PUBLISHED ON : ஏப் 20, 2025

முன்கதைச் சுருக்கம்: உயிருக்கு ஆபத்தான நிலையில், கயல்விழியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த புகழேந்தி, மருத்துவரிடம், அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிறான். பாதிப்பு அதிகமாக இருப்பதால், சிறப்பு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர் என்கிறார், மருத்துவர்.
இதற்கிடையில், மாவட்ட எஸ்.பி., ஈஸ்வரியை அழைத்து, கயல்விழியை பற்றி சுருக்கமாக கூறி, 'இதை செய்தவர்கள் யார் என, கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முன், முதன்முதலில் தகவல் தெரிவித்தது, யார் என தெரிந்தால், இதற்கு காரணமானவர்களை சுலபமாக கண்டுபிடிக்கலாம்...' எனக் கூற, உடனடியாக விசாரிப்பதாக கூறி செல்கிறார், எஸ்.பி., ஈஸ்வரி.
களைப்புடன் வீட்டுக்கு வரும் புகழேந்தியிடம், 'யாரோ ஒரு பெண்ணுக்காக ஏன் இவ்வளவு அலைச்சல். உங்களுக்கும், அவளுக்கும் என்ன சம்பந்தம்...' எனக் கேட்டு வெறுப்பேற்றினாள், சுபாங்கி.
மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய புகழேந்தி, சாப்பிட்ட பின், மருத்துவமனைக்கு போன் செய்து, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண்ணைப் பற்றி விசாரித்தான். அச்சமயம் அங்கு வந்த சுபாங்கி, புகழேந்தியுடன் சண்டை போட்டாள்.
''ஏய் கிட்ட வராத. மரியாதை கெட்டுப் போயிடும்.''
''என்ன சுபா இதெல்லாம்?''
''நான் கேட்க வேண்டியதை, நீ கேட்கறியா? லேட்டா வருவேன்னு, எனக்கு ஒரு போன் பண்ணி சொல்ல முடியல. ஆனா, பாதி ராத்திரியில, யாரோ ஒருத்தின்னு சொல்லி அவளைப் பத்தி விசாரிக்க மருத்துவமனைக்கு போன் பண்ணுற...'' என்றவள், சட்டென்று, புகழேந்தி கையிலிருந்த மொபைலை பிடுங்கி, மாடியிலிருந்து கீழே வீசி எறிந்தாள்.
தரையில் விழுந்து, மொபைல் உடைந்து சிதறியது. சத்தம் கேட்டு பெரியவரும், வேலைக்காரனும் கதவு வரை வந்து எட்டிப் பார்த்து, பின் சரேலென்று தலையை இழுத்துக் கொண்டனர்.
அதை கவனித்து, குறுகிப் போனான், புகழேந்தி. மெல்ல படியிறங்கி வந்து, உடைந்து போன மொபைல் போனின், சிம் கார்டுகளை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டான்.
சன்னமான குரலில், 'முருகா...' என்று கூப்பிட்டான். சற்று முன் எட்டிப் பார்த்து, தலையை இழுத்துக் கொண்ட வேலையாள் ஓடி வந்து நின்றான்.
''ஐயா.''
''இந்த இடத்தை கொஞ்சம் சுத்தப்படுத்திடு,'' என சொல்லிவிட்டு, படியேறி போனான். சுபாங்கியை ஏறிட்டு கூடப் பார்க்காமல், கட்டிலில் தன் இடத்தில் போய் படுத்து, கண்களை மூடிக் கொண்டான்.
மறுநாள் காலை, 8:30 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விட்டான், புகழேந்தி. அதற்கு முன்னரே, முதன்மை உதவியாளர் செந்தில் வந்து, அன்று, புகழேந்தி பார்த்து கையெழுத்திட வேண்டிய கோப்புகளை மேஜை மீது அடுக்கிக் கொண்டிருந்தார்.
இந்த உதவியாளர், புகழேந்தியை நன்கு புரிந்து கொண்டிருப்பவர். சுறுசுறுவென்று காரியமாற்றுபவர். எள் என்றால் எண்ணெய்யாக நிற்க கூடியவர். புகழேந்தி முகம் சுளிக்காமல் பார்த்துக் கொள்பவர். எப்போதும், புகழேந்திக்கு முன் அலுவலகம் வருபவர்.
புன்னகையோடு, ''குட் மார்னிங், சார்,'' என்றவர், ''இன்னைக்கு காலை, 11:00 மணிக்கு தாசில்தாரெல்லாம் பார்க்க வர்றாங்க. அதுக்கப்புறம்...''
