
* எல்.என்.சிவகுமார், சென்னை: அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரிடம் இருந்த பேச்சாற்றலும், நகைச்சுவை உணர்வும் தற்போதைய தி.மு.க., தலைவர்களிடையே காண முடியவில்லையே...
எழுதிக் கொடுத்ததைப் பார்த்து படிப்பதற்கே, தப்பும், தவறும் செய்பவர்களிடம், நகைச்சுவையை எதிர்பார்க்க முடியாது. அது, சுயசிந்தனையில் தான் வரும்.
கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்:புற்றுநோய், இதய பாதிப்பு இந்த இரண்டும் அதிகரித்து வருகிறதே... என்ன காரணம்?
நாம் சாப்பிடும் அரிசி, எண்ணெய், காய்கறிகள் அனைத்தும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தெளித்து வளர்க்கப்படுகின்றன. மரபு மாற்று விவசாய பொருட்களும் அதிகரித்துள்ளது. இதனால் தான், பல நோய்கள் அதிகரித்து வருகிறது.
அ.ஸ்ரீராம் விஜய், நாமக்கல்: ஆபீசுக்கு வருவது, வீட்டில் இருப்பது எது தங்களுக்கு பிடிக்கும்?
தினமும் காலை, 9:00 மணிக்கு ஆபீசுக்கு வந்து விடுவேன். அதன் பிறகு வேலை வேலை வேலை தான். இரவு 9:00 மணிக்கு மேல், வீட்டிற்கு திரும்புவேன்!
அ.சுகுமார், வேலுார்: ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் நடத்திய பேரணியை, கவர்னர் ரவி பாராட்டியுள்ளாரே...
பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். மற்ற மாநில முதல்வர்கள் யோசிக்கும் முன்னே, நம் நாட்டின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றிய செயல். சபாஷ், ஸ்டாலின்!
வி.சி.கிருஷ்ண ரத்னம், சென்னை: ஆபரேஷன் சிந்துாரில் பங்கேற்ற, தைரியமான இந்திய ராணுவ வீராங்கனைகளை பற்றி...
கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் என்ற, நம் நாட்டின் வீர மங்கையரை பாராட்டியே ஆக வேண்டும். இவர்கள் நம் இந்திய பெண்களின் வீரத்துக்கு எடுத்துகாட்டு மற்றும் இளம் பெண்களுக்கு முன் உதாரணம்!
கே.சுரேஷ், சென்னை: பார்லிமென்டில் அமைச்சர்கள், ஹிந்தி, ஆங்கிலத்தில் பதிலளிக்கும் போது, தமிழக எம்.பி.,களுக்கு புரியுமா?
தமிழக எம்.பி.,கள் அனைவருக்கும் ஹிந்தி நன்கு புரியும்; பேசவும் தெரியும். ஆனால், தமிழகத்தில் ஹிந்தி தெரியாது எனக் கூறி கொள்வர்!
ரா.ராஜேஷ்குமார், திண்டுக்கல்: 'ஆன்லைன்' ரம்மி விளையாடி, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே...
'ஆன்லைன்' ரம்மி விளையாட்டு மிகவும் ஆபத்தானது. பண இழப்பு மிக அதிகம். அதிலிருந்து மீள முடியாமல் பலர், தற்கொலை செய்து கொள்கின்றனர். மக்களும், அரசும் விழித்து கொள்ள வேண்டும்!
* கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து முதலிடமாமே...
இதை கூட மிகப்பெரிய சாதனையாக கூறி கொள்வர், இன்றைய ஆட்சியாளர்கள்!