/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!
/
இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!
PUBLISHED ON : மே 25, 2025

நாடு விடுதலை அடைந்த காலம் முதல், இந்திய ராணுவம் பல முக்கிய ஆபரேஷன்களை நடத்தியுள்ளது. அவை...
ஆபரேஷன் போலோ (1948) : விடுதலைக்குப் பின், ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய மறுத்தது. 1948, செப்டம்பர் 13 முதல், 18 வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையால், ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது.
ஆபரேஷன் விஜய் (1961) : போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க, 1961, டிசம்பர் 18, 19ம் தேதிகளில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கோவா, டையூ, டாமன் ஆகியவை இந்தியாவுடன் இணைந்தன.
ஆபரேஷன் கேக்டஸ் லில்லி (1971) : கிழக்கு பாகிஸ்தானை, பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்க, 1971, டிசம்பர் 3 முதல் 16 வரை, இந்திய விமானப்படை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் முடிவில் வங்கதேசம், தனி நாடாக உருவானது.
ஆபரேஷன் டிரிடண்ட், பைத்தான் (1971) : வங்கதேச விடுதலைப் போரில் இந்திய கடற்படை, 1971, டிசம்பர் 4, 5 தேதிகளில், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் வெற்றியைக் கொண்டாட, டிசம்பர் 4ம் தேதியை கடற்படை தினமாக அறிவிக்கப்பட்டது.
ஆபரேஷன் மெக்டூட் (1984) : சியாச்சின் பனிமலைப் பகுதியை கைப்பற்ற, ஏப்ரல் 13, 1984ல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இந்திய ராணுவம் அப்பகுதியை தக்கவைத்தது.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் (1984) : பஞ்சாபில் காலிஸ்தான் கோரிக்கையுடன் போராடிய பிந்தரன்வாலே தலைமையிலான குழுவை ஒழிக்க, பொற்கோவிலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். இதற்கு எதிர்வினையாக, முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.
ஆபரேஷன் ராஜீவ் (1987) : சியாச்சினில் பாகிஸ்தானிடம் இருந்து, 'கைத் போஸ்ட்' பகுதியை மீட்க, கேப்டன் பனாசிங் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதி, 'பனா போஸ்ட்' எனப் பெயர் மாற்றப்பட்டது.
ஆபரேஷன் பவண் (1987) : இது, இலங்கையில் தமிழ் ஈழம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை மேற்கொண்ட நடவடிக்கை. இந்திய ராணுவத்துக்கு, பெரும் இழப்பை ஏற்படுத்தியது, இது.
ஆபரேஷன் கேக்டஸ் (1988) : மாலத்தீவு அதிபர் கயூமுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியை ஒடுக்க, இந்திய முப்படைகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு, அதிபரை காப்பாற்றின.
ஆபரேஷன்கள் விஜய், சேப்டி சாகர், தல்வார் (1999) : இவை, கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக முப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள். இதில் இந்தியா வெற்றி பெற்று, கார்கில் பகுதிகளை மீட்டது.
ஆபரேஷன் பரக்கிராம் (2001) : நாடாளுமன்ற தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய- - பாகிஸ்தான் எல்லையில் பெரும் ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டது.
ஆபரேஷன் பிளாக் டொர்னேடோ (2008) : மும்பை தாக்குதலுக்கு எதிராக தேசிய கமாண்டோ படை மேற்கொண்ட நடவடிக்கையில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் (2025) : காஷ்மீர், பஹல்காமில், 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த ஆபரேஷன்கள், இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தேச பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.
— மு.ஆதினி