''செந்தில்,'' என, இடைமறித்தான், புகழேந்தி.
''எல்லா மீட்டிங்கையும் கொஞ்சம் தள்ளிப் போடுங்க. முடிஞ்சா லஞ்சுக்கு அப்புறம் வச்சுக்கலாம். இப்போ அரசு மருத்துவமனைக்கு போன் செய்து, நேற்று சாயந்திரம் ஆபரேஷன் பண்ணின பெண்ணின் உடல்நிலை பற்றி விசாரிச்சு சொல்லுங்க.''
''எஸ், சார்.''
''அது மட்டுமில்ல, செந்தில். அந்த பெண்ணை பற்றின எதுவும் செய்தியாகி விடக் கூடாது. அதைக் காப்பாற்ற வேண்டியது, நம் பொறுப்பு.''
''புரியுதுங்க சார். நான் பார்த்துக் கொள்கிறேன்.''
அதன்பின், எஸ்.பி., ஈஸ்வரியை மொபைல் போனில் அழைத்து, அதையே வலியுறுத்தினான்.
''ஷ்யூர் சார்,'' என்றார், ஈஸ்வரி.
அதன் பின்னரே அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தினான். பகல், 1:00 மணி வரை, மூச்சு விடுவது தவிர, வேறு எதற்கும் நேரமில்லாததால், வேறெந்த நினைவும் எழவில்லை.
சாப்பிட வீட்டிற்கு கிளம்பிய போது, எஸ்.பி., ஈஸ்வரி வெளியில் நீண்ட நேரமாக காத்திருப்பதாக செந்தில் கூற, உடனே வரச் சொன்னான், புகழேந்தி.
ஒரு இளைஞரோடு உள்ளே நுழைந்தார், ஈஸ்வரி.
''குட் ஆப்டர் நுான் சார்.''
''குட் ஆப்டர் நுான். உட்காருங்கம்மா.''
''இவர் தான் சார், அந்தப் பெண்ணை பற்றி உங்களுக்கு போன் பண்ணி சொன்ன, ஆள்.''
தன் முன் நிறுத்தப்பட்ட இளைஞனை ஏறிட்டான், புகழேந்தி. அவன் முகம் வெளிறிக் கிடப்பதை பார்த்தான். அதிகம் பயந்து போயிருப்பது தெரிந்தது.
''பயப்படாதே, தம்பி. நீ தான் போன் செய்தாயா?''
''ஆமாங்கய்யா.''
''உனக்கு அந்தப் பெண்ணை தெரியுமா?''
''நான் பஸ் கண்டக்டர்ங்க. அவுங்க என் பஸ்ல தான் வந்தாங்க. பார்க்க, ரொம்ப, 'டீசன்ட்'டா இருந்தாங்க. நல்லா படிச்சவங்களா தெரிஞ்சுச்சு. நம்ம ஊரை நெருங்கறதுக்கு முன்னால, பஸ்ஸை வழிமறிச்சு நிறுத்தினாங்க. நாலைந்து பேர் பஸ்சுக்குள்ள ஏறி, பலவந்தமாக அவுங்களைக் கீழே இறக்கி, இழுத்துக்கிட்டுப் போனாங்க.''
''அந்த ஆளுங்க யாருன்னு தெரியுமா?''
''தெரியாதுங்கய்யா.''
''அந்தப் பெண் யாருன்னு தெரியுமா?''
''தெரியாதுங்க.''
''எந்த ஊருக்கு டிக்கெட் வாங்குனாங்க?''
''உழையூருங்க.''
''இதோ இங்க பக்கத்துல.''
''ஆமாங்கய்யா.''
''எத்தனை பேர் பஸ்ல இருந்திருப்பீங்க?''
''பத்து, பதினைந்து பேர் இருந்திருப்போங்கய்யா.''
''அந்தப் பெண்ணை பஸ்சை விட்டு இறக்கின போது, ஒருத்தர் கூடவா உதவிக்கு போகல?''
''நான் போனேங்க. கத்தியக் காட்டி மிரட்டுனாங்க.''
மவுனித்தான், புகழேந்தி.
''அவுங்களுக்கு ஒண்ணும் ஆகலீங்களேய்யா. நல்லா லட்சணமா, படிச்ச களையோட இருந்தாங்கய்யா.''
''ஒண்ணும் ஆகல. கவலைப்படாதே,'' என்றவன், ஈஸ்வரியை ஏறிட்டான்.
