தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (18)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (18)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (18)

1


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

நடிகரும், இயக்குனருமான, ராமராஜன் இயக்கிய, சோலை புஷ்பங்கள் படத்திற்கான கதை விவாதம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'பாம்குரோவ்' ஹோட்டலில் நடந்தது. கதை விவாதத்தில், நானும் பங்கேற்றேன். அப்படத்தின் உதவி இயக்குனரான, குணா என்னிடம், 'இந்த படத்தில் இரண்டு கதாநாயகியரில் ஒருவராக, ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும்படி உதவ முடியுமா?' என்று கேட்டார்.

அதே நேரத்தில், ரம்யா கிருஷ்ணனின் அம்மா நித்யா என்னை பார்க்க விரும்புவதாக, என்னுடன், 'தாய்' அலுவலகத்தில் அப்போது பணியாற்றிய கவிஞர் மு.மேத்தாவின் மைத்துனர், ஜமாலிடம் சொல்லி அனுப்பினார்.

வெள்ளை மனசு திரைப்படத்தை, 'பிலிம்கோ' நிறுவனம் தயாரித்தது. சித்ராலயா கோபு தான் இயக்குனர். படத்தின் கதாநாயகன், ஒய்.ஜி. மகேந்திரன், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த, ரம்யா கிருஷ்ணனை அழைத்து வந்து, 'இந்தப் பொண்ணை ஹீரோயினா போடுங்க...' என்று, இயக்குனரிடம் சிபாரிசு செய்துள்ளார்.

சித்ராலயா கோபு உடனே சம்மதிக்கவில்லை. 'இந்த பொண்ணு உங்களுக்கு வேண்டிய குடும்பத்தை சேர்ந்தவர். சோ சாரின் உறவினர்...' என்று சொல்ல, ஒரு வழியாக, ஓ.கே., சொல்லிவிட்டார், இயக்குனர்.

தன், 13வது வயதில் இத்திரைப்படத்தில் அறிமுகமானார், ரம்யா கிருஷ்ணன். அப்படத்துக்கு பின், பெரிய பட வாய்ப்புகள் ஏதும் அவருக்கு வரவில்லை. இயக்குனர், மணிவண்ணனிடம் ஒருநாள் பேசும் போது, முதல் வசந்தம் படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக, ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்திருப்பதாக கூறினார். முதல் வசந்தம் படம், ரம்யா கிருஷ்ணனுக்கு வெற்றி படமாக அமைந்தது. ஒரு நாள் என்னை, ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு, அழைத்துச் சென்றார், ஜமால்.

அப்போது, ரம்யாவின் அம்மா நித்யா, என்னிடம், 'பெரிய கம்பெனி படங்கள் மற்றும் பிரபலமான, 'ஹீரோ'கள் படங்களில் எப்படியாவது, ரம்யாவுக்கு வாய்ப்பு வாங்கி தாருங்கள்...' என்றார்.

நானும், 'என்னால் முடிந்த முயற்சிகளை செய்கிறேன்...' என்று சொல்லி வந்து விட்டேன். ஒரு நாள், ரம்யாவின் அம்மா நித்யா, என்னிடம், பத்திரிகையாளரும், நடிகருமான, சோ, என்னை பார்க்க விரும்புவதாக சொன்னார். நானும், சோவை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

'ரம்யா கிருஷ்ணன் எங்க குடும்பத்து பொண்ணு. நல்ல படங்கள் மற்றும் பெரிய, 'ஹீரோ'கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி பண்ணுங்க...' என்றார்.

எனக்கு, பாரதிராஜா நல்ல பழக்கம் என்பதால் அவரிடம், ரம்யா கிருஷ்ணன் பற்றி பேசினேன். அப்போது தான் அவர், 'நான், ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பில் இருந்தபோது, அப்பெண், என்னை நேரில் வந்து சந்தித்தார். 'கொஞ்சம், 'வெயிட்' பண்ணும்மா...' என்று சொன்னேன். அதுக்குள் வேறு படத்தில் நடிக்க போய்விட்டது...' என்றார்.

