தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

அலுவலகம்.

வழக்கம்போல், அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர். 'டீ கடை பெஞ்ச்' கூட்டத்தை முடித்து வந்தனர், குப்பண்ணா அண்டு குழுவினர். சாயந்திரம் எங்கு போவது என்று, ரகசியமாக கலந்தாலோசித்தனர். திடீரென, 'என்னவே லெஞ்சு... பப்பு, பப்புன்னு என்னவோ சொல்றாங்களே... அப்படின்னா என்னப்பா?' என்றார், அன்வர் பாய்.

'ஓய், நீர் என்ன கேட்க வர்றீர்ன்னே சரியா புரியல. 'பப்பு'ன்னு சொன்னா, பருப்பு சாதம் என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. இல்லாவிட்டால், சின்ன குழந்தைகளை, செல்லமா, 'பப்புக்குட்டி இங்க வாம்மா...' என்பர்...' என்றார், லென்ஸ் மாமா.

'அதெல்லாம் இல்லப்பா... வயசு பசங்க எல்லாம், அங்கு போய், உ.பா., அருந்தி, டான்ஸ் போடுவாங்களாமே, அது தான்...' என்றார், அன்வர் பாய்.

'ஓ, அதுவா... இப்படி மென்னு துப்பினா எப்படி புரியும். அது பேர், 'பப்!' உரிய லைசன்ஸ் பெற்று, நடத்தப்படும், நவீன மதுபான பார்கள்...'

'அதுக்கு, நம்மள மாதிரி ஆளுங்க போக முடியாதா?'

'நீர், இப்படி தப்புதப்பா இங்கிலீஷ் பேசிட்டு போனா, எப்படி உள்ளே விடுவாங்க?'

'சரிப்பா. நான் பேசல. அங்கு ஒருமுறை கூட்டிட்டு போறியா?' என்று கெஞ்சினார், அன்வர் பாய்.

'சரி, சாயந்திரம் நாமெல்லாரும், 'பப்'க்கு போறோம்...' என்று அறிவித்தார், லென்ஸ் மாமா.

மாலை. அலுவலக நேரம் முடிந்ததும், அனைவரும் கிளம்பினர். 'நான் வரவில்லை...' என்று கூறியும், வலுக்கட்டாயமாக என்னையும் இழுத்து சென்றார், லென்ஸ் மாமா.

நகரில், மிகப்பெரிய, 'ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்' ஒன்றின், ஆறாவது மாடியில் இருந்தது, அந்த, 'பப்' என்ற மதுபான பார்.

உள்ளே நுழைந்ததும், அரையிருட்டாக இருக்கவே, சற்று தடுமாறினார், அன்வர் பாய். மாமா திட்டப் போகிறாரே என்று, என் கையைப் பிடித்தபடி நடந்து வந்தார்.

வகைவகையான மதுபான வகைகள் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இளைஞர் கூட்டம், ஆங்காங்கு உட்கார்ந்து, உற்சாக பானம், அருந்தி கொண்டிருந்தது. மேனேஜர் போலிருந்தவர், லென்ஸ் மாமாவை பார்த்ததும், முகமலர்ச்சியுடன் வரவேற்று, தனி கேபினுக்குள் அனைவரையும் அழைத்து சென்றார்.

யார் யாருக்கு என்ன மதுவகை வேண்டும் என்று கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டார். என்னைப் பார்த்ததும், 'உங்களுக்கு, ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்து விடுகிறேன்...' என்று அவராகவே கூறி, சென்றார்.

'ஏம்ப்பா மேனேஜர். எத்தனை வருஷமா இதே, 'செட்-அப்'பை வைச்சிருப்பீங்க. அழுக்கு திரைச்சீலை, பழசான மேஜை, அதே கோப்பைகள்...' என்று அலுத்துக்கொண்டார், மாமா.

அந்த மேனேஜர் சற்று மிரண்டு, 'பப் ஓனர் இப்ப இங்க வந்திருக்கிறார். அவரிடமே கேளுங்கள்...' என்று ஓடினார்.

'லெஞ்சு, பசங்களையோ, பொண்ணுங்களையோ அதிகமா காணலையே... மியூசிக் இல்ல, டான்ஸ் இல்லையே...' என்றார், அன்வர் பாய்.

'ஓய், நீர் 6:00 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து விட்டீர். 10:00 மணிக்கு மேல் தான் களை கட்டும்...' என்றார், எரிச்சலுடன், மாமா.

'பப்' உரிமையாளரை அழைத்து வந்து விட்டார், மேனேஜர். உரிமையாளருக்கு வயது, 55 இருக்கலாம். 'டிரிம்' ஆக, 'பிரெஞ்ச்' தாடி வைத்து, கம்பீரமாக மொத்தத்தில், 'கிங் பிஷ்ஷர்' மல்லையாவை போலிருந்தார்.

தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர், 'உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே, சமீபத்தில், சில ஆசிய-ஐரோப்பிய நாடுகளுக்கும், சில மேற்கத்திய நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள மதுபான பார்களின் உள் அலங்கார வசதிகளை பார்த்து வந்துள்ளேன். அங்கெல்லாம், வாடிக்கையாளர்களை கவர, புதுப்புது, 'ஐடியா'க்கள் நிறைய செயல்படுத்தி வருகின்றனர்...' என்றார்.

