sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பாலாம்பாள்!

/

பாலாம்பாள்!

பாலாம்பாள்!

பாலாம்பாள்!


PUBLISHED ON : நவ 03, 2024

Google News

PUBLISHED ON : நவ 03, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அம்மா! மெதுவா என் கையை பிடிச்சுண்டு, பார்த்து படி ஏறுங்கோ, நிதானமா வாங்கோ,'' என, மாமியார் பாலாம்பாளின் கையை பிடித்து, அன்போடு கூறினாள், டாக்டர் கவுரி.

''கவுரி, நான் எதுக்குடி இந்த விழாவுக்கெல்லாம். பெரிய படிப்பு படிச்ச மனுஷாள், பெரிய பெரிய ஹாஸ்பிடல் டாக்டர் எல்லாம் வந்திருக்கா. இவங்க இருக்கற இடத்துல நான் எதுக்குடி? இவாள்ள ஒருத்தரை வைச்சு புது வார்டை திறக்க சொல்லலாமே,'' என, நார்முடி முட்டாக்கை இழுத்து விட்டு, தயக்கத்துடன் கூறினார், பாலா மாமி.

''அம்மா கொஞ்சம் சும்மா இருங்கோ... எதுவும் பேச வேண்டாம். நீங்க தான் ரிப்பன் வெட்டி திறக்கணும். உங்க கையால திறந்து வைச்சு, ஆசீர்வாதம் பண்ணுங்கோ,'' எனக் கூறி, மாமியாரின் கையில் சிறிய வெள்ளிக் கத்திரிக்கோலை கொடுத்து, 'ஸ்ரீபாலா மகப்பேறு புதிய பிரிவு கட்டடம்' என்ற இடத்தை திறக்க சொன்னாள், டாக்டர், கவுரி.

பாலா மாமி, ரிப்பன் வெட்டியதும் அனைவரும் கை தட்டினர். உள்ளே வந்ததும் வெள்ளி குத்து விளக்கில், ஐந்து முகங்களையும் மாமியாரையே ஏற்றச் சொன்னாள், கவுரி.

''என்னடி, கவுரி நான் எப்படிடி ஏற்றுவது. யாராவது ஒரு பெரிய மனுஷா கையாலே ஏத்த சொல்லுடி,'' என, கூச்சப்பட்டாள், மாமியார்.

''அம்மா! நீங்க தான் ஏத்தணும்,'' எனக் கூறி, மெழுகுவர்த்தியை மாமியார் கையில் கொடுத்தாள், கவுரி.

சுற்றியிருந்த அனைவரும், பாலாம்பாள் மாமியை ஆச்சரியமாகவும், கவுரவமாகவும் பார்த்து வணங்க, தன் நார்முடி முட்டாக்கை சரி செய்தபடியே இருக்கையில் அமர்ந்தார்.

''கவுரி கூச்சமா இருக்குடி! நான் ஆத்துக்கு கிளம்பட்டுமா,'' என, கேட்ட மாமியாரை சிரித்தபடியே கை அமர்த்தினாள், கவுரி.

விழாவிற்கு வந்த மருத்துவர்களும், சிறப்பு விருந்தினர்களும் உரையாற்றிய பின், நன்றியுரை கூற மேடையில் ஏறினாள், டாக்டர் கவுரி.

''இந்த மருத்துவமனை உருவாக என் பங்கு-, சேது பாலத்தில் அணிலின் பங்கு போன்றது தான். என்னுடைய இந்த பேரும், புகழும், படிப்பும், தகுதியும் என்னை பெறாத அன்னையாகிய மாமியார், ஸ்ரீமதி பாலாம்பாள் அவர்களையே சாரும். அவர் இல்லை என்றால், இந்த இடத்தில் நான் இல்லை,'' என சொல்லும் போது, அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

பதினேழு வயதான, கவுரி, பிளஸ் 2 முடித்தவுடனேயே திருமணமாகி, கணவருடன் புகுந்த வீடு சென்றவளுக்கு மனதில் பயம் தான் இருந்தது. அவள் கணவன் சங்கரன், எம்.எஸ்சி., முடித்து, தனியார் கம்பெனியில், சூப்பர்வைசராக பணிபுரிந்தான். கை நிறைய சம்பளம்.

