
பா - கே
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அவர். எனக்கு, நண்பர் என்றால், லென்ஸ் மாமாவுக்கு, 'ஜிகிரி தோஸ்த்!' (புரிந்திருக்குமே!) நீண்ட நாட்களுக்கு பின், மொபைல் போனில் அழைத்தார்.
அவர் பெயர் திரையில் ஒளிர்ந்ததுமே, அருகில் இருந்த லென்ஸ் மாமா, 'மணி... ஸ்பீக்கரில் போடுப்பா, பேசலாம்...' என்றார்.
மொபைல் போன் ஸ்பீக்கரை, 'ஆன்' செய்ததும், லென்ஸ் மாமா, முந்திக் கொண்டு, ..... (நண்பரின் பெயரை விளித்து) நலம் விசாரித்து, 'ரொம்ப நாளா ஆளையே காணோமே... வெளிநாடு எங்காவது போயிருந்தீரா?' என்றார்.
'டில்லி, திகார் சிறைக்கு போயிட்டு, இன்று காலை தான் சென்னை வந்தேன்...' என்றார், நண்பர்.
அதிர்ந்து, 'என்ன, திகார் சிறைக்கா... என்னாச்சு?' என்றேன், நான்.
'பதறாதே, மணி. திகார் சிறையை சுற்றிப் பார்க்க தான் போனேன். டில்லியில் வசிக்கும் உறவினர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். போய் தான் பார்ப்போமே என்று சென்று வந்தேன்.
'நாளை, கோவை சென்று விடுவேன். இன்று மதியம் லஞ்சுக்கு போரூரில் இருக்கும் என் வீட்டுக்கு வந்து விடுங்கள். நிறைய பேசலாம்...' என்றார்.
'ஏம்ப்பா, அது உன், சென்னை கிளை அலுவலகம் ஆச்சே... அங்கேயா வர சொல்ற...' என்றார், மாமா, சுருதி குறைந்த குரலில்.
'அலுவலகம் கம் வீடு அது. நீங்க வாங்க...' என்றார்.
'அப்படின்னா சரி... வேண்டிய, 'ஐட்டம்'களை வாங்கி வெச்சுடு...' என்றார், மாமா.
'இதெல்லாம் சொல்லணுமா? எல்லாம் தயாராக இருக்கும்...' என்றார், நண்பர்.
என்னை பேசவே விடாமல், மாமாவே பேசி முடித்து, ஸ்பீக்கரை, 'ஆப்' செய்து, மொபைல் போனை என்னிடம் கொடுத்து, 'மணி... ஆசிரியரிடம், 'பர்மிஷன்' வாங்கு. போய் சாப்பிட்டு விட்டு வரலாம்...' என்றார்.
நண்பர் கூறிய, திகார் சிறை பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால், அதுபற்றி நண்பரிடம் விசாரிக்கலாமே என, ஆசிரியரிடம், 'பர்மிஷன்' வாங்க போனேன்.
மதியம், 1:30 மணி அளவில், நண்பர் வீட்டை அடைந்தோம். கீழ் போர்ஷனில் நாலைந்து பேர், ஏதோ வேலையில் இருந்தனர். எங்களை மாடிக்கு அழைத்து சென்று, 'ஜில்' என, நுங்கு மில்க் ஷேக் கொடுத்தார். வெயிலுக்கு இதமாக இருந்தது.
'காலையில், விமானத்தில் சாப்பிட்டது. பசிக்கிறது. முதலில் சாப்பிடலாம்...' என்றவர், சமையற்காரரிடம் சாப்பாடு எடுத்து வைக்க சொன்னார், நண்பர்.
மேஜை மீது அனைத்தையும் எடுத்து வைத்ததும், சமையற்காரரை அங்கிருந்து அனுப்பி விட்டு, நண்பரே பரிமாறினார்.
மாமா எதிர்பார்த்தது போலவே, அவருக்கு பிடித்த அசைவ உணவு வகைகள் இருக்க, சந்தோஷமாக சாப்பிட ஆரம்பித்தார். எனக்கு, மஷ்ரூம் பிரியாணி, கடாய் பனீர், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, பேபி கார்ன் ப்ரை ஆகியவற்றை எடுத்து வைத்தார், நண்பர்.
'என்ன திடீர் டில்லி பயணம். அதுவும் திகார் சிறைக்கு?' என்றேன், நான்.
'திட்டமிட்டு எல்லாம் போகல. டில்லிக்கு ஒரு வேலை விஷயமாக போனேன். திகார் சிறையை சுற்றிப் பார்க்கும் வசதி இருப்பதாக கூறினார், உறவினர். உடனே, கிளம்பி விட்டேன்...' என்றவர், தொடர்ந்து கூறினார், நண்பர்:
மேற்கு டில்லியில் திகார் என்ற கிராமத்திலிருந்து, 3 கி.மீ., தொலைவில், இந்த சிறைச்சாலை அமைந்துள்ளதால், திகார் சிறை என, பெயர் பெற்றது.
