sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆண் மனம், பெண் மனம்!

/

ஆண் மனம், பெண் மனம்!

ஆண் மனம், பெண் மனம்!

ஆண் மனம், பெண் மனம்!


PUBLISHED ON : ஜூலை 21, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போன் பேசி முடித்து, ''நான் எதிர்பார்க்காத மாதிரி, ஆனா, நீ பயந்த மாதிரி நடந்து போச்சு சுதா,'' கவலையுடன் சொன்னார், சீதாராமன்.

''மாப்பிள்ளை வீட்டிலிருந்து போன்ல என்ன சொன்னாங்க? அதை முதல்ல சொல்லுங்க. இந்த அனாவசிய பீடிகையெல்லாம் வேணாம்,'' எரிச்சல் படர அவசரப்பட்டாள், சுதா.

எதிரில் அவரது முகத்தையே ஆவலுடன் பார்த்தபடி நின்றிருந்த, மூத்தவள் இந்துமதியையும், இளையவள் அஞ்சலியையும், தர்ம சங்கடமாக உணர்ந்தார்.

எதையும் தவிர்க்க முடியாது என்பது உறைக்க, பேசித்தான் ஆக வேண்டும் என முடிவெடுத்தபடி, நிமிர்ந்து உட்கார்ந்தார்.

''அவங்களுக்கு, நம் இந்துமதியை விடவும், அஞ்சலி பொருத்தமா இருப்பான்ற மாதிரி தோணுதாம். அதனால, மூத்தவளுக்கு பதிலா இளையவளை கல்யாணம் பண்ணி வைக்க முடியுமான்னு...'' முடிக்க முடியாமல், தலைகுனிந்து கொண்டார்.

''நினைச்சேன்...'' தலையில் அடித்துக் கொண்டாள், சுதா.

அங்கே இருக்கப் பிடிக்காமல் மன வேதனையுடன் அறைக்குள் நுழைந்தாள், இந்துமதி. அஞ்சலியோ திகைத்து நின்றாள். தன் மீது தவறு இல்லாவிட்டாலும், தானே குற்றவாளி என்பது போல அவள் மனம் குமைந்தது.

''இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா, சுதா? ஒருத்தரைப் பெண் பார்க்க வந்துட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமான்னு, 'ஈசியா' கேட்கறாங்க பாரு,'' ஜீரணிக்க முடியாமல், அதிர்ச்சி விலகாதவராக அங்கலாய்த்தார், சீதாராமன்.

''அன்னைக்கே நான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் கேட்டீங்களா... அஞ்சலியை சினிமாவுக்கோ, தோழி வீட்டுக்கோ அனுப்பி வைங்க; அவள் வீட்டுல இருக்க வேணாம்ன்னு சொன்னேன். என் பேச்சை, நீங்க மதிச்சா தானே?''

இந்த குழப்பத்திற்கெல்லாம் அவர் தான் காரணம் என்பதாக குற்றம் சாட்டினாள், சுதா. புடவையை அணிந்து மங்களகரமாக இந்துமதியும், சுடிதார் அணிந்து, 'மாடர்னாக' அஞ்சலியும், பெண் பார்க்கும் சடங்கில் வளைய வந்தபோது, வந்தவர்களின் பார்வை யார் மீது போகும்?

தன் தலை உருட்டப்படுவது புரிய, அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் அறைக்குள் நுழைந்தாள், அஞ்சலி.

''நான் எதிர்பார்த்தேனா இப்படி நடக்கும்ன்னு... யாராவது வேணும்ன்னே இப்படி செய்வாங்களா?'' என்றார், பரிதாபக் குரலில்.

''எல்லாமே எதிர்பார்க்கணும்ங்க; எல்லாத்துக்கும் எப்பவும் தயாரா இருக்கணும். மனசை குரங்குன்னு சொல்லுவாங்க. ஆனா, அதையும் தாண்டி மோசமானதா அது மாறிக்கிட்டிருக்கு. அடுத்த நொடி என்ன நடக்கும், அது என்ன நினைக்கும், என்ன செய்யும்ன்னு யாராலயும் கணிக்கவே முடியாது.''

''என்ன, நீ அவங்களுக்கு சாதகமாகவே பேசற,'' எரிச்சலானார், சீதாராமன்.

''நீ கூடத்தான் உங்க குடும்பத்துல மூத்தவ; உனக்குப் பின்னாடி ரெண்டு தங்கச்சிங்க இருந்தாங்க. உன்னைப் பெண் பார்க்க வந்தப்ப, அவங்களும் உன் கூடத்தானே இருந்தாங்க. நாங்க எல்லாரையும் தானே பார்த்தோம். ஆனா, இப்படி மனசு மாறினோமா, மாத்திப் பேசினோமா? பார்க்க வந்த உன்னைத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.''

சுதாவுக்கு ஆயாசமாக இருந்தது. இவருக்கு என்ன சொல்லி புரிய வைக்க? காலம் மாற மாற, சூழல்கள் ஒரு மனிதனை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கின்றன என்ற நுட்பத்தை, இந்த பாழாய்ப் போன மனிதர் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்?