கோவில் குருக்களான, கவுரியின் அப்பா, பாலாம்பாள் மாமியிடம் பேசி, ஜாதகம் பார்த்தார். பொருத்தம் அமைந்தவுடன், பாலாம்பாள் மாமி, 'உங்க சக்திக்கு முடிஞ்சதை செய்யுங்கோ! தகப்பன் இல்லா குழந்தை அவன்...' என கூற, அடுத்த முகூர்த்தத்திலேயே, கவுரி - சங்கரன் திருமணம் நடந்தது.

'வலது காலை எடுத்து வைச்சு அம்பாளை வேண்டிண்டு உள்ளே வாடிம்மா...' என, மாட்டுப்பெண்ணை அதிகார தோரணையில் மாமியார் அழைத்த போதே, கவுரிக்கு உடம்பு நடுங்கியது.

பால்யத்தில் விதவையானவள், பாலாம்பாள். அந்த வீட்டின் அடுப்பங்கரை தான் புகலிடம்.

'கவுரி, நீ சின்ன பொண்ணு. ஸ்கூல் போயிட்டு இருந்த குழந்தை. சமையல் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ ஓய்வா இரு. புத்தகம் படி.

'காலையிலேயும், சாயங்காலத்துலேயும் உன் கையாலே கோலம் போட்டு, பூ சாத்தி அம்பாளுக்கு பூஜை பண்ணு. மத்ததை நான் பார்த்துக்கறேன்...' என, பாலாம்பாள் கூறியதும், கவுரிக்கு புது தெம்பு பிறந்தது.

அந்த வீட்டின் பிரச்னையே, சங்கரனின் பாட்டி அதாவது, பாலாம்பாளின் மாமியார் தான். எதற்கெடுத்தாலும் கோபப்படுவாள். ஒரே பேரன் என்பதால் அதிக செல்லம் கொடுத்து, சங்கரனை கெடுத்து வைத்திருந்தாள்.

படித்து வேலையில் இருந்தாலும், எல்லா கெட்ட பழக்கமும் அவனிடம் உண்டு. தீய சகவாசம். இதற்கு நடுவில், கவுரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த, ஆறாவது மாதம் நண்பனின் திருமணத்திற்கு பைக்கில் சென்றபோது விபத்தில் பலியானான், சங்கரன்.

பிள்ளை போன துக்கத்தை விட, கவுரியின் நிலையை பார்த்து பதறினாள். இருதலை கொள்ளி எறும்பாய் துடித்தாள். ஆறு மாத கைக்குழந்தை தகப்பன் முகம் பார்க்காமல் தவிக்குமே என புலம்பினாள். கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டாள், பாலாம்பாள்.

பத்தாம் நாள் உறவினர்கள் கூடினர். அன்று சாஸ்திரம், சம்பிரதாயம் என்ற பெயரில், பாட்டி படுத்திய பாடு கடவுளுக்கே பொறுக்காது. நாவிதரை விடியற்காலையில் அழைத்து வேகமாக வந்தாள், பாட்டி.

'என்ன பண்ண போறேள்?' என, குரலை உயர்த்தினாள், முதல் முறையாக, பாலாம்பாள்.

'என்னடி பாலா? மட்டு மரியாதை இல்லாம, பெரியவான்னு கூட பாக்காம நடுவில் நின்று கூச்சல் போடற? உன் பையனுக்கு அல்ப ஆயுசு போயிட்டான். இவ முடியை இறக்கி சம்பிரதாயம் செய்யணும். இவ மூலைல உட்கார வேண்டியவ தானே...'

'என்ன சொன்னேள்? இவ மூலைல உட்காரணுமா? நான் ஒருத்தி மொட்டை அடிச்சுண்டு உட்கார்ந்தது இந்த ஆத்துக்கு போறாதா? இவளையும் ஜோடி சேர்க்கணுமா? பால் குடி மறக்காத குழந்தையை வைச்சுண்டு அவளை பின்னம் பண்றேள். மொட்டை அடிக்கற வயசா அவளுக்கு?' என, பாலாம்பாள் கூறியதும், சாஸ்திரிகள் எழுந்தார்.

'ஊர்ல, உலகத்துலே நடக்காததா? சாஸ்திரப்படி தான் இந்த அக்ரஹாரத்தில் எல்லாமே? புருஷன் போனப்புறம் பூ, பொட்டுமா அவ இருக்க முடியுமா? என்னம்மா இதெல்லாம்?' என்றார்.

