
அஜித், மாடம்பாக்கம், சென்னை: ஆண்டுக்கு, 30 டிரெஸ் எடுப்பீர்கள் என்று, முன்னொரு முறை சொல்லி இருந்தீர்கள். காலணிகளிலும் அதுபோன்று ஏதேனும் கணக்கு உள்ளதா?
கருப்பு, பிரவுன் என, இரண்டு நிறங்களில் ஷூ வாங்குவேன். 'ஹஷ் பப்பீஸ்' கடையினர் எடுத்து வந்து கொடுத்து விடுவர்.
மெஹ்ருன்னிசா பேகம், திருச்சி: தமிழகத்தில் நீங்கள் செல்லாத மாவட்டம் ஏதும் உண்டா?
எல்லா மாவட்டங்களிலும், அனைத்து சிற்றுார்களுக்கும் சென்றிருக்கிறேன், 'தினமலர்' நாளிதழ் சர்க்குலேஷனை அதிகரிக்க. ஒவ்வொரு விற்பனை முகவரையும் சந்தித்து, விற்பனையை உயர்த்தி இருக்கிறேன்!
* தே.மாதவராஜ், கோயம்புத்துார்: லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் பெற்ற, 99 தொகுதிகளிலும் கூட்டணி வைத்ததால்தான் வெற்றி பெற்றது என, மோடி கூறுகிறாரே?
உண்மை தானே!
வி.பிருந்தா, சென்னை: சுதந்திரமாக வெளியில் சுற்ற, ஆசை உண்டா அந்துமணிக்கு?
சுதந்திரமாகத் தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்; என் முகம் வெளியில் யாருக்கும் தெரியாது!
ஏ.கணபதி, நெல்லை: ஒரு மனிதனுக்கு நன்மை செய்வது எது?
எதிரியை மன்னிக்கும் குணத்தைப் போல், மனிதனுக்கு நன்மை செய்வது எதுவும் கிடையாது!
* வி.கவுதம சித்தார்த், விழுப்புரம்: வேலைக்கு போகும் ஆண்கள், பெண்களில், அதிக சிரமத்திற்கு ஆளாவது யார்?
அனைவருமே விருப்பப்பட்டு தானே செல்கின்றனர். இதில் சிரமம் ஏது?
மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் மட்டும், சட்டம் - ஒழுங்கு சரியாகி விடுமா என்ன?
கையூட்டு பெறும் வரை, எதுவுமே சாத்தியமில்லை!
அம்பை தேவா, சென்னை: அதிகாலையில் யாரிடமிருந்து, 'குட் மார்னிங் மெசேஜ்' வருகிறது? நீங்கள் யாருக்காவது, 'மெசேஜ்' போடுவது உண்டா?
அதிகாலை, 3:30 மணிக்கே முதல், 'குட் மார்னிங் மெசேஜ்' வந்து விடும். குறைந்தது, 20 பேரிடமிருந்து தொடர்ந்து, 'மெசேஜ்' வரும். நான், காலை, 6:30 மணிக்கு முன்பாக அனைவருக்கும், 'குட் மார்னிங்' அனுப்பி விடுவேன்!