'அங்கு, எந்த மாதிரி புதுமைகள்?' என்று கேட்டார், லென்ஸ் மாமா.

கூற ஆரம்பித்தார், உரிமையாளர்:

வாடிக்கையாளர்களை ஈர்க்க, 'பப்கள், பார்கள், டேவர்ன்கள்' போன்ற மதுபான விடுதிகள், வெறும் மது வகைகளை வழங்குவது மட்டுமின்றி, தனித்துவமான அனுபவங்களையும் உருவாக்கத் துவங்கியுள்ளன.

ஜெர்மனி நாட்டிலுள்ள சில மதுபான விடுதிகளில், மேஜையிலேயே பொருத்தப்பட்ட குழாய்கள் மூலம், வாடிக்கையாளர்கள், தாங்களே பீரை நிரப்பிக்கொள்ளும் வசதி உள்ளது.

ஐரோப்பாவின், செக் குடியரசிலுள்ள, சில மதுபான விடுதிகளில், வாடிக்கையாளர்கள், பீர் கலந்த குளியல் தொட்டிகளில் ஓய்வெடுத்தபடியே, பீர் அருந்தும் வசதி வழங்கப்படுகிறது.

கிழக்கு ஆசியாவிலுள்ள, தென் கொரியாவில், மதுபான விடுதிகளுக்கு, தனியாக வருபவர்களுக்காக, சிறிய அளவிலான தனி அறைகள் அல்லது தனி இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சில அமெரிக்க பார்களில், பானம் அருந்துவதோடு, வரிசையாக உள்ள கம்பங்களை நோக்கி, குறிப்பார்த்து கோடரியை வீசும் விளையாட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

கனடாவில், செஸ், கேரம் போன்ற பலகை விளையாட்டுகள் கொண்ட, பார்கள் செயல்படுகின்றன. நண்பர்கள் குழுவாக அமர்ந்து விளையாடியபடி பானங்களை அருந்தலாம்.

இங்கிலாந்தில், பல பாரம்பரிய, 'பப்'கள், செல்ல நாய்களையும் வரவேற்கின்றன. சில இடங்களில், நாய்களுக்கென தனி உணவுப் பட்டியலும் வழங்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில், குளிர்காலங்களில் பனிக்கட்டிகளால் உருவாக்கப்படும் தற்காலிக பார்கள், வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை வழங்குகின்றன.

சீனாவில், முக அடையாளம் மற்றும் 'க்யூஆர்' குறியீடு ஆர்டர், 'ரோபோட்' சேவை போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலுள்ள சில பார்கள், புத்தக அலமாரி அல்லது ரகசிய கதவுகளுக்குப் பின்னால் இயங்குகின்றன. உள்ளே செல்லும் அனுபவமே ஈர்ப்பாக இருக்கும்.

பிரான்ஸ் நாட்டில் பார்களில், மது அருந்துவதோடு, புத்தகங்களை வாசிக்கக்கூடிய அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.

ஸ்வீடன் நாட்டில், பனிக்கட்டியால் செய்யப்பட்ட குவளைகளில் மட்டுமே பானங்கள் வழங்கப்படும்.

மெக்சிகோ நாட்டில், இயற்கை குகைகளுக்குள் அமைக்கப்பட்ட பார்கள், வித்தியாசமான ஒலி மற்றும் சூழல் அனுபவம் வழங்குகின்றன.

ஜப்பானில், சில மதுபான விடுதிகள், தங்களுடைய வாடிக்கையாளர்கள், பூனைகள் அல்லது ஆந்தைகளுடன் நேரம் செலவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நகர வாழ்க்கையின் மன அழுத்தத்தைக் குறைப்பதே, இதன் நோக்கம்.

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில், நிரந்தர கட்டடங்களுக்கு பதிலாக, படகுகளிலேயே பார்கள் செயல்படுகின்றன. இங்கே வாடிக்கையாளர்கள், படகில் மிதந்தபடியே பானங்களை அருந்துகின்றனர்.

உலக மதுபான விடுதிகளில், நல்ல பானத்தை விற்பதைவிட, மறக்க முடியாத அனுபவத்தை கொடுப்பதே, இன்றைய வெற்றிகரமான வியாபார உத்தியாக மாறியுள்ளது.

- என்று கூறி முடித்தார், உரிமையாளர். 'அடேங்கப்பா... இத்தனை விதமாகவா, ப...ப்...பு...' என்று, அன்வர் பாய் சொல்லி முடிப்பதற்குள், அவரது வாயை பொத்தி, 'இவருக்கு வாந்தி வருகிறது. நாம் பிறகு பேசுவோம்...' என்றபடி, அன்வர் பாயுடன், கேபினிலிருந்து வெளியேறினார், லென்ஸ் மாமா. என் அருகில் வந்த உரிமையாளர், 'எனக்கும், ஆரஞ்சு ஜூஸ் தான் மிகவும் பிடிக்கும்...' என்று கூறி, கைக்குலுக்கி விடைபெற்றார். மற்றவர்களை, 'குடிக்க' வைத்து, அழகு பார்ப்பவர் இவர் என்று புரிந்தது. லென்ஸ் மாமா வருவதற்காக காத்திருந்தோம் நாங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us