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை இது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 5,200 பேர் வரை தங்கும் வசதி கொண்டது. ஆனால், தற்போது, 14 ஆயிரத்து 59 பேர் இருக்கின்றனர்.
நெருக்கடியான தங்குமிடம், பாதுகாப்பு கவலைகள், மோசமான வாழ்க்கை ஆகிய காரணங்களால், திகார் சிறையை டில்லிக்கு வெளியே கொண்டு போக விரும்புகிறது, டில்லி அரசு. தற்போது, 10 கோடி ரூபாய் செலவில் இடம் மாற்றுவதற்கான செயலில் இறங்கியுள்ளது.
திகார் சிறை, கடந்த 1957ல், திறக்கப்பட்டது. இன்று அதற்கு வயது, 68. இதை, சீர்த்திருத்த சிறை எனவும் அழைப்பர். இன்ஸ்பெக்டர் ஜெனரலாக கிரண்பேடி இங்கு இருந்த போது, இதை, திகார் ஆஸ்ரமம் என அழைத்தார். அப்போது, பல சீர்த்திருத்தங்களை செய்தார்.
கைதிகளுக்கு படிப்பு வசதி, தொழிற் சார்ந்த பயிற்சிகள், தொழிலகம் ஏற்படுத்தி, அதில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு என, பலவற்றை செய்தார்.
அதன் பலன், இவற்றின் மூலம் பயன் பெற்றவர்கள், 66 பேர், வெளி நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு பெற்று, மாதம், 35 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். 700 கைதிகளுக்கு சிறையின் உள்ளேயுள்ள தொழிலகங்கள் மூலம், சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்கு சொந்த வானொலி நிலையம் கூட உள்ளது. இதை, சிறையில் உள்ள கைதிகளே நடத்துகின்றனர்.
முதலில், பஞ்சாப் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது, திகார் சிறை. 1966ல், டில்லி அரசுக்கு மாற்றப்பட்டது.
அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய், நடிகர் சஞ்சய் தத், ஆ.ராசா, எம்.கே.கனிமொழி, இன்றைய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் (பண மோசடி வழக்கில்) மற்றும் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ஆகிய பிரபலங்கள், திகார் சிறையில் கைதிகளாக இருந்தவர்கள்.
திகார் சிறையில் பேய் உலவுவதாக பல கதைகள் உண்டு. அதில் ஒன்று:
தினமும் ஒரு பேய் வந்து குறிப்பிட்ட கைதியை, 'இறந்த பின் என்னுடன் வந்து சேர்...' என, கூறுமாம். கைதி மறுக்கும் போது, 'பளார்' என அறைவிட்டு, தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து போகுமாம். இந்த பேய் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, திகார் போலீஸ் மீது, பல கைதிகளுக்கு வருத்தம் இருக்கிறதாம்.
திகார் சிறையில் தங்கியிருந்த பெண் கைதிகள் எழுதிய கவிதைகளை, சிறையின் வெளியே இருக்கும் பெரிய தகட்டில் எழுதி வைத்துள்ளனர்.
சுற்றுலா பயணியர், திகார் சிறையை சுற்றிப் பார்க்கலாம். அதற்கான நேரம் காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை.
ஒருநாள் கவுரவ கைதியாக, திகார் சிறையில் தங்கலாம். அங்கு உணவு உட்பட அனைத்திலும் பங்கு கொள்ளலாம். இதற்கு கட்டணம் உண்டு. சான்றிதழ் கூட வழங்கப்படுகிறது. இதுபோல், சிலர் தங்கி செல்கின்றனர்.
- என்று கூறி முடித்தார், நண்பர்.
இவ்வளவு விஷயம் இருக்கிறதா என, வியந்தேன்.
நாங்கள் பேசி முடிப்பதற்குள், மாமா சாப்பிட்டு முடித்து, அங்கிருந்த சோபாவில் படுத்து, 'கொர்' விட்டுக் கொண்டிருந்தார்.
அவரை தட்டி எழுப்பி, நண்பரிடம் விடைபெற்று அலுவலகம் கிளம்பினோம். அரைத் துாக்கத்தில் எழுப்பியதும், நண்பரிடம், 'அங்கிள் ஜானி'யை வாங்காமல் வந்துவிட்டதும், மாமாவுக்கு குறையாக இருக்க, எதுவும் பேசாமல், 'உம்' என்று வந்தார்.
'கோவை சென்று நண்பர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி வருவோம்...' என, சமாதானப்படுத்தினேன்.