PUBLISHED ON : மார் 16, 2025

முன்கதைச் சுருக்கம்: சென்னையில் தங்கி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்தாள், கயல்விழி. கயல்விழியின் தம்பி, மேல் ஜாதிக்காரரான ஊர் தலைவரின் பெண்ணை அழைத்துக் கொண்டு, ஊரைவிட்டு ஓடிவிட்டான். இந்த தகவலை, கயல்விழிக்கு போன் செய்து, புலம்பினாள், அவளது அம்மா. அப்போது, ஊர் தலைவருக்கு வேண்டப்பட்டவர்கள், 'உன் மகன் எங்கே?' எனக் கேட்டு, கயல்விழியின் அம்மாவை உதைத்தனர். அவரது அலறலை போனில் ஒலிக்க கேட்டு பதறி, ஊருக்கு செல்கிறாள், கயல்விழி.
ஊருக்கு செல்ல, பேருந்தில் ஏறிய, கயல்விழி, தன் அப்பாவை நினைத்துப் பார்த்தாள்.
இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான பின்னரே, அந்த கிராமத்தில் கீற்றுக் கொட்டகையில் நடத்தப்பட்ட, இரவுப் பள்ளிக்கூடத்துக்கு படிக்க போனாராம், அப்பா.
கொள்கை பிடிப்பு கொண்ட தோழர்களால் ஆரம்பிக்கப்பட்டது, அந்த இரவு பள்ளி. வீடு வீடாக போய் படிப்பற்றவர்களையும், ஊர் சுற்றித்திரிந்த சிறுவர் - சிறுமிகளையும் அழைத்து வந்து, உட்கார வைத்து எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தனர்.
ஆரம்பத்திலேயே அம்மா சொன்னாளாம்.
'நமக்கு எதுக்கு புஸ்தகமும், மண்ணாங்கட்டியும்? ஒண்ணும் வேணாம். ஒழுங்கா நம்ம ஜோலியைப் பார்த்துக்கிட்டு, ரெண்டு குழந்தைங்களையும் வளர்த்து ஆளாக்குவோம்...'
ஆனால், அப்பா கேட்கவில்லையாம்.
'நீ சொன்ன மண்ணாங்கட்டியாகத்தான், இவ்வளவு காலமும் என் மூளையை வச்சுக்கிட்டிருக்கேன். இனிமே அந்த மண்ணாங்கட்டியை உடைச்சு, உழுது, விளை நிலமாக்கப் போறேன்...'
சொன்னது மாதிரியே செய்தும் காட்டினார். வெகு சீக்கிரமே எழுதப் படிக்க கற்றுக் கொண்டார். ஓலை வேய்ந்த கட்டடத்தில், தோழர்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் வயதில் மட்டுமின்றி, எண்ணங்களாலும் முதிர்ந்த மாணவர் இவரே. அங்கு கூடிய, தோழர்களின் பேச்சுக்களை ஊன்றி கவனித்து உள்வாங்கிக் கொண்டார்.
கேள்விகள் கேட்டு, அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் காரணமாக, தோழர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. தங்களிடமிருந்த புத்தகங்களையெல்லாம் படிக்கக் கொடுத்தனர். அவரைத் தங்களில் ஒருவனாகவே பாவித்தனர். பாடிகோடா என்ற பெயரை மாற்றி, 'நீ, இனி தோழர் அன்பரசன்...' என்றனர்.
அன்றிலிருந்து, அன்பரசன் என்ற பெயர், தோழர் கூட்டத்தில் முக்கியமானதாக ஆயிற்று. எல்லா கூட்டத்திற்கும் அவரையும் அழைத்து போயினர். மேடை ஏற்றி பேச வைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர் முக்கிய பேச்சாளராகவும் ஆனார்.
தான் போன கூட்டத்திற்கெல்லாம், கயல்விழியையும் அழைத்து போனார். போகும் போதும், வரும் போதும் அவளிடம் நிறைய பேசினார்.
