
* ஆர்.ராஜேஸ்வரி, வேங்கைவாசல், சென்னை: பெரும்பாலான தமிழ், 'டிவி'களில், செய்தி வாசிப்பவர்கள், 'ழ'கர உச்சரிப்பை, 'ல'கரம் போட்டு பேசுகின்றனரே...
பள்ளிகளில், ஆரம்பக் கல்வி கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களே, உச்சரிப்பு சரியாக இருக்கும் வகையில் பேசுவதும் இல்லை; சொல்லித் தருவதும் இல்லை. அது தான் பிரச்னை!
ந.மாலதி, துாத்துக்குடி: என்னைப் போன்ற புதியவர்கள், 'வாரமலர்' இதழுக்கு சிறுகதை அனுப்பினால், பரிசீலனைக்கு எடுக்கப்படுமா?
'வாரமலர்' இதழுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சிறுகதையும், தவறாமல் படிக்கப்படும். இதற்கென, ஐந்து பேர் அடங்கிய குழு உள்ளது.
அந்தக் குழு, சிறந்த கதைகளைத் தேர்வு செய்து, பொறுப்பாசிரியருக்கு அனுப்பும். அவற்றுள், பிரசுரமாக வேண்டிய கதைகளை, அவரே இறுதி முடிவு செய்து கொடுப்பார்!
யாமினி கவுதம், பெங்களூரு: நீங்கள், வெஜிடேரியன்; லென்ஸ் மாமா, 'உற்சாக'மான, நான் - வெஜிடேரியன்... எப்படி சமாளிக்கிறீர்கள்?
அவர், 'உற்சாக'மாக இருக்கத் தொடங்கும் போதெல்லாம், அங்கிருந்து, 'நைசாக' நகர்ந்து விடுவேன்!
ஆர்.ஹரிகோபி, புதுடில்லி: 'என் மாநிலத்தில், மூன்று மொழியல்ல... 10 மொழிகள் கூட படிக்க வேண்டும் எனக் கூறுவேன்! நன்றாக படியுங்கள்; கிடைத்த இடத்தில் பணிபுரியுங்கள். தாய் மொழி, அறிவை வளர்க்க உதவும்; மற்ற மொழிகள், பணிபுரிய உதவும்...' என, கூறியிருக்கிறாரே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...
மிக நல்ல அறிவுரை! மாநிலமும், நாடும் முன்னேற, சரியான கோணத்தில் சிந்திக்கிறார்!
ஜி.அர்ஜுனன், அவிநாசி, திருப்பூர்: உ.பி.,யில் 45 நாட்கள் நடந்த, மஹா கும்பமேளாவில், 65 கோடி பேர் கலந்து கொண்டதாகவும், ஒரு திருட்டு, வழிப்பறி, பாலியல் சீண்டல் எதுவும் நடக்கவில்லை என்றும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி இருக்கிறாரே...
சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, அரசுக்கு மிக நல்ல வருமானமும் பார்த்து விட்டார், யோகி. வாழ்த்துக்கள்!
ஆர்.வித்யா, பள்ளிக்கரணை, சென்னை: நடிகராக இருந்து, அரசியலுக்கு வந்ததில், உதயநிதிக்கும், விஜய்க்கும் என்ன வித்தியாசம்?
உதயநிதிக்கு, பின்புலத்தில் கட்சியும், அப்பாவும் இருக்கின்றனர்; விஜய்க்கு, புகழ் மட்டும் இருக்கிறது. மக்கள் யாருக்கு அதிக மதிப்பு கொடுக்கப் போகின்றனர் என்பது, அடுத்த தேர்தலில் தெரிந்து விடும்!
* எஸ்.விஜயகுமார், நங்கநல்லுார், சென்னை: சிறுவர், சிறுமியருக்கு இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தைக் கொடுத்து ஓட்டச் சொல்லும் பெற்றோருக்கு, என்ன தண்டனை கொடுக்கலாம்?
பெற்றோரின் லைசென்சை பறித்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது!
அ.ஐஸ்வர்யா, ராமநாதபுரம்: சுனாமியால் பெற்றோரை இழந்த, பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து வைத்துள்ளாரே, ஐ.ஏ.எஸ்., ராதாகிருஷ்ணன்?
மனித நேயமிக்க அவரது செயலை, மனதார பாராட்டுவோம்! இவர் போன்ற ஐ.ஏ.எஸ்.,கள் நாட்டுக்கு தேவை!