
பா - கே
'டிவி' சேனல் ஒன்றில், ராசி பலன் சொல்லும் ஜோசியர் ஒருவர், மூத்த செய்தியாளரை சந்திக்க, அலுவலகம் வந்திருந்தார். லென்ஸ் மாமாவுக்கும் அறிமுகமானவர் தான் அவர்.
'ஓய்... (பெயரை குறிப்பிட்டு) என்ன இந்த பக்கம்? வாரும் வந்து இப்படி உட்காரும்...' என, தன் அருகில் இருந்த நாற்காலியை நகர்த்தி போட்டார், மாமா.
'எப்போதும், 'டிவி'யில சீரியசான மேட்டரே சொல்லிட்டு இருக்கிறீரே... உம்ம பக்கத்துல, நகைச்சுவையான மேட்டர் எதுவும் இல்லையா?' என்றார், லென்ஸ் மாமா.
'இருக்கே... நானும் ரொம்ப நாளா ஒரு விஷயத்தை யாரிடமாவது சொல்லணும்ன்னு தான் இருந்தேன். இப்ப நீரே கேட்டு விட்டீர்...' என்று கூற ஆரம்பித்தார், ஜோசியர்:
ஜோசியர் ஒருவர் இருந்தார். எதைப் பார்த்தாலும், அதை அலசி ஆராய்வது அவர் வழக்கம். ஒருவரது தலைமுடியை கொண்டே, அந்த ஆசாமியின் ஜாதகத்தை அலசி, அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லி விடுவார்.
ஒருநாள், ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்றார், அவர். அப்போது, அங்கு மண்டை ஓடு ஒன்றை பார்த்து, அதோட ஜாதகத்தை ஆராய்ந்தார்.
இந்த மண்டை ஓட்டுக்கு உரியவர், வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார். அது தாங்க முடியாமல் தான், தற்கொலை செய்து, இறந்து போயுள்ளார் என்பதை கணித்தார். இருப்பினும், இந்த மண்டை ஓடு இன்னமும் அனுபவிக்க வேண்டியது பாக்கியிருக்கிறது என்பதையும் உணர்ந்தார்.
ஒருவர், உயிரோடு இருக்கும் போது தான், நல்லது, கெட்டது அனுபவிக்க முடியும். இறந்த பிறகும் கஷ்டத்தை அனுபவிக்க முடியுமா என, எண்ணினார்.
சரி, வீட்டுக்கு சென்று, நிதானமாக ஆராய்வோம் என்று கையோடு மண்டை ஓட்டை எடுத்துச் சென்று, தன் அறையில் வைத்து, பாதுகாத்தார். தன் மனைவியை அந்த அறை பக்கம் நெருங்கவிடவில்லை. தினமும் இரவானால், அந்த மண்டை ஓட்டை எடுத்து ஆராய்ந்து வந்தார்.
இது, அவர் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, தன் பக்கத்து வீட்டம்மாவிடம் புலம்பினாள்.
'நான் கண்டுபிடித்து சொல்கிறேன்...' என்று, ஜோசியரின் மனைவியை சமாதானப்படுத்தினாள்.
அன்று இரவு, பக்கத்து வீட்டம்மா, ஜோசியர் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். ஜோசியரோ, மண்டை ஓட்டை கையில் பிடித்தபடி, ஏதோ யோசனை செய்து கொண்டிருந்தார்.
இந்த விஷயத்தை மறுநாள், ஜோசியரின் மனைவியிடம் கூறி, 'உன் வீட்டுக்காரருக்கு, நீ இரண்டாவது மனைவியா?' என்று கேட்டாள், பக்கத்து வீட்டம்மா.
'நான் ஒருத்தி தான் அவருடைய மனைவி...' என்று இவள் கூற, 'நீ அவருக்கு, இரண்டாவது மனைவியாகத்தான் இருக்கணும். அதான், தினமும், ராத்திரியில் இறந்து போன, தன் முதல் மனைவியின் மண்டை ஓட்டை எடுத்து, பார்த்துட்டு இருக்கிறார்...' என்று ஒரு, 'பிட்'டை போட்டு சென்றாள், அந்த அம்மா.
'அப்படியா விஷயம். என்ன செய்கிறேன் பார்...' என்று, கணவர் இல்லாத நேரமாக, அந்த அறைக்குள் சென்று, மண்டை ஓட்டை எடுத்து வந்து, உலக்கையால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தார்.
அச்சமயம், வெளியே போன ஜோசியர் உள்ளே வர, மண்டை ஓடு உலக்கையால் அடி வாங்கிட்டு இருப்பதை பார்த்து விட்டார்.
அது அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கு என்பதற்கான அர்த்தம், இப்போது அவருக்கு புரிந்தது.