'இதைப் பாரும்மா, கயல். நீ, நிறைய படிக்கணும். படிச்சு கலெக்டராகணும். நம்ம மாவட்டத்துக்கே வரணும். ஒவ்வொரு ஏழை குடும்பத்தையும் நீ, கை துாக்கி விடணும். நம் இனத்து மக்களை உயர்த்தணும்.
'அடுத்தவங்களை உயர்த்தணும்ன்னா, முதலில் நாம உயரணும். நீ உயர்ந்தால் தான், மத்தவங்களை உயர்த்த முடியும். எப்போதும் உயர்ந்ததை நினைக்கணும். உயர்ந்ததை எட்டிப் பறிக்கவே ஆசைப்படணும்...' என்றார்.
அப்பா அதைச் சொன்னபோது அவளுக்கு, 'ஜோனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்' புத்தகம் ஞாபகத்துக்கு வந்தது. சென்னையிலிருந்து வந்து, மூன்று மாதங்கள் கிராமத்தில் தங்கி, ஆங்கிலம் போதிக்க தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர், அவர் போகும்போது அவளுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டுப் போன புத்தகம், அது.
'ரிச்சர் பாக் என்பவர், எழுதிய புத்தகம் இது, கயல். படித்துப் பார்த்து, இது சொல்ற விஷயத்தை எப்பவும் மனசுல வச்சுக்க. நீ ரொம்ப கொடுத்து வச்சவ. அருமையான அப்பா உனக்கு. உன்னை அந்தக் கூட்டத்திலிருந்து பிரிச்சு தனியா கூட்டிட்டு வந்து, ஸீகல் மாதிரி பறக்க கத்துக் கொடுத்திருக்காரு. இனி, மேலே மேலே பறக்கத் தேவையானவை உன்னுடைய திறமை மட்டுமே...' என சொல்லியிருந்தார்.
அதைப் படித்த பின்னரே புரிந்தது, அப்பாவே ஒரு, ஸீகல் தான் என்பது.
ஒருமுறை, நரிக்குறவர்கள் மாநாடு கூட்டினார், அப்பா. சுற்றுப்புற கிராமங்களில் இருந்த அத்தனைக் குடும்பங்களையும் வரவழைத்து ஒன்றிணைத்தார். பந்தலும், சாப்பாடுமாக அமர்க்களப்பட்டது. கயல்விழியை மேடை ஏற்றி, அறிமுகம் செய்து வைத்தார்.
'இவளை உங்கள் எல்லாருக்கும் தெரியும். இவள் என் மகள் கயல்விழி. இவள் பள்ளி இறுதிப் படிப்போடு நின்று விடாமல், மேலும் படிப்பாள். உயர்ந்த படிப்பான, ஐ.ஏ.எஸ்.,சில் தேர்ச்சி பெற்று, மாவட்ட கலெக்டராக வருவாள். இது நிச்சயம்.
'என் மகளால் முடிகிற போது, நம் இனத்தில் பிறந்த அத்தனை பிள்ளைகளாலும் முடியும். ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே படிக்கும். வரும் தலைமுறைகள் மொத்தமும் படிக்கும். படித்தால் மட்டும் தான் உயர முடியும். உயர முடிந்தால் மட்டுமே, மற்ற ஜாதிக்காரர்களை போல் நாமும் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.
'நமக்கு ஜாதி சான்றிதழ் வேண்டும். பட்டா நிலம் வேண்டும். குடிசையும், கூடாரமும் போய், சிமென்ட் கட்டடம் வேண்டும். கழிப்பறை வேண்டும். அடையாள அட்டை, ரேஷன் கார்டு எல்லாம் வேண்டும். கடைசியாக பயிரிட, காணி நிலமாவது வேண்டும்.
'நம்ம கூட்டம் மட்டும், இப்படி ஊர் எல்லையில், ஒதுக்குப்புறமாக, தனியாக வாழாமல், ஊரோடு ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்...'
இந்த மாநாட்டின் முடிவில் தான், அப்பாவின் இறுதித் தீர்ப்பு எழுதப்பட்டது. ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி தீர்மானித்தனர்.