'ஒரு பொம்மனாட்டி உன்னால என்ன பண்ண முடியும்? ஒதுங்கி நில்லு...' என்றனர், பெரியவர்கள்.

'அவ தலையில கை வச்சேள்னா அடுத்த நிமிஷமே, கிணத்துல குதிச்சு என் பிராணனை விட்டுடுவேன். எனக்கு தகனம் பண்ணிட்டு பிறகு சாஸ்திரபடி எல்லாம் பண்ணுங்கோ...' என்றாள், பாலாம்பாள்.

கவுரியின் தாயும், தந்தையும் விக்கித்து நின்றனர்.

தன் நகைகளையும், கவுரியின் சான்றிதழ்களையும் வாங்கி கொண்டு, மூட்டை முடிச்சுகளோடு வீட்டை விட்டு கிளம்பினாள், பாலாம்பாள்.

'இங்க பாருங்கோ, இனி இந்த ஆத்துக்கு நாங்க வரமாட்டோம். பட்டணத்துக்கு கிளம்பறோம். பிரசவம் பார்க்குற டாக்டருக்கு இவளை படிக்க வைச்சு, பெரிய டாக்டராக்குவேன்.

'எந்த சபையில இவளை குனிய வைச்சு அசிங்கப்படுத்தினேளோ, அதே சபையில நீங்க அத்தனை பேரும் நிமிர்ந்து பார்க்குற டாக்டரா இவ வருவா. என் பேரன் வக்கீலா வந்து, உங்களை கேள்வி கேட்பான்...' எனக் கூறி, பட்டணத்திற்கு வந்தாள்.

சென்னை வந்த பாலாம்பாளும், கவுரியும் துாரத்து உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். மாட்டுப்பெண் கவுரியை, தன் மகளாக்கி கொண்டாள். கற்பகாம்பாளை மனதில் வேண்டி, கையில் கரண்டியை எடுத்தாள்.

எத்தனையோ வீடுகளில் அடுப்படியில் வெந்தாள், சீர் பட்சணம் செய்தாள். கல் உரலில் மாவு அரைத்தாள். மடப்பள்ளியில் காய்கறி நறுக்கினாள். கல்யாண சத்திரங்களில் பந்தி பரிமாறினாள். ஒன்றா, இரண்டா! அன்று, பாலாம்பாள் எடுத்த சபதம், அடுத்த ஆறு ஆண்டுகளில் நிறைவேறி, மருத்துவர் ஆனாள், கவுரி.

இத்தனை விஷயங்களையும் டாக்டர் கவுரி, கண்களில் நீர் பெருக கூறியதை கேட்ட அனைவரும் உறைந்து போயினர்.

''நான், எம்.பி.பி.எஸ்., முடித்ததும் அம்மா, என்னிடம், 'கவுரி, உனக்கு என்னடி அப்படி வயசாயிற்று. எத்தனையோ பரந்த மனசுள்ள மனுஷா எல்லாம் இருக்கா. மறுபடியும் உனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ...' என, பெருந்தன்மையா சொன்னாள்.

''எனக்கு நீங்கள், என் பையன், மருத்துவம் மூன்றும் தான் உலகம்ன்னு சொல்லிட்டேன். இன்றுவரை என் மங்கல சின்னங்களை நான் இழக்கவில்லை,'' எனக் கூறினாள்.

''அம்மா இங்கே வாங்கோ,'' என்று அழைத்து, ''இந்த உயர்வை எனக்கு கொடுத்த அம்மாவுக்கு நமஸ்காரம் பண்ணி, பாதபூஜை செய்யறேன்,'' என நமஸ்கரித்தாள், கவுரி.

உணர்ச்சி பெருக்கில் கைகளை, கவுரியின் தலையில் வைத்து ஆசீர்வதித்தாள், பாலாம்பாள்.

''அம்மா நீங்க இரண்டு வார்த்தை பேசுங்கோ,'' என்றதும், 'மைக்' அருகில் வந்தார், பாலாம்பாள்.

''எல்லாருக்கும் என் நமஸ்காரம். நான் என்னவோ பெரிசா பண்ணதா, கவுரி சொல்றா? அவளுக்கு, சரஸ்வதி கடாட்சம் கை கூடி வந்திருக்கு. இந்த படிப்புக்கு அவள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கா தெரியுமா?