புரிந்து கொண்ட ஈஸ்வரி, ''நீ போய் வெளியே இருங்க, தம்பி. நான் இதோ வரேன்,'' என்றார்.
அந்த இளைஞன் வெளியேறியதும், ஈஸ்வரியும் எழுந்து கொண்டார்.
''உழையூரில் நரிக்குறவர்கள் தான் அதிகம், சார். அத்தனைக் குடும்பங்களும் பக்கத்து கிராமமான மேலுாரிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள். மேலுாரில் நடந்த ஒரு மோசமான நிகழ்வால், ஒட்டுமொத்த குடும்பங்களும் வெளியேறின.
''அதுமட்டுமில்லை, சார். அவர்களுக்கு கைகொடுத்து, அவர்களை படிக்க வைத்து முன்னேற்ற நினைத்த தோழர்களும், அந்த ஊரை விட்டே போகும் நிலைமை ஏற்பட்டது, சார்.''
''கேள்விப்பட்டிருக்கிறேன். உழையூருக்கு போய் விசரித்தால், இந்தப் பெண் யாரெனத் தெரியக்கூடும்,'' என்றான், புகழேந்தி.
''ஆள் அனுப்பி விட்டேன், சார்.''
''வெரி குட். நான் எதிர்பார்த்ததை விட, வேகமாக வேலை செய்கிறீர்கள். அந்தப் பெண்ணை பற்றிய செய்தியும், செய்தித்தாள்களில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.''
''எஸ், சார்.''
''கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள், இந்த விஷயத்தில்.''
''சரி, சார்.''
''மருத்துவமனைக்கு போய் அந்த பெண்ணை பார்த்தீர்களா?''
''இன்னும், ஐ.சி.யு.,ல தான் சார் இருக்காங்க.''
''டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?''
''எதுவும் சொல்ல முடியாதுங்கறாங்க.''
''நம்பிக்கை இழக்க வேண்டாம். வேறேதும் தகவல் கிடைத்தால், என்னைக் கூப்பிட்டு சொல்லுங்க.''
''ஷ்யூர், சார்.''
பசியோடு வீட்டுக்கு வந்தவனை, வழக்கத்துக்கு மாறாக, சிரித்த முகத்தோடு சந்தோஷமாக வரவேற்றாள், சுபாங்கி. கல்யாணமான இத்தனை மாதங்களில், இதுவரை அவன் கண்டிராத முகம்.
'ஒருவேளை அவளது அப்பா வந்திருக்கிறாரோ...' அப்பா வந்தால் மட்டுமே, அவளது முகத்தில் சிரிப்பும், செயல்களில் உற்சாகமும் தென்படும்.
''அப்பா வந்திருக்கிறாரா, சுபா?''
''இல்லையே. ஏன் கேட்கறீங்க?''
''நீ இவ்வளவு சந்தோஷமா இருக்கியேன்னு கேட்டேன்.''
''உங்க பையன் உள்ளேயிருந்து உதைக்கிறான்,'' என, மேடிட்ட தன் வயிற்றை தடவிக் காட்டினாள்.
''பொண்ணுன்னு சொல்லு, சுபா,'' என்றான், புன்னகையோடு.
சட்டென்று அவள் முகம் மாறியது.
''ஏன், அது கூட உங்க இஷ்டப்படி தான் பொறக்கணுமோ?''
'வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடப் போகிறதே...' என பயந்தவன், சமாளித்து, ''சரி. உன் இஷ்டப்படி பையனே பொறக்கட்டும். அடுத்து, என் இஷ்டப்படி பொண்ணு. சரியா?''
''ஹாங், ஆசையைப் பாரு,'' என, சிரித்தாள். சிரித்தபோது, கன்னத்தில் குழி விழுந்தது. கண்களும் சேர்ந்து சிரித்தன. மிக அழகாகத் தெரிந்தாள்.
'நிஜமாகவே இவள் பேரழகி தான். சந்தேகமே இல்லை. இவள், அன்று வீட்டுக்கு வந்து பேசின பேச்சில் மட்டுமின்றி, இந்த அழகும் சேர்ந்து தான், நம்மை வீழ்த்தி விட்டதோ...'
''என்ன யோசிக்கிறீங்க?''
''நீ நிஜமாகவே பேரழகி தான். உன் அழகு என்னைக் கட்டிப் போட்டு விட்டதோன்னு நினைக்கிறேன்.''
