
அ.குணசேகரன், புவனகிரி: 'மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம்...' என்று கூறும் திராவிட மாடல் அரசுக்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டும் கடைசி மதுக்கடையை தமிழகத்தில் மூடுவதற்கு?
அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை மூடப் போவதில்லை!
ஜெ.ரவிக்குமார், காங்கேயம்: எதை விடக் கூடாது என, பிடிவாதமாக இருக்கிறீர்கள்?
பா.கே.ப., மற்றும் கேள்வி - பதில் எழுதுவதை விடக் கூடாது என, பிடிவாதமாக இருக்கிறேன்!
* மஞ்சுதேவன், பெங்களூரு: 'ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்...' என்று, திருமாவளவன் கூறியுள்ளாரே?
அவரது சொப்பனம் தான் அது!
கே.சுரேஷ், சென்னை:'தினமலர்' நாளிதழில், 'டீக்கடை பெஞ்சு' பகுதியில் வெளியாகும் தகவல்களில் சம்பந்தப்பட்டவர்கள், அதைப் படிப்பரா?
அரசியல்வாதிகளும், வாசகர்களும் முதலில் படிப்பது, அந்த பகுதியை தான்!
* டி.எஸ்.நடராஜன், சென்னை:ஜனாதிபதியாக கனிமொழியும், பிரதமராக ஸ்டாலினும், முதல்வராக உதயநிதியும் பதவி ஏற்பது போல கனவு கண்டேன். என் கனவு பலிக்குமா?
இப்படியெல்லாம் கனவு கண்டு, உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்!
பிரான்சிஸ்கா, சென்னை:பா.கே.ப., பகுதியில் வெளியாகும் புகைப்படத்தில் உங்களுடன் இருப்பவர்கள் அனைவரும், வி.ஐ.பி.,கள் தானே...
என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அனைவரையும், வி.ஐ.பி.,களாக நினைத்துக் கொள்ளுங்கள்!
மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: ஞாயிறன்றும், 'இ-மெயிலில்' வரும் கேள்விகளை, அன்றே படித்து விடுவதாக, 'அந்துமணி பதில்கள்' பகுதியில் கூறியுள்ளீர். அப்படியானால், ஞாயிறு அன்று உங்களுக்கு விடுமுறை கிடையாதா?
ஆண்டின், 365 நாட்களும் வேலை தான்; அது தான் எனக்குப் பிடிக்கும்!