தன்னைப் போலவே எல்லாரும் நேர் வழியில் சிந்திப்பர், நாணயத்துடன் நடந்து கொள்வர் என, எதிர்பார்ப்பது எத்தனை பெரிய மடத்தனம்.

''ஆனா சுதா, எனக்கொண்ணு புரியலை, நம் ரெண்டு பெண்களும் ஒரே மாதிரி தானே இருக்காங்க... அழகுல, படிப்புல, திறமையில ரெண்டு பேரும் சரிசமமாதானே இருக்காங்க. எனக்கெதுவும் வித்தியாசம், முரண்பாடு தெரியலை.

''ஆனால், அடுத்தவங்க பார்வை மட்டும் ஏன் இப்படி உசத்தி, தாழ்த்தின்னு பிரிச்சு, ஒப்பிட்டு வேற மாதிரி பார்க்குறாங்க,'' என்றார், சீதாராமன்.

ஒரு ஆணுக்கு, ஒரு வாய்ப்பு தான் எனும்போது, அது வேண்டாம், வேண்டும் என்று எளிதாக முடிவெடுத்து விடுகிறான். ஆனால், இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் சூழலில் எது சிறந்தது என, வேறு விதமாக ஒப்பிடத் துவங்கி விடுகிறான். இதுதான் அவன்!

''தரகர் அவ்வளவு துாரம் நல்லவிதமா சொன்னாரே... நல்ல மனுஷங்க, நல்ல வேலைன்னு அளந்தாரு. அவர் பேச்சை நம்பி தான், ஜாதகம் கிடைச்சு, பொருத்தம் திருப்தியாகி, இந்துமதி போட்டோவை அனுப்பினோம். ரெண்டு முறை போன்ல பேசி, ஓ.கே.,ன்னு சொன்ன பிறகு தானே இந்த பெண் பார்க்கிற விஷயத்துக்கே நாம தலையாட்டினோம்.

''இப்போ கடைசி நேரத்துல இப்படி சொன்னா என்ன அர்த்தம்? கூச்சமில்லாம இப்படிக் கேட்குறாங்களே, பெண்ணைப் பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்ன்னு யோசிக்கத் தெரியாதா?'' பேசப் பேச அழுது விட்டாள், சுதா.

ஏதாவது மேற்கொண்டு பேசி, அலசி ஆராய்ந்தால், மகள்கள் இருவருமே வேதனைப்படுவர். அவர்கள் வீட்டில் இல்லாதபோது இதுபற்றி பேசலாம் என முடிவெடுத்தார்.

''சரி, இதைப் பற்றி அப்புறம் பேசுவோம்,'' என்றார்.

எழுந்து, பின் கட்டுக்கு சென்றாள், சுதா.

அறைக்குள் வேதனையுடன் அமர்ந்திருந்த அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தாள், அஞ்சலி.

''சாரிக்கா, என்னால தானே...'' என்றாள், மெல்லிய குரலில்.

''சீ லுாசு, இதுக்கு நீ என்னடி பண்ணுவ,'' புன்னகைக்க முயன்றாள், இந்துமதி.

''நான் அன்னைக்கு இருந்திருக்க கூடாதுக்கா. ஏதோ ஒரு ஆர்வத்துல...''

''ப்ச் விடுடி. பெண் பார்க்கிறப்போ நீ இல்லேன்னாலும், நிச்சயம் செய்கிற போது, கல்யாணத்தின் போது, ஏன் காலம் முழுக்க, நீ இருந்துதானே ஆகணும். அப்போ என்ன பண்றதாம்? இப்படியும் மனிதர்கள் இருக்காங்கன்னு நிராகரிச்சுட்டுப் போறது தான், நம் மன நிம்மதிக்கான ஒரே வழி.''

''நீ, சைக்காலஜி படிச்சது சரிதான்க்கா,'' என்று சொல்லி, இந்துமதியை அணைத்துக் கொண்டாள், அஞ்சலி.

''இதனால எல்லாம் நான் உன்னை வெறுத்துடுவேன்னு நினைச்சுடாத, அஞ்சலி. எதையும் குழப்பிக்காம இரு. நமக்கு என்ன செய்யணும்ன்னு, நம்மளைப் பெத்தவங்களுக்குத் தெரியும்,'' என்றாள் தெளிவாக.

அடுத்த வாரமே, சஷ்டி தினத்தன்று, சுப்ரமணிய சுவாமி கோவிலில், தன்னை பெண் பார்க்க வந்த சதீஷை, திரும்பவும் சந்திப்போம் என எதிர்பார்த்திருக்க வில்லை, இந்துமதி.

அந்த நேரத்தில், சில நிமிடங்கள் மட்டுமே பார்க்கப் பட்டவன், சரியாக அவள் மனதில் பதிந்திருக்க வில்லை. தவிர, நாட்களின் இடைவெளியில் அவன் முகம் மறந்திருந்தது.

''நல்லா இருக்கீங்களா?'' என்றபடி, அவனே தேடி வந்து, பேசினான்.

