PUBLISHED ON : ஆக 02, 2026

மனிதநேயம் மரிக்கவில்லை!
என் தோழிக்கு கடந்தாண்டு திருமணமானது. திருமணமான நான்கு மாதங்களிலேயே அவளது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். நிலைகுலைந்த, தோழி பித்துப் பிடித்தவர் போல் ஆனாள். அவளது கணவன் வீட்டாரும் மகன் இறந்த துயரம் ஒருபுறம் இருந்தாலும், தன் மகன் இறந்ததால், ஒரு பெண்ணின் வாழ்க்கையும் வீணாகிவிட்டதே என கலங்கினர். அவள் அங்கிருந்த சில மாதங்களிலேயே அனைவரிடமும் பாசமாக நடந்து, அனைவர து இதயத்திலும் இடம்பிடித்ததாலும், மகன் இறந்த சோகத்தைவிட, மருமகள் நிலையை எண்ணியே அவர்கள் கலங்கினர்.
ஒரு பெண்ணின் வாழ்வை வீணடிக்க வேண்டாம் என்று யோசித்தவர்கள், கெட்டது நடந்த வீட்டில் நல்லது ஒன்று நடக்க வேண்டும் என்று நினைத்து, தன் இரண்டாவது மகனுக்கு அவளை மணமுடிக்க விரும்பி, தோழியிடமும், அவளது குடும்பத்தாரிடமும் சம்மதம் கேட்டனர். அவர்களும் சம்மதிக்கவே, அவளுக்கு மீண்டும் திருமணம் முடிந்து இப்போது கணவனும், மனைவியும் சந்தோஷமாக வாழ்கின்றனர்.
இதே வேறொரு குடும்பமாக இருந்தால், வாழ வந்த உடனே தன் மகனை விழுங்கிவிட்டாள் என, தகாத வார்த்தைகளால் பேசி கொன்றிருப்பர். ஆனால், இவர்கள் மாறாக மனிதநேயத்துடன் நடந்து கொண்டது பாராட்டத்தக்கது-.
பி.பொன் காவியா, மதுரை.
புதிய பார்வை பாருங்கள்...
மழைக்காலம் வந்தாலே, என் நண்பர் ஒருவர் புதிய குடை வாங்குவது வழக்கம். காரணம் கேட்டால், 'பழையதை சரி செய்ய யாரும் இல்லையே...' என்பார்.
ஒருநாள், பேருந்து நிலையம் அருகே சென்றபோது, சிறிய தள்ளுவண்டியில், கிழிந்த குடைகளை தைத்து, உடைந்த கம்பிகளை மாற்றி, கைப்பிடிகளைப் பொருத்தி, பழைய குடைகளுக்கு புதிய உயிர் கொடுத்துக் கொண்டிருந்தார், 65 வயதான ஒருவர்.
ஆர்வமாக அவரிடம் பேசினேன்.
ஒருகாலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வுக்கு பின் ஏதாவது தொழில்ெசய்ய நினைத்து, மக்களின் தேவைகளை உன்னிப்பாகக் கவனித்துள்ளார்.
'பழைய பொருட்களை சரி செய்து பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாததால் தான், மக்கள் புதியதை வாங்குகின்றனர்...' என்ற எளிய உண்மையை அவர் புரிந்து கொண்டுள்ளார். அதன்பிறகு வீட்டிலேயே குடை பழுதுபார்க்கும் தொழிலில் பயிற்சி செய்து, தள்ளுவண்டியில், சில கருவிகள், கொஞ்சம் திறமை, நிறைய நம்பிக்கை -என, குடை பழுதுநீக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
மழைக்காலங்களில் பள்ளிகள், பேருந்து நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று குடைகளைப் பழுதுபார்க்கத் தொடங்கினார். அதோடு, குறைந்த விலையில், புதிய குடைகளையும் வாங்கி விற்பனை செய்துள்ளார்.
இன்று, அவரைத் தேடி மக்கள் வருகின்றனர். எதை வாங்குகின்றனர் என்பதைவிட, எதைச் சரிசெய்து பயன்படுத்த விரும்புகின்றனர் என்பதை கவனித்தால், அங்கேயே ஒரு புதிய தொழில் வாய்ப்பு உருவாகும்.
வெற்றி புதிய பொருளில் அல்ல; புதிய பார்வையில்தான் இருக்கிறது.
- எம்.பி.இலக்கியவாணன், பல்லடம், திருப்பூர் மாவட்டம்.
கோவில் திருவிழாவில் சபாஷ் ஐடியா!
சமீபத்தில், எங்கள் ஊருக்கு அருகே நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றேன். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த கோவில் திருவிழாவில், லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர்; கூட்டம் அலைமோதும். ஆனாலும், கோவில் நிர்வாகம் சார்பில் கழிவறைகள் எதுவும் இருக்காது.
இதனால், திருவிழாவிற்கு வரும் ஆண்களும், பெண்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். ஆனால், இந்த முறை கோவில் நிர்வாகம் சார்பாக, நடமாடும், 'பயோ' கழிவறைகளை ஏற்பாடு செய்திருந்தனர். கோவிலிலிருந்து சற்று தள்ளி, நான்கு இடங்களில் நடமாடும் கழிவறைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனால், திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் எந்த சிரமும் இல்லாமல், இலவச கழிவறைகளை பயன்படுத்தினர்; சுகாதாரமும் பாதிக்கப்படவில்லை. இதை ஏற்பாடு செய்த கோவில் நிர்வாகத்திடம் நன்றி தெரிவித்து, 'ஆண்டுதோறும் இதே முறையை பின்பற்றுங்கள்...' என்று கூறிவிட்டு வந்தேன்.
வாசகர்களே... கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் இதுபோன்ற நடமாடும், 'பயோ' கழிவறைகளை ஏற்பாடு செய்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் இருக்குமே!
செ.சவுமியா, அரூர், தருமபுரி.