முதல் மரியாதை படத்தில், ரஞ்சனி நடித்த பாத்திரத்தில், ரம்யா கிருஷ்ணனை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார், பாரதிராஜா. ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது. மூன்று ஆண்டுகள் வாய்ப்புகளுக்காக கடுமையாக போராடினார், ரம்யா. ஒரு நாள், கவுண்டமணி என்னிடம், ' டில்லிக்கு ராஜா படத்தில், ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க முடியுமா?' என்று கேட்டார். 'ஒய்.ஜி.மகேந்திரன் ஜோடியாக நடித்தவர், என்னுடன் நடிக்க மாட்டாரா?' என்றும் கேட்டார்.

நான், ரம்யாவிடம் கேட்டதற்கு முதலில் தயங்கினார். ஆனால், அவரது அம்மா, 'வீட்டில் சும்மா இருப்பதைவிட, தொடர்ந்து வருகிற பட வாய்ப்புகளில் எல்லாம் நடிக்கலாம்...' என்று சொல்ல, டில்லிக்கு ராஜா படத்தில் நடித்தார், ரம்யா கிருஷ்ணன். படம் பெரும் வரவேற்பை பெற்றாலும், தொடர்ந்து ரம்யாவிற்கு வாய்ப்புகள் வரவில்லை.

அப்போது, நடிகர், சக்கரவர்த்தி, பாரதியாராக நடிக்கிற, கொட்டு முரசே படத்தில் ஒரு பாடல் காட்சியில், ரம்யா கிருஷ்ணனை பரதநாட்டியம் ஆடவைக்கலாமா என்று கேட்டார். குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியத்தில் சிறப்பாக ஆடக்கூடிய, ரம்யா கிருஷ்ணன், பாரதியார் பாட்டுக்கு ஆடுவது பெருமை என்று நடிக்க ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமி சார்பாக நாடக தின விழாவில், சிறப்பு நாடகம் ஒன்று நடைபெற இருந்தது. இயக்குனர், ஆர்.பாலு தான் நாடகத்தை இயக்கினார். நடிகர் வசந்த்துடன், ரம்யா கிருஷ்ணன் இந்த நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், துரதிஷ்டவசமாக நாடகத்திற்கு முதல் நாள், கொட்டுமுரசே படப்பிடிப்பின் போது, அவருக்கு கால் முறிந்து விட்டது. மூன்று மாத காலம் சிகிச்சையில் இருந்து மீண்டார்.

பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின், 1990ல் தெலுங்கு சினிமாவில், கே.விஸ்வநாத் இயக்கிய, சூத்திரதாருலு படத்தில் நடித்தார். அப்படம், தேசிய விருது, நந்தி விருது என, பல விருதுகளை பெற்றது. அதன்பின், ரம்யா கிருஷ்ணனுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதே நேரத்தில், 1991ல், கேப்டன் பிரபாகரன் படத்தில், 'ஆட்டமா தேரோட்டமா...' பாடலுக்கு மட்டும், ரம்யா கிருஷ்ணனை ஆட வைக்க வேண்டும் என்று கேட்க, அதற்கும் ஒப்புக்கொண்டார், ரம்யா.

இந்த ஒரு பாடல் மூலமாக, தமிழிலும் வாய்ப்பு குவிந்தது. 1995ல், படையப்பா படத்தில், அவர் ஏற்ற நீலாம்பரி வேடம், ரம்யா கிருஷ்ணனை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என, ஸ்ரீதேவி போல தன் சினிமா வாழ்க்கையை விரிவாக்கிக் கொண்டார், ரம்யா கிருஷ்ணன்.

கடந்த, 2019ல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று தொடரில், ஜெயலலிதாவாக நடித்து பெயர் வாங்கியவர், அதே வாழ்க்கை வரலாறு இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்.

பெரிய பேனர் படம், சின்ன பட்ஜெட் படம் என பார்க்காமல், கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதை வழக்கமாக கொண்டதால், ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அவர் தன்னை கலைத்துறையில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.



- தொடரும்

ஆர்.பிரபாகரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us