ஊர் குமைந்தது. ஒவ்வொரு வருக்குள்ளும் கோபம் கொந்தளித்தது. ஆளாளுக்குப் பேசினர். நாலைந்து பேராக வயல் வெளியிலும், குளத்தங்கரையிலும், மாந்தோப்பிலும், ஏரிக்கரையிலுமாக சேர்ந்து விவாதித்தனர். பின்னர், ஒட்டுமொத்தமாக எல்லா ஆண்களும் ஒன்று கூடினர்.
அதன்பின், கடைசியாக பேசி ஊர் தலைமை முடிவு செய்தது. நாலைந்து பேரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
மாநாடு முடிந்த, மூன்றவது நாள் இரவு, தோழர்களிடம் பேசி விடைபெற்ற பின், தனியாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த அப்பா, வழி மறிக்கப்பட்டார். எட்டி உதைக்கப்பட்டவர், சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடியவரின் வெள்ளைச் சட்டை செந்நிறமாகியது. 12 இடங்களில் கத்திக்குத்து. கடைசியில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் வெட்டி வீசப்பட்டது. உயிரற்ற சடலத்தை கூட, ஆக்ரோஷமாக மிதித்து துவைத்தனர். தோழர்களின் ஓலைக் கூரை கட்டடத்திற்கு தீயிட்டு சாம்பலாக்கிய பின்னரே ஓய்ந்தனர்.
அன்றைய தினத்தோடு, நரிக்குறவர்களின் குரல் முற்றிலும் ஒடுக்கப்பட்டது. சாட்சி சொல்ல யாரும் முன் வராததால், ஒருவரும் கைது செய்யப்படவில்லை. 'பைல்' மூடப்பட்டது.
நரிக்குறவர் குடும்பங்கள் அந்த ஊரை விட்டு வெளியேறி, அக்கம்பக்கத்து கிராம புறம்போக்கு நிலத்தில், குடிசையும், கூடாரமும் போட்டுக் கொண்டனர். கொழுந்து விட்டு எரிந்த அந்த கிராமத்து நெருப்பு, தற்காலிகமாக அணைக்கப்பட்டது.
'நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இப்போது, கணேசன் பற்ற வைத்திருக்கிறான். அப்போது, அப்பாவை பறி கொடுத்தாயிற்று. இப்போது, அம்மாவை பறிகொடுத்து விடுவோமோ...'
கயல்விழியின் அடிவயிற்றை பயம் கவ்விக் கொண்டது.
பேருந்தினுள் முன்னும் பின்னும் நடந்து சென்று கொண்டிருந்த, இள வயது நடத்துனரின் பார்வை போகும் போதும், வரும் போதும், அவள் மீது பதிந்து மீண்டது.
அவளது கம்பீரமும், நாகரிகத் தோரணையும், அவள் ஒரு மருத்துவராகவோ, அரசாங்க உயரதிகாரியாகவோ இருக்க வேண்டும் என, முடிவு செய்தான்.
அப்பாவை போன்றே நல்ல உயரம், அவள். அப்பாவை விட நிறம். அவரைப் போலவே மை தீட்டப்பட்டதைப் போன்ற நீண்டகன்ற கண்கள். நீள நீளமான இமைகள். தீர்க்கமான நாசி. மெல்லிய உதடுகள். அடர்த்தியான கேசம்.
கஞ்சி போட்ட கைத்தறிப்புடவை. முழங்கை வரை நீண்ட கழுத்துயர்ந்த ரவிக்கை. எல்லாரையும் போல், அவள் இடது கையில் கடிகாரம் கட்டவில்லை. வலது கையில் கட்டியிருந்தாள். ஒரு துளி நகையற்ற எளிமையிலும், தோற்றத்திலும், பார்வையிலும் இருந்த கம்பீரம், டிக்கெட் கொடுக்க வந்தபோதே அவனைக் கைகூப்ப வைத்தது.
''எங்க போகணும், மேடம்?''
சொன்னாள்.
டிக்கெட் கொடுத்து விட்டு தன் இருக்கைக்கு சென்றான்.
கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். ஊர் போய் சேர, நிறைய நேரம் இருந்தது. நல்ல பகல் நேரம். ஆனால், மாலை நேரம் போல் இருண்டிருந்தது. மழை வருவதற்கான அறிகுறி தெரிந்தது. இரண்டு மூன்று நாட்களாகவே நல்ல மழை தான்.
அதற்குள் வானம், நன்கு இருட்டிக்கொண்டு விட்டது. சடசடவென்று தடிமனான துாறல்களை போடத் துவங்கின. பேருந்தின் அனைத்து ஜன்னல்களின் கண்ணாடி கதவுகளும் இழுத்து மூடப்பட்டதில், உள்ளே கதகதப்பு பரவியது.
சடாரென்று, 'பிரேக்' போடப்பட்டதில் குலுங்கி நின்றது, பேருந்து.
''என்ன ஆச்சு?''
நடத்துனரின் கேள்விக்கு பதில் சொல்வது போன்று, நாலைந்து முரட்டு ஆட்கள், வண்டியில் ஏறினர். இரண்டு, மூன்று பேர், வண்டியின் முன்னால் வழி மறித்து நின்றிருந்தனர். வண்டியில் ஏறிய ஆட்கள் நேராக கயல்விழியை நெருங்கி, ''எந்திரிடீ... கீழே இறங்கு,'' என அதட்டினர். பேருந்தில் இருந்த அனைவரும் மிரண்டு போயினர். ஆனால், யாருக்கும் எதுவும் கேட்கிற தைரியமில்லை.
''யார் நீங்க? எதுக்காக இவங்களை இறங்கச் சொல்றீங்க?'' எனக் கேட்ட நடத்துனரிடம், ''தம்பி வாயை மூடிக்கிட்டு சும்மா இரு,'' என்றான், ஒருவன்.
மிரண்டு போன கயல்விழி, இறங்கக் கூடாது என்ற உறுதியில், ஜன்னலை இறுகப் பற்றிக் கொண்டாள். முகத்தில் கலவரம் எட்டிப் பார்த்தது.
'ஒருவேளை, அம்மாவை அதட்டிய ஆட்களாக இருப்பரோ...'
''எந்திரிக்க மாட்டியோ?'' என்ற முரட்டுக் குரல், ஜன்னலில் இருந்து அவள் கையை அகற்றியது. மற்றொரு முரடன், அவளை பற்றி, இருக்கையை விட்டு வெளியே இழுத்தான்.
''ஐயோ... யாராவது காப்பாத்துங்களேன்...''
அபயம் வேண்டும் அந்த மென்குரலை தாங்க முடியாத நடத்துனர் உதவ வர, அவனது மார்புக்கு எதிராக கத்தி நீட்டப்பட்டது.
''ஏய், பெரிய, 'ஹீரோ' மாதிரி என்னடா துள்ளுற. ரெண்டு துண்டா வெட்டி போட்டு போயிடுவோம், ஜாக்கிரதை!''
கதறக் கதற அவளைக் கீழே இறக்கினர்.
கடைசியாக பேருந்தை விட்டு இறங்கியவன் கட்டளையிட, வண்டியை மறித்து முன்னால் நின்றவர்கள் விலகி, வழி விட்டனர்.
பயம் தெளியாமலேயே பேருந்தை கிளப்பினார், ஓட்டுனர்.
கொட்டும் மழையில் அவளை கீழே தள்ளினர். சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரிலும், சேற்றிலும் உடல் புரளப் புரள இழுத்து சென்றனர். பேருந்தின் பின்புறக் கண்ணாடி வழியாக அதைக்கண்ட ஓட்டுனரின் மனது பதைபதைத்து. பதட்டத்துடன் தன் கால் சட்டைப் பையிலிருந்து மொபைல் போனை எடுத்தான். கைவிரல்கள் நடுங்க எண்களை அழுத்தினான், நடத்துனர்.
''ஹலோ, கலெக்டர் சார் இருக்காங்களா?''
- தொடரும்இந்துமதி