- இப்படி கூறி முடித்ததும், கண்ணில் நீர் வரும் அளவுக்கு வெடி சிரிப்பு சிரித்தார், லென்ஸ் மாமா.
ப
துணை மின் நிலையத்தில் பணிபுரியும் அந்துமணி வாசகர் நாராயணன், மின் அஞ்சலில் அனுப்பிய கடிதம் இது:
தனியார் நிறுவனத்தின் முதன்மை அலுவலர் ஒருவர், பொறியியல் முடித்து வரும் இக்கால மாணவர்களின் மனநிலையை பற்றி கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனேன். துணை மின் நிலைய கட்டுமான மற்றும் டெஸ்ட்டிங் உள்ளிட்ட வேலைகளுக்கு, ஏகப்பட்ட மின் பொறியாளர்களின் தேவை உள்ளது. எனவே, 20 ஆண்டுகளுக்கு முன், தான் படித்த பொறியியல் கல்லூரியில், 'கேம்பஸ் இன்டர்வியூ'க்கு ஏற்பாடு செய்து, பொறியாளர்களை தேர்வு செய்யச் சென்றிருக்கிறார், அந்த அலுவலர்.
இது, இந்தியா முழுவதும் பயணப்பட வேண்டிய ஒரு வேலை. ஆங்காங்கே தங்கி, துணை மின் நிலைய கட்டுமானம் மற்றும் அன்றாட பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டும். தங்குவதற்கு இடம், சாப்பாடு முதற்கொண்டு அனைத்தையும் நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.
ஆரம்பத்திலேயே மாத சம்பளம், 30 ஆயிரம் ரூபாய். இதுபோக, நிறைய, 'அலவன்ஸ்'களும் உண்டு. ஆனால், இந்தியா முழுவதும் சுற்றும் மற்றும் திட்டம் நடைபெறும் இடத்திலேயே தங்கி வேலை செய்ய வேண்டும் என்பதால், நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இளம் மின் பொறியாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறதென்றால், கஷ்டப்படாமல் அதாவது, நோகாமல் நோன்பு கும்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர். 20 பொறியாளர்கள் தேவை என்ற பட்சத்தில், 12 பேர் மட்டுமே தேர்வாகி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கோல்கட்டாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
'என்னால் வேலை செய்ய முடியவில்லை...' என, இரண்டே நாட்களில் கழண்டு கொண்டனர், ஆறு பேர். இவர்களை நம்பி வேலை எடுத்த நிறுவனத்தின் கதி என்ன என்று கூட, இவர்கள் யோசனை செய்யவில்லை. மின் பொறியாளர்கள் கிடைக்காமல் தடுமாறி வருவது தான் நிதர்சனம்.
சரி... இவர்கள் எல்லாம் எங்கு தான் வேலைக்கு போவர் என்று கேட்டால், அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சி அளித்தது.
'சுவிக்கி'யில் வேலைக்கு சேர்ந்தால், கமிஷன் உட்பட கிட்டத்தட்ட மாதம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருகிறது. அதனால், உணவு டெலிவரிக்கு போவதற்கு தயாராக இருக்கின்றனர். ஆனால், மூளையை கசக்கி செய்யும் வேலை, இவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
நல்லதொரு வருங்காலம் உள்ள பொறியியல் துறையில், நல்ல வேலை கிடைத்தும் போகாதவர்களை என்னவென்று சொல்வது! இப்படியே டெலிவரி பாயாக எத்தனை காலம் ஓட்ட முடியும். தொடர்ச்சியாக வாகனத்தை ஓட்டும் போது, உடல்நிலை பாதிக்கும் என, இவர்களுக்கு புரியவில்லை.
முதன்மை அலுவலரிடம், 45 நிமிடங்கள் பேசியதில், இளம் பொறியாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றாக படிக்கும், 'கிரீமிலேயர்' பொறியியல் மாணவர்கள், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். மீதமுள்ளவர்களுக்கு, எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், அவ்வளவு தான்!
சமீபத்தில், 'இந்தியாவில் ஏகப்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையுள்ளது. ஆனால், வேலைக்கு தகுந்த ஆட்கள் கிட்டுவதில்லை...' என, பிரபல, 'எல் அண்டு டி' நிறுவனத்தின் செயல் தலைவர் சுப்ரமணியன் கூறியிருந்தது, நினைவு கூரத்தக்கது.
நம் பொருளாதாரம் முன்னேற அடிப்படை தேவை, திறனுள்ள பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தான். இதை எவ்வாறு அணுகப் போகிறோம் என்பதில் தான், நமது பொருளாதார முன்னேற்றம் உள்ளது, என்றார், அந்த முதன்மை அலுவலர்.
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.