''நீங்க மட்டும் என்னவாம்? உங்க அழகு தான், என்னை உங்க பின்னால் நாயா சுத்த வச்சிச்சு. உங்களை பார்க்க, உங்க ஆபீஸ் வாசல்ல எத்தனை நாள் தவம் கிடந்திருக்கேன், தெரியுமா? வெளிய வந்து நீங்க வண்டியில ஏறினதும், உங்க வண்டி பின்னாலேயே நான், காரை ஓட்டிக்கிட்டு வருவேன்.
''ஞாயிற்றுக்கிழமையானா, உங்களைப் பார்க்க மாட்டோமான்னு, உங்க தெருவுல இந்த கோடிக்கும், அந்த கோடிக்கும் அலைஞ்சிருக்கேன். ஜன்னல்ல உங்க முகம் தெரியாதான்னு, எப்படி ஏங்கியிருக்கேன் தெரியுமா?''
அருகில் போய், அவள் தோளின் மீது கை போட்டு, மென்மையாக அணைத்து கொண்டான்.
''நிஜம்மாவா, சுபா? ஒரு தரம் கூட, உன்னை நான் பார்க்கலையே!''
''அதுமட்டுமில்ல. நீங்க எழுதுற பத்திரிகை ஆபீசுக்கும், உங்க ஆபீசுக்கும் எத்தனை லெட்டர் போட்டேன் தெரியுமா? எதுக்கும் பதில் வரல.''
''சாரிடா. அதையும் நான் கவனிக்கலடா.''
''எதைத்தான் நீங்க கவனிச்சீங்க? உங்களுக்கு புகழேந்தின்னு பேர் வச்சதுக்கு பதிலா, விஸ்வாமித்திரர்ன்னு வச்சிருக்கலாம்.''
''அவருக்கும் ஒரு மேனகை வரலையா?'' என, அழகாய் புன்னகைத்தான்.
''சிரிக்காதீங்க. உங்க சிரிப்பு வசியம் பண்ற சிரிப்பு.''
''நீ தான் எங்க வீட்டுக்கு வந்து, வீட்டையே வசியம் பண்ணிட்ட.''
''அது தான், நான் பண்ணின பெரிய தப்பு. வேணாம். போகாதேன்னு அப்பா அடிச்சுக்கிட்டாரு. நான் தான் கேக்கல. பணம், செல்வாக்கு எல்லாம் கொண்ட நான், உங்க வீட்டுக்கு வந்து உங்க முன்னாலேயும், உங்கப்பா முன்னாலேயும் பிச்சைக்காரி மாதிரி கெஞ்சிக்கிட்டு நின்னேன்.''
''அதுக்கு இப்போ வருத்தப்படறீயா?''
''நிச்சயமா, ஒரு தரம் என்னைத் திரும்பிப் பார்த்திருந்தாலோ, என் அத்தனை கடிதங்களுக்கு ஒரு வரி பதில் எழுதியிருந்தாலோ, நான் உங்க வீடு தேடி வந்திருக்கவே மாட்டேன். எங்க அந்தஸ்துக்கு குறைவான இடத்துல கல்யாணம் கூட செய்திருக்கவே மாட்டேன்.''
அதிர்ந்து போனான், புகழேந்தி.
''உங்க புறக்கணிப்பு, எனக்கு சவாலா மாறிச்சு. காயம்பட்ட, 'ஈகோ'வை சமாதானப்படுத்தறதா நினைச்சு, உங்க வீடு தேடி வந்து, உங்க முன்னாலேயும், உங்க அப்பா முன்னாலேயும் கெஞ்சிக்கிட்டு நின்னேன்.''
''உன் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டதா நினைக்கறியா, சுபா?''
''உண்மை அது தானே!''
''நிஜமாகவே நீ அப்படி நினைச்சா, இப்ப கூட சரி பண்ணிக்கலாம், சுபா.''
''எப்படி? இப்படியா,'' என, தன் வயிற்றை தொட்டுக் காட்டினாள்.
''சாரி. உன் நினைப்பு இப்படி இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, இது நடக்கவே விட்டிருக்க மாட்டேன்.''
''என் முட்டாள்தனம். அப்பா அப்பவே வேணாம், வேணாம்ன்னு முட்டிக்கிட்டாரு. நமக்கு சரிப்பட்டு வராதும்மான்னு அடிச்சுக்கிட்டாரு. நான் தான் கேட்கல. இப்போ அனுபவிக்கிறேன்,'' என்றாள், சுபாங்கி.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பேசாது நின்றிருந்தான், புகழேந்தி.
— தொடரும்.
இந்துமதி