
வாழ நினைத்தால் வாழலாம்!
சமீபத்தில், ஒரு வார பயணமாக, தமிழகத்திலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு, குடும்பத்தோடு சென்று வந்தேன்.
நீர்வீழ்ச்சி அமைந்திருக்கும், ஓர் ஊருக்கு சென்றபோது, நாங்கள் காரை விட்டு இறங்கியதும், ஒரு தம்பதி எங்களை அணுகினர்.
ஹோட்டலில் சாப்பிடுவதை விட, தேவைப்படும் உணவு வகைகளை கூறி, அதற்கான பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டால், தங்கள் வீட்டில் சமைத்து கொடுப்பதாகவும், அதற்கான கூலியாக, குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கவும் வேண்டினர்.
அது நல்ல யோசனையாக இருக்கவே, அதே போல், அவர்களிடம் பொருட்களை வாங்கிக் கொடுத்து, நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றோம்.
குளித்துவிட்டு வந்ததும், நாங்கள் சொன்ன மெனுவை தயார் செய்து, அந்த தம்பதியின் வீட்டில் வைத்து, சுடச்சுட உணவு பரிமாறினர்.
அவர்களிடம் அதுபற்றி வினவினோம்.
'நாங்கள், நடுத்தர குடும்பத்தினர் தான். வீட்டின் முன் இருக்கும் பெட்டிக் கடையும், அரைத்து விற்கும் இட்லி மாவும் தான் எங்களின் வாழ்வாதாரம். இதில் வரும் வருமானம் போதவில்லை.
'இது சுற்றுலா இடமாக இருப்பதால், சுற்றுலா பயணியருக்கு சமையல் செய்து கொடுத்து சம்பாதிக்க முடிவு செய்தோம். இப்போது, இந்த கூடுதல் வருமானம் கைகொடுத்து உதவுகிறது...' என்றனர்.
வாழ நினைத்தால் வாழலாம் என்பதற்கேற்ப, உழைப்பை நம்பி வாழும் அவர்களுக்கு ஊக்கம் தரும் பொருட்டு, அவர்கள் கேட்ட நியாயமான தொகையோடு, கூடுதலாகவே பணம் கொடுத்தோம்.
— எஸ்.நாகராணி, மதுரை.
பெண் என்றால் இளக்காரமா?
என் அண்ணன் மகளின் திருமணத்திற்கு, 10 நாட்கள் இருக்கவே, அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது.
'இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை; திருமணத்தை நிறுத்தி விடலாம்...' என்று, வெகு சாதாரணமாக கூறினான், மாப்பிள்ளை.
திருமணத்திற்காக, 25 லட்சம் ரூபாய் செலவு செய்து இருந்தோம்.
'போலீசில் புகார் அளிக்கலாம்; செலவுகளை எல்லாம் கேட்டு வாங்கலாம்; எல்லாரும் அவர்கள் வீட்டுக்கு போய் பேசி அசிங்கபடுத்தலாம். அப்போது தான் இன்னொரு பெண்ணுக்கு இப்படி செய்யாமல் இருப்பான்; பொண்ணுங்கன்னா இவனுக்கு அவ்வளவு இளக்காரமா... அப்படி என்ன எங்கள் பெண் மீது குறை...' என, சொந்தங்களும், நட்புகளும் கொதித்து எழுந்தனர்.
பெண்ணை, வீடியோ காலில் நிர்வாணமாக வர சொல்லியும், ஆபாசமாக போட்டோக்கள் அனுப்ப சொல்லியும் தொல்லை கொடுத்துள்ளான், மாப்பிள்ளை. இந்த விஷயத்தை மாப்பிள்ளையின் அம்மாவிடம் கூறியிருக்கிறாள், பெண். வீட்டில் அவனுக்கு சரியான, 'டோஸ்' விழுந்து இருக்கிறது.
அந்த ஆத்திரத்தில் தான், 'இந்த பெண் வேண்டாம்...' என்று திருமணத்தை நிறுத்தியிருக்கிறான். ஏற்கனவே, வேறு ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி, அவன் மீது போலீஸ் வழக்கு இருக்கும் விஷயம், மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் மூலம் தெரியவந்தது.
'ஒரு காம கொடூரனிடம் மாட்டாமல் பெண் தப்பித்ததே என்று சந்தோஷப்படுவோம். வேறு எந்த பிரச்னையும் செய்ய வேண்டாம்...' என்று கூறிவிட்டனர், பெண் வீட்டார். அனைத்து உண்மைகளையும் சொல்லி, அதே முகூர்த்தத்தில் உறவுக்கார மணமகனுக்கு நிச்சயம் செய்தோம்.
— பி.ஷோபனா, கோவை.
ஓய்வு காலத்தில்...
கடந்த, 2010ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், வீட்டு வாசலில் உள்ள நடை பாதையில், துளசி, கற்பூரவள்ளி மற்றும் நித்யகல்யாணி செடிகளை, தொட்டியில் வளர்க்க ஆரம்பித்தார், கணவர்.
'இவைகளை பராமரிப்பது எளிது. ஆனால், அவைகளின் மருத்துவ குணங்கள் அசாத்தியமானது...' என்று கூறுவார்.
அவர் கூறியது போலவே, தெருவில் வசிப்போர், துளசி, கற்பூரவள்ளி இலையை பறித்து இருமல், காய்ச்சலுக்கும் மற்றும் நித்யகல்யாணி பூவை, புற்றுநோய் சிகிச்சைக்கும் எடுத்துச் செல்கின்றனர்.
மேலும், ஆண்டு முழுவதும், குறிப்பாக கோடை காலத்தில், மண் பானையில் தண்ணீர் வைத்து, ஏலக்காய், வெட்டிவேர், நெல்லிக்காய் போட்டு குளிர்ந்த நீரை, தபால்காரர், கூரியர், காய்கறி, பழ வியாபாரிகள் மற்றும் குப்பை அள்ளுபவருக்கும் வழங்குவார். எல்லாரிடமும் மிகுந்த நெருக்கமாகி, நட்பு வட்டம் பெரிதாகியது.
இதற்கு, அவர் கூறும் தாரக மந்திரம், 'நர சேவை நாராயணன் சேவை...' என்பார்.
இதுபோன்று நட்பு வட்டத்தை வளர்த்துக் கொண்டால், வெறுப்பு, பொறாமை, வன்மம் போன்ற தீய குணங்களிடமிருந்து விடுபடலாம் என்பதை, நானும் உணர்ந்தேன்.
எல்லாரும் நடைமுறைப்படுத்தலாமே!
— வி.தேவகி, சென்னை.