அடையாளம் உணர்ந்து, ஒரு நொடி திகைத்தாலும், சமாளித்தவாறே தலையாட்டி புன்னகைத்து, அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லாமல், அமைதியாக நின்றிருந்தாள், இந்துமதி.

''நீங்க, ரெகுலரா இங்கே வருவீங்களா? நான் இன்னைக்கு தற்செயலா தான் வந்தேன். தனியாவா வந்திருக்கீங்க, சிஸ்டர் வரலை?'' பார்வை அலைபாய்ந்தது.

''ஒரு, 'ஆல்டர்நேட்டிவ் ஐடியா' சொல்லி இருந்தேன், தரகர்கிட்ட. சொன்னாரா, உங்ககிட்டே இருந்து இன்னும் எதுவும் பதில் வரலையே,'' என துண்டித்து, துண்டித்து பேசினான்.

''பதில் தானே வேணும்,'' பின்னாலிருந்து வந்தாள், அஞ்சலி.

''ஓ... ஹேய், நீங்களும் வந்திருக்கீங்களா. அக்காகிட்ட கேட்டேன். சொல்லவே இல்லை,'' என, வழிந்தான்.

''சார், உங்களுக்கான பதிலை, அப்பா போன்ல சொல்வாரு. அஞ்சலி, நீ வா போகலாம். திரை போட்டுருவாங்க,'' கிளம்ப முயற்சித்தாள் தங்கையுடன்.

''இருக்கா, ஆசையோட பேச வந்துருக்காரு. அவரை ஏமாத்தலாமா?''

''சொன்னா கேட்க மாட்டியா? சரி, நீ இருந்து பேசிட்டு வா. சோமநாதர் சன்னதியில் இருக்கேன்,'' என, நகர்ந்தாள்.

சதீஷ் வாய்ப்பை வீணடிக்க விரும்பாமல், ''இந்த கதர் புடவை, உங்களுக்கு அழகா இருக்கு,'' என்றான்.

''ம், என்ன கேட்டீங்க. பதில் தானே? எங்க வீட்டுல எல்லாருக்குமே உங்க ஐடியா ஓ.கே., தான். உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சு, மாப்பிள்ளையா ஏத்துக்கறதுல சந்தோஷம் தான்.''

''மைகாட். தேங்க் யூ அஞ்சலி,'' சிலிர்த்தான்.

''பட், என்னைத் தவிர. நான் தான் வேணாம்ன்னு மறுத்து, அவங்க முயற்சியை தடுத்து நிறுத்திட்டேன்.''

''ஏன்?'' அதிர்ச்சியுடன் பார்த்தான்.

''அன்னைக்கு உங்க கூட இன்னொருத்தர் வந்திருந்தாரே. ரெட் கலர், 'டீ சர்ட்'ன்னு நினைக்கிறேன். ப்ரென்ச் தாடி.''

''ஆமா, கிஷோர், என் சித்தி பையன்; தம்பி முறை, ஐ.டி.,ல இருக்கான். துணைக்கு வந்திருந்தான்.''

''யெஸ், எனக்கு அவர் மேல ஒரு, 'இன்ட்ரஸ்ட்!' உங்களை விட அவரோட, 'காம்பினேஷன்' எனக்கு பொருத்தமா இருக்கும்ன்னு படுது.''

''அவன் சின்னப் பையன். இன்னும் ஜாதகமே எடுக்கலை!''

''ஸோ வாட், எனக்கும் கூடத்தான் இன்னும் ஜாதகம் எடுக்கலை, நீங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்கலை?''

''ஆனால், நான் தானே பெண் பார்க்க வந்தேன்.''

''ஆனால், என்னைப் பார்க்க வரலையே. அக்காவைத்தானே பார்க்க வந்தீங்க?''

'இவள், தன்னை கலாய்க்கிறாளா?' பதில் பேசாமல், எங்கோ பார்த்தான்.

''நான் பேசறது தப்பா, உங்களுக்கு ஏதாவது உறுத்தலா இருக்கா? எங்க அக்காவோட மனநிலை எப்படி பாதிச்சிருக்கும்ன்னு இப்ப உணர்றீங்களா... உங்க அதிகப் பிரசங்கித்தனமும், ஆர்வக் கோளாறும் உண்டாக்கின தவறு புரியுதா?

''உங்களால எங்க குடும்பத்துல உண்டான அதிர்ச்சியும், வேதனையும் இன்னும் மாறலை. தயவுசெய்து இனி அடுத்த இடங்களில் பெண் பார்க்கப் போனா, அவங்களை மட்டும் பாருங்க. தேவையில்லாம கவனத்தை திசை திருப்பி, குழப்பம் உண்டாக்காதீங்க. பை...'' சுருக்கமாக, ஆனால், தெளிவாகப் பேசி, திரும்பிப் பார்க்காமல் நடந்து, பிரகாரத்திலிருந்த அக்காவுடன் இணைந்து கொண்டாள்.

''என்னடி?'' என்றாள், இந்துமதி.

''ஒண்ணும் இல்லை, ஒரு அதிர்ச்சி வைத்தியம்!'' கண்ணடித்து சிரித்தாள், அஞ்சலி.

நித்யா






      Dinamalar
      Follow us