PUBLISHED ON : ஏப் 20, 2025

இமயம் நகர்ந்து வழிவிடும்
இலக்கை அடைய முயற்சிக்க
உன்னால் முடியுமென்றால்!
இன்னல்கள் இலவம் பஞ்சாகும்
இடறி விழுந்தாலும்
எழுவேன் என்று கூற
உன்னால் முடியுமென்றால்!
வானம் வசப்படும்
தடைக்கற்களை படிகற்களாக்க
உன்னால் முடியுமென்றால்!
வாழ்க்கையே வசப்படும்வாழ்வேன் என்று உயிர்ப்புடன் கூற
உன்னால் முடியுமென்றால்!
அகிலம் அமைதி பூங்காவாகும்
பிறன் வலி - தன் வலியாகக் கருதும்
கருணை மழையில் நனைய
உன்னால் முடியுமென்றால்!
எப்போதுமே
எதுவுமே முடியும்
என்னால் முடியும் என்று எண்ண
உன்னால் முடியுமென்றால்!
முடியும் என்று முயற்சித்தால்
விடியல் வீடு தேடி வரும்!
அச்சத்தால் அயர்ந்த மனம்
வாழ்வின் உச்சம் தொட்டு
உயர்ந்து விடும்!
தோல்விகள் வீழ்வதற்கல்ல
எழுவதற்கே...
சோதனைகள் மடிவதற்கல்ல
வாழ்வதற்கே...
எதுவுமே உனை எதிர்க்க அல்ல
நீ எதிர்கொள்வதற்கே...
நம்பிக்கை உன் ஆன்மாவில் நிறையட்டும்
துணிந்து நில்!
- விஜயலட்சுமி ராஜசேகரன், கடலுார்.
தொடர்புக்கு : 99449-30256