விசேஷம் இது வித்தியாசம்: கோபத்தில் பிறந்த திருவிழா!
விசேஷம் இது வித்தியாசம்: கோபத்தில் பிறந்த திருவிழா!
PUBLISHED ON : ஆக 02, 2026

ஆக., 3 - ஆடிப்பெருக்கு
தீர்க்க சுமங்கலி பாக்கியம் தரும் ஆடிப்பெருக்கு திருவிழா, ஒரு முனிவரின் கோபத்தில் பிறந்தது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?
காட்டில் தவமிருந்தார், மகரிஷி ஹேரம்பர். தவமிருப்பதன் நோக்கமே, கோபம் உள்ளிட்ட அனைத்து தீய குணங்களையும் துறந்து, சிவனை அடைய வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், அவ்வளவு எளிதில் தவத்தின் பலனைத் தந்து விடுவாரா, சிவன். அவரது தவத்தின் சக்தியை சோதிக்க நினைத்தார், சிவன். அவ்வழியாக வந்த மன்னன் ஒருவன், முனிவரிடம், 'நீர் யார்?' என்று கேட்டான்.
தவத்தில் ஆழ்ந்திருந்த முனிவர், அவன் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. மன்னனான தனக்கு பதில் சொல்லவில்லையே என்ற கோபத்தில், ஒரு விலங்கை கொன்று, முனிவர் மடியில் போட்டான். கண் விழித்த முனிவர், தன் தவத்தைக் கலைத்ததுடன், இறந்த விலங்கை தன் மடியில் போட்ட, மன்னனை சபித்து விட்டார்.
தபஸ்விகள், என்ன நடந்தாலும் கோபப்படாமல், சாந்தமாக நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதி. அதை மீறிய முனிவர் முன் தோன்றிய சிவன், 'முனிவரே... தபஸ்வியான நீர் கோபப்பட்டதால், தவத்தின் பலனை இப்போது தர மாட்டேன். இந்த உலகத்தின் ஒரு பகுதியை காப்பாற்றும் சந்தர்ப்பம் உமக்கு வரும். அப்போது, உம் உயிரைக் கொடுத்தேனும் அந்த இடத்தைக் காப்பாற்ற வேண்டும். அப்போது தான் தவப்பலனை தருவேன்...' என, சொல்லி மறைந்தார்.
க னகசோழன் என்பவன், சோழ நாட்டை ஆண்டு வந்தான். நாடு செழித்திருந்தது. இந்த செழிப்புக்கு காரணமே தன்னால் தான் என, ஆணவம் கொண்டாள், காவிரித்தாய். அந்த ஆணவத்தை அடக்க எண்ணினார், சிவன். அந்த நதியை ஒரு பள்ளத்தில் விழச்செய்து, தொடர்ந்து ஓட முடியாதபடி செய்து விட்டார்.
சோழநாடு வறட்சியில் தத்தளித்தது. மக்களின் நிலை எண்ணி கலங்கி, சிவனை வேண்டினான், மன்னன்.
'நீ ஹேரம்ப முனிவரிடம் செல். அவரை காவிரி நீர் விழும் பள்ளத்தில் குதிக்கச் சொல். நதி மீண்டும் வெளியே வரும்...' என ஒலித்தது, அசரீரி. மன்னனும் அவ்வாறே முனிவரிடம் சொல்ல, 'இந்த உலகின் ஒரு பகுதியை காப்பாற்றும் சந்தர்ப்பம் உமக்கு வரும்...' என்று ஏற்கனவே தனக்கு, சிவன் சொல்லியிருந்தது, முனிவரின் நினைவுக்கு வந்தது. சற்றும் யோசிக்காமல் பள்ளத்தில் குதித்தார், ஹேரம்பர். காவிரி மீண்டும் பெருகி ஓடியது.
அது, கடைமடைக்கு வரும் நேரத்திற்குள் மன்னனின் மனைவி செண்பகாவும், பிற பெண்களும் அங்கு சென்று காத்திருந்தனர். காவிரி அங்கு வரவும், மலர்கள் துாவி வரவேற்றனர். அன்றைய தினம் ஆடி 18. வரவேற்பில் மகிழ்ந்த காவிரித்தாய் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் அருளினாள்.
அன்று முதல் இன்று வரை காவிரிக்கு மரியாதை செய்து, தீர்க்க சுமங்கலி வரம் பெறுகின்றனர், பெண்கள்.
தி. செல்லப்பா
