
ந.மாலதி, துாத்துக்குடி: தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து, 'வாட்ஸ் - ஆப்'பில் அதிகம் வருமா, 'மெயிலில்' வருமா, போன் அழைப்பில் வருமா?
இவை மூன்றையும் தவிர, தபாலிலும் நிறைய பேர் வாழ்த்து சொல்வர்!
கே.குருசாமி, சுவிட்சர்லாந்து: பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து, அன்புமணி நீக்கப்பட்டுள்ளாரே... இனி, அக்கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கும்?
அப்பாவுக்கும், மகனுக்கும் கருத்து வேறுபாடு. இனி, குழப்பத்திலேயே காலம் கடத்த வேண்டி இருக்கும்; முன்னேற்றமே கிடையாது!
* எஸ்.தியாகராஜன், மாமல்லபுரம்: 'நீட்' தேர்வு பற்றி, பேராசிரியர் பாலகுருசாமி தெள்ளத் தெளிவாக விளக்கியதுடன், 'அரசியல் லாபத்திற்காக செய்யப்படும் பிரசாரங்களை நம்பாதீர்கள்...' என, கூறி விட்டாரே...
அவர் சொல்வது, நுாற்றுக்கு நுாறு உண்மை. 'நீட்' தேர்வை இனி ரத்து செய்யவே முடியாது. தரம் வாய்ந்த மருத்துவர் ஆக, மாணவர்கள் தயாராக தான் உள்ளனர்; அரசியல்வாதிகள் தான் மாணவர்களுக்கு துரோகம் செய்கின்றனர்!
பி.சிவா, நெல்லை: 'மாணவர்களின் தலையில், பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரை இடிந்து விழக் கூடாது என்ற காரணத்தால், மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன...' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறுகிறாரே...
அரசு பள்ளிக் கட்டடங்களின் அவல நிலையை, அவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டார்!
* டி.ஜெயசிங், கோவை: 'பெண்கள் துணிந்து புகார் கொடுப்பதால் தான், 'போக்சோ' சட்டம் நிறைய பேர் மீது பாய்கிறது...' என்கிறாரே, சட்ட அமைச்சர் ரகுபதி...
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. அரசைக் காப்பாற்ற, அமைச்சர் சப்பைக்கட்டு கட்டுகிறார்!
பா.அனுமந்த்ரா, கோவூர், சென்னை: பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்காக, தமிழகம் வந்த பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை வைக்காமல், விழாவை புறக்கணித்து விட்டு, டில்லியில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக, முதல்வர் கூறுகிறாரே...
பிரதமர், முதல்வரை சந்திக்க நேரம் கிடைக்காமல் தாமதமானால், அதை வைத்து அரசியல் செய்யலாம் என்ற, 'நல்லெண்ணம்' தான் காரணம்!
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: நைஜீரிய கொள்ளையர்கள், வட மாநில கொள்ளையர்கள், ஈரானிய கொள்ளையர்கள் எல்லாரும், தமிழகத்தையே சுற்றி வருவது ஏன்?
'மற்ற ஏர்போர்ட்களில் கெடுபிடிகள் அதிகம்; சென்னை ஏர்போர்ட்டில் நுழைவது எளிது. தமிழகத்தில் கொள்ளை அடிப்பதும் எளிது...' என, பிடிபட்ட அந்த ஈரானிய கொள்ளையன் தான், உண்மையை, 'புட்டு' வைத்து விட்டானே!