/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (10)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (10)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (10)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (10)
PUBLISHED ON : அக் 06, 2024

கல்யாண பரிசு படம், 100 நாட்கள் ஓடியிருந்தது. இதை கொண்டாட கன்னட பத்திரிகைகாரர்கள் அனைவரும் சேர்ந்து, விழா எடுக்க நினைத்துள்ளனர். இதுபற்றி முன்பே என்னிடம் சொல்லி இருக்கலாம்; சொல்லவில்லை.
ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டு வந்து, விஷயத்தை கூறினர். அந்த சமயம் எனக்கு, சென்னையில் படப்பிடிப்பு இருந்தது.
எக்காரணம் கொண்டும் படப்பிடிப்பை தவிர்க்க கூடாது, தாமதமாக போகக் கூடாது என்பதில், நான் உறுதியாக இருந்தேன். அதனால், படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னைக்கு புறப்பட்டு விட்டேன்.
நிர்வாகிகள் சிலர், கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதையும் மீறி, நான் புறப்பட்டது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
'இது நம்ம பொண்ணு' என்ற அபிமானம், அவர்களுக்கு போய் விட்டது. இதனால், 'சரோஜாதேவியை புறக்கணிப்போம்...' என, அறிவித்தனர்.
அதன் விளைவாக, என் படம் பற்றிய செய்திகள், எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. என் படத்தின் விமர்சனங்களையும் கர்நாடகப் பத்திரிகைகள் புறக்கணித்தன. இதை மாற்றி கொடுத்தவர், பி.ஆர்.பந்துலு தான். அவருடைய, கிட்டூர் சென்னம்மா படம் தான் நிலைமையை மாற்றியது.
கன்னடத்தில், ராஜ்குமாருடன் நடித்த, அண்ணா தங்கை படம், பிரமாதமாக வந்திருந்தது. மக்களுக்கும், என் கதாபாத்திரம் பிடித்திருந்ததால், படம் நன்றாக ஓடியது.
பெண்ணியப் பாத்திரதாரி பாத்திரத்தை நன்றாக செய்திருப்பதாக, பத்திரிகையில் எழுதினரே தவிர, சரோஜாதேவி என்ற பெயரை குறிப்பிட வில்லை.
பி.ஆர்.பந்துலு, கிட்டூர் சென்னம்மா படம் எடுப்பதற்காக, என்னை அணுகினார். அதற்கு முன், அவருடைய, ஸ்கூல் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்திற்கு அகில இந்தியாவின் மெரிட் சான்றிதழும் கிடைத்திருந்தது.
கிட்டூர் சென்னம்மா படத்துக்காக, பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார், பந்துலு.
'பாருங்கப்பா, நம் பொண்ணு நம்மிடம் சிக்காமல் சென்னையில் போய் சிக்கியிருக்கிறாள். அங்கிருந்து மீட்டு வந்திருக்கிறேன். இனிமேல் தப்ப முடியாது. பழசையெல்லாம் மறந்து விடுங்கள்.
'கர்நாடகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், கிட்டூர் சென்னம்மா படத்துக்கு இவரை ஒப்பந்தம் செய்துள்ளேன். கோபத்தை எல்லாம் விட்டு, உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்...' என்றார்.
அதன் பின்னரே, பத்திரிகையாளர்களின் கோபம் தணிந்தது.
பத்திரிகையாளர் மீது எனக்கு எந்தவொரு கோபமும் இல்லை. அதனால், என்னைப் பொறுத்தவரை ஒரு பிரச்னையும் இல்லை.
கிட்டூர் சென்னம்மா என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம்.
நான் ஏற்று நடித்த கேரக்டர்களில், மகள், மனைவி, தாய், தேசத்தின் ராணி என, எல்லாப் பாத்திரங்களிலும் சோபிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிட்டூர் சென்னம்மா படத்துக்காக, வாள் சண்டை, குதிரை ஏற்றம் எல்லாம் கற்றுக் கொண்டேன். இந்த பாத்திரத்திற்காக என்னைப் பெரிதாகத் தலையில் துாக்கி வைத்து கொண்டாடினர், கர்நாடக மக்கள். சினிமா தொடர்பான என் எல்லா விருப்பங்களையும் இந்தப் படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு விபத்தையும் சொல்ல வேண்டும். குதிரை விரைந்து வந்து நிற்க, அதிலிருந்து நான் இறங்க வேண்டும். இது தான் காட்சி. ஆனால், குதிரை நிற்காமல், சுற்றி சுற்றி வந்தது. நானும் அதனுாடாகவே சுழன்றேன்.
நல்ல வேளையாக யாரோ ஓடி வந்து, குதிரையை இழுத்து பிடித்து நிறுத்தினர்.
கொஞ்சம் அசந்திருந்தாலும், அங்கிருந்த கல்லில் என் தலை மோதி உடைந்திருக்கும். அப்படியெல்லாம் நேராமல், நல்ல வேளை, நான் தப்பித்தேன்.
கிட்டூர் சென்னம்மா படத்தில், 'உனக்கெதற்கு கொடுக்க வேண்டும் கப்பம்?' என, பிரபலமான வசனம் வரும்.
பந்துலுவும், அவரது உதவியாளரான புட்டண்ணா கனகலும், அந்த வசனத்தை இன்னும் கொஞ்சம் ஆவேசமாக பேசக் கூறி, படமாக்கினர். அந்த காட்சியை இப்போது நினைத்தாலும், அன்றைக்கு பேசிய அதே ஆவேசம் வருகிறது.
கல்யாண பரிசு படத்தின், ஹிந்தி, 'ரீ-மேக்' தான், நஸ்ரால் என்ற படம். ராஜ்கபூர், கதாநாயகன், நான் கதாநாயகி என்று முடிவானது. அவரைப் போன்ற பிரபல கதாநாயகனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக, நான் சந்தோஷப்பட்டேன். எட்டு, 'ரீல்'கள் எடுத்திருந்தனர்.
படப்பிடிப்பில், என்னை, 'பேபி' என்று அழைப்பார், ராஜ்கபூர். வேறு படத்தில் நடிப்பதற்காக சென்றார், ராஜ்கபூர்.
அச்சமயம், எல்லாரும் இந்நாட்டு மன்னர் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பின் இடையே செட்டில், தீ விபத்து ஏற்பட்டது. நான் நடுவில் சிக்கி, எப்படியோ காப்பாற்றப்பட்டேன். ஆனாலும், என் உடம்பில் ஆங்காங்கே தீக்காயங்கள் ஏற்பட்டதால், பெங்களூரு கிளம்பி வந்து விட்டேன்.
பிறகு, ராஜ்கபூர் தேதி கிடைத்ததும், 'நீங்களும் படப்பிடிப்புக்கு வர வேண்டும்...' என்று, அழைப்பு விடுத்தனர்.
'நான் சில தினங்கள் கழித்து வருகிறேன்...' என்றேன்.
அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
தொடரும்
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
எம்.ஜி.ஆர்., - சிவாஜி, என்.டி.ஆர்., - ராஜ்குமார், ஜெமினி கணேசன், திலீப்குமார் மற்றும் சுனில் தத் என, எல்லாருடனும் ஜோடியாக நடித்ததோடு, அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களையும் கற்றுக் கொண்டேன். பாகப் பிரிவினை படத்தில் நடித்ததற்காக, 1959ல் ஜனாதிபதியிடமிருந்து பதக்கம் கிடைத்தது. அப்போது நான் மிகவும் சிறியவள்; அதன்பின், நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
எஸ். விஜயன்