசை வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார்.
வளர்த்த கடா படத்தில் நடித்ததிலிருந்து, கராத்தே மீது ஆசை வந்தது. இதற்காக பல நாட்கள், கராத்தே மணியிடம் பயிற்சி பெற்று, கராத்தே கலையை கற்றார், விஜி.
ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி அன்று மாலை சத்யநாராயணா பூஜை செய்வது விஜியின் அப்பாவின் வழக்கம். இந்த பூஜையில் விதவிதமாக இனிப்புகள் இடம்பெறும். இதற்காகவே பவுர்ணமி அன்று மாலை, விஜி வீட்டுக்கு நான் போய் விடுவேன்.
கோழி கூவுது திரைப்படத்தில், பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார், விஜி. கதைப்படி தாய் மாமன் பிரபு, விஜியை விரும்புவார். ஆனால், விஜி, சுரேஷை விரும்புவார். சில்க் ஸ்மிதா, பிரபுவை விரும்புவார்.
ஏற்கனவே, சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் இணைந்த, பிரபு-ஸ்மிதா ஜோடி. கோழி கூவுது திரைப்படத்திலும் இணைந்தது.
தேனி பகுதியில் தான், கோழி கூவுது முழுமையாக படமாக்கப்பட்டது. இந்த படத்தில் கவர்ச்சியை தாண்டி, கேரக்டரில் தன்னை நடிக்க வைத்ததை, நெகிழ்வோடு சொல்லி இருக்கிறார், சில்க் ஸ்மிதா. படம் வெற்றி பெற்றதும், கங்கை அமரனை வீட்டுக்கு அழைத்து தடபுடல் விருந்து வழங்கினார், ஸ்மிதா.
கவர்ச்சி நடிகையாக மட்டுமே கருதப்பட்ட, ஸ்மிதாவுக்கு நடிக்கவும் வரும் என்று அடையாளம் காட்டியவர்கள், இயக்குனர்களான, ராம. நாராயணனும், கங்கை அமரனும் தான். ' மூன்றாம் பிறை படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினாலும், பாலு மகேந்திரா சார் என்னை விதவிதமான கோணங்களில் நடிக்க வைத்தார்...' என்று ஒருமுறை நினைவு கூர்ந்திருந்தார், ஸ்மிதா.
சில்க் சில்க் சில்க் படத்தில், ஸ்மிதா மூன்று வேடங்களில் நடித்தார்.
ஒருநாள், விஜயா கார்டன் வருமாறு என்னை அழைத்தார், ஸ்மிதா. நான் அங்கு போன போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் மகன், கோபி தான் இந்த படத்தின் இயக்குனர். அங்கு, ஸ்மிதாவை சந்தித்தபோது, 'எனக்கு இதுல மூணு விதமான, 'ரோல்' தெரியுமா? நான் ஆசைப்பட்ட மாதிரி, 'ஹீரோயின் சான்ஸ்' நிறைய வந்துக்கிட்டே இருக்கு. அதை சொல்லணும் என்பதற்காக தான் உங்களை நான் இங்க வர சொன்னேன்...' என்றார், ஸ்மிதா.
பொதுவாக மற்றவர்கள் பார்வைக்கு அவர் ஒரு கோபக்காரியை போலத் தெரியும். ஆனால், அவருக்குள் இருந்த சோகமும், ஆசைகளும் எனக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த, 1991ல், சென்னை தொலைக்காட்சிக்காக, நண்பர், வசந்தன் பெருமாள் ஒரு குறும்படம் எடுத்தார். அப்போது, சில்க் ஸ்மிதாவை நடிக்க வைக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக, ஸ்மிதா வீட்டிற்கு போய் நான் பேசியபோது, 'டிவியில் நான் நடிச்சா சரியா வருமா?' என்று கேட்டார், ஸ்மிதா.
'திரைப்படத்துக்கு அடுத்த, மீடியாவா, 'டிவி' தான் எதிர்காலத்தில் இருக்கும்'ன்னு சொல்லி, அவரை குறும்படத்தில் நடிப்பதற்கு சம்மதிக்க வைத்தேன்.
'ஒருநாள் தான், நடிக்க,'டேட்' தருவேன். நீங்க அதுக்கு தகுந்த மாதிரி படப்பிடிப்பு ஏற்பாடு பண்ணுங்க...' என்றார், ஸ்மிதா.
எழுத்தாளர், வந்திய தேவன் எழுதிய, 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்கிற சிறுகதை தான், குறும்படமாக தயாரிக்கப்பட்டது. சென்னை, திருமழிசை அருகே உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு.
அந்த படத்தில், சில்க் ஸ்மிதாவை மூன்று பேர் காதலிப்பது போல காட்சிகள் வரும். அப்போது, சிறிய சிறிய காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்த, நடிகர் விவேக் ஒரு காதலர். அதேபோல நடிகர், பப்லு இன்னொரு காதலர். மூன்றாவது காதலர், கடுகு ராமமூர்த்தி. இந்த மூன்று பேரும், சில்க் ஸ்மிதாவை காதலித்து ஏங்குவது தான் கதை. சில்க் ஸ்மிதா படப்பிடிப்புக்கு வருவதற்கு தாமதமாயிற்று. காலை, 10:00 மணி வரை அவர் அங்கு வந்து சேரவில்லை. எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.
இயக்குனர், வசந்தன் பெருமாள் நேரடியாகவே என்னை பார்த்து முறைக்க ஆரம்பித்தார். 'கண்டிப்பா வந்துருவாங்க சார். நீங்க, 'வெயிட்' பண்ணுங்க...' என்று சொல்லி, சமாளித்து கொண்டிருந்தேன். கடைசியாக, மிக நேர்த்தியான அலங்காரத்தோடு அங்கே வந்து சேர்ந்தார், சில்க் ஸ்மிதா.
- தொடரும்
ஆர்.பிரபாகரன்