''காலேஜ் போற நாள் தவிர, மத்த நாட்களில் என்னோட சமையலுக்கு வருவா. கல்யாண கூடங்களில் கிலோ கணக்கில காய்கறி நறுக்குவா. குழந்தையை மடியில வச்சுண்டு கண்விழிச்சு படிச்சா.

''ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணெயில் வெந்து, பட்சணம் பண்ணி கொடுப்பாள். உங்க டாக்டருக்கு நாடி பிடிச்சு வைத்தியம் பார்க்கவும் தெரியும். நுாறு பேருக்கு பக்குவமா சமைச்சு போடவும் தெரியும்.

''உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன். பெண் குழந்தைன்னு மட்டமா நினைக்க வேண்டாம். சாஸ்திரம், சம்பிரதாயம்ன்னு மூலையில் முடக்க வேண்டாம். அவர்களுக்கு வித்யாபலத்தை கொடுங்க. கணவன் கை விட்டாலும், கல்வி கை விடாது.

''கிராமத்தை விட்டுட்டு பட்டணம் வந்தபோது, 'அம்மா நார்முடி முட்டாக்கை எடுத்துட்டு எல்லாரையும் போல புடவை கட்டிக்கோங்க'ன்னு சொன்னா! எந்த கோலம் என்னை மூலையில உட்கார வைச்சதோ, அதே கோலம் உன்னை ஒருநாள் மூலை முடுக்கெல்லாம் பேசற டாக்டரா உயர்த்தும்ன்னு ஆறுதல் சொன்னேன்.

''இந்த கோலம் எனக்கும், உனக்கும் பாதுகாப்புன்னு சொன்னேன். அன்னைக்கு தைரியமா கரண்டி பிடிச்சேன். இன்னைக்கு மாட்டுப்பொண்ணு டாக்டராயிட்டா. என் பேரன் வக்கீல் ஆயிட்டான். சொந்தமா ஹாஸ்பிட்டல் கட்டிட்டோம். பட்ட கஷ்டமெல்லாம் கரைஞ்சு போயிட்டுது. மறுபடியும் சொல்றேன்.

''-நன்னா படிச்சு, பொண்ணுங்க எல்லாம் முன்னுக்கு வாங்கோ. பெத்தவாளை மறக்காதீங்க. பெரியவாளை மதிங்க. சொந்த காலில் நில்லுங்க. பாரதி பாடின புதுமை பெண்ணா வலம் வாங்க. உங்க லட்சியத்தை கை விடாதீங்க.

''நீங்க எல்லாரும் அமோகமா வாழ, நான் இந்த நேரத்துல கற்பகாம்பாளை பிரார்த்தனை பண்ணிக்கறேன்,'' என்று பேசி முடித்தார், பாலாம்பாள்.

கை தட்டினால் அது, அவரது வயதுக்கு செய்யும் அவமரியாதை என நினைத்த அவையோர், கண்ணீர் மல்க எழுந்து நின்று கை கூப்பினர்.

சபையில் அனைவருக்கும், 80 வயதான பாலாம்பாள் பாட்டியாக தெரியாமல், அஞ்ஞானத்தை அழித்து, ஞானத்தை புகட்டிய, பால திரிபுர சுந்தரியாக காட்சி தந்தாள்.



வி.பத்மாவதி

வயது: 47, படிப்பு: எம்.ஏ., எம்.பில்., - பி.எட்., (தமிழ்), பி.ஏ., - பி.எட்., ஹிந்தி. பணி: தனியார் பள்ளி ஆசிரியை.

இவரது படைப்புகள், பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன; பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

கதைக்கரு உருவான விதம்: இன்று, தகவல் தொழில்நுட்பத்தோடு கைக்கோர்த்தாலும், ஆங்காங்கே, சம்பிரதாயம், மதம் என, முக்கியத்துவம் பெற்று, பெண்களுக்கு இழைக்கப்படும் வேதனைகளை நேரில் கண்டதில் ஏற்பட்ட கருவே, கதையானது.

பெண்கள் முன்னேற்றத்துக்கு, கல்வியே அடித்தளமாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டவே, இக்கதை எழுதப்பட்டது.






      Dinamalar
      Follow us