
கே.காசி, திருவண்ணாமலை: சின்ன வயதில், அப்பா சட்டையில் இருந்து பணம் எடுத்ததுண்டா?
அம்மாவிடம் கேட்பேன்; அப்பா பையிலிருந்து எடுக்க மாட்டேன். அம்மா, தன் காத்ரெஜ் பீரோவில் வைத்திருக்கும் வெள்ளி கும்பாவிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொல்வார்; நான் கேட்ட அளவு மட்டுமே, எடுத்துக் கொள்வேன்!
* தி.நா.பஞ்சாபகேசன், சென்னை: தமிழகத்திலேயே பலராலும் அறியப்படாத திருமாவளவனும், அவருடைய கட்சியும் மஹாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சாதிக்கப் போவதென்ன?
நீங்களே சொல்லி விட்டீர்கள், தமிழகத்திலேயே திருமாவளவனை பலரும் அறியவில்லை என்று! மஹா.,வில் ஒரு ஓட்டு கூட விழாது!
* வி.ஜெயசீலி, சென்னை:சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள், பெரும் பிரச்னையாக உருவெடுப்பதாக, தென் மாநில டி.ஜி.பி.,களின் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி?
இவரே, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தான், பல கருத்துக்களையும் பதிவிடுகிறார்!
ந.மாலதி, துாத்துக்குடி: மது ஒழிப்பு கோரிக்கை எழுந்துள்ள நிலையில், 'டாஸ்மாக்' கடைகளில் கூடுதல் கவுன்ட்டர்கள், பல இடங்களில் க்யூ.ஆர்., கோடு வசதிகள் அறிவித்திருப்பது பற்றி?
ரேஷன் கடைகளில் நிற்கும் வரிசைகள், அரசு கண்களுக்குப் புலப்படவில்லை போலும்!
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி: தீபாவளி பண்டிகைக்கு, பொதுமக்கள் வெளியூர் செல்வதற்காக, தமிழக அரசு, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க வேண்டியதன் அவசியம் என்ன?
கிட்டத்தட்ட, 10 லட்சம் பேர், வெளியூர் சென்று திரும்ப வேண்டுமே... நல்ல ஏற்பாடு தான்!
கண.கணேசன், திருச்சுழி, விருதுநகர்: ஆங்கிலம் சரளமாக பேச வரவில்லை என்பது, வாழ்க்கை முன்னேற்றத்துக்கு தடையாக இருக்குமா?
இருக்காது! ஆங்கிலம் தெரியாமலேயே பலரும் சாதித்து இருக்கின்றனர். மேலும், மொழிபெயர்ப்புக்கு இப்போது ஏராளமான வசதிகள் வந்துவிட்டதே!
எம்.மனோகரன், ராமநாதபுரம்:சென்னையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு முன், மழை பெய்யும் போதெல்லாம் நீர் தேங்குகிறதே...
மழைநீர் வடிகால் பணி, 'மிகச் சிறப்பாக' நடந்துள்ளதற்கான, மிகச் சிறந்த சான்று இது!