/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சுற்றுலா ஸ்பெஷல்: உலக நாடுகளின் வித்தியாசமான நடைமுறைகள்!
/
சுற்றுலா ஸ்பெஷல்: உலக நாடுகளின் வித்தியாசமான நடைமுறைகள்!
சுற்றுலா ஸ்பெஷல்: உலக நாடுகளின் வித்தியாசமான நடைமுறைகள்!
சுற்றுலா ஸ்பெஷல்: உலக நாடுகளின் வித்தியாசமான நடைமுறைகள்!
PUBLISHED ON : மே 25, 2025

இன்பச் சுற்றுலாவாகவோ, பணியின் நிமித்தமாகவோ, வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள், அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களையும், நடைமுறைகளையும் தெரிந்து செல்வது அவசியம்.
அவ்வாறு, உலக நாடுகள் சிலவற்றில் நிலவும், வித்தியாசமான நடைமுறைகள் குறித்து, இங்கே தெரிந்து கொள்ளலாம்...
ஜப்பான்: ஜப்பானில், வாயைத் திறந்து சத்தமாக சிரிப்பது, அநாகரிகமான செயலாக கருதப்படுகிறது. மேலும், அந்நாட்டு உணவகங்களில், 'டிப்ஸ்' கொடுப்பதை ஏற்பதில்லை என்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில், விமானம் மற்றும் கப்பல்களில் பயணம் செய்யும் போது, சமைத்த உணவை எடுத்து செல்வது, குற்றமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா: அமெரிக்காவில், ஒருவருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தால், அதை வாங்கிய கடை ரசீதுகளுடனே தருவர். ஏனெனில், அந்த அன்பளிப்பு பிடிக்கவில்லை எனில், அதே கடையில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்பதால் தான். அதேபோல், அமெரிக்கர்கள் ஒருவரை நலம் விசாரிக்கையில், அவர் குடும்பத்தினரின் நலத்தை விசாரிக்காமல், அவரை மட்டுமே நலம் விசாரிப்பர்.
இங்கிலாந்து: இங்கு, கார் ஓட்டும் போது, தேவையின்றி, 'ஹாரன்' அடிப்பதை அநாகரிகமாக கருதுகின்றனர். மேலும், இந்நாட்டில் ஒருவர் கைக்குழந்தையுடன் சாலையை கடக்கும் போது, காரை உடனே நிறுத்தி, அவர் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
சிங்கப்பூர்: சிங்கப்பூரில், பொது கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின், சுத்தம் செய்யாமல் வெளியேறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சூயிங்கம் மெல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் யாருக்கும் கடிகாரத்தை அன்பளிப்பாக வழங்கவே கூடாது. மரணத்தை நினைவுபடுத்துவதாக கருதுவதால், அதை அவர்கள் விரும்புவதில்லை.
சீனா: சீனாவில், ஒருவருக்கு அன்பளிப்பாக, வெள்ளை நிறத்தை தவிர, வேறு எந்த நிற மலர்களையும் தரலாம். காரணம், வெள்ளை நிறம் என்பது, அவர்களுக்கு துக்கத்தின் அடையாளம்.
நியூசிலாந்து: நியூசிலாந்தில், வெறுங்கையில் புதிய காய்கறிகள், பழங்கள், தேன் மற்றும் இறைச்சியை எடுத்துச் செல்வது, குற்றமாக கருதப்படுகிறது. அதையும் மீறி எடுத்து சென்று பிடிபட்டால், பறிமுதல் செய்து விடுவர்.
டென்மார்க்: இங்கு காரை இயக்குவதற்கு முன், காரின் அடியில், குழந்தைகள் யாராவது இருக்கின்றனரா என்று பார்த்து விட்டுத் தான், எடுக்க வேண்டும் என, சட்டமே உள்ளது. இவ்வாறு செய்யாவிட்டால், சிறைத்தண்டனை நிச்சயம்.
தாய்லாந்து: தாய்லாந்தில், ஒரு வேடிக்கையான சட்டம் உள்ளது. வீட்டிலிருந்து ஒருவர் உள்ளாடைகளை அணியாமல் வெளியே செல்ல முடியாது. மேலும், சட்டை அணியாமல், அங்கே கார் ஓட்ட கூடாது.
உக்ரைன்: உக்ரைன் நாட்டில், மறுப்பு தெரிவிப்பதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்துவர். எந்த விஷயத்திலாவது, தங்களுக்கு விருப்பமில்லை எனில், அதை எதிராளிக்கு தெரிவிக்க, பூசணிக்காயை கொடுப்பர்.
அரபு நாடுகளில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் மசாலாப் பொருளான கசகசாவை எடுத்து செல்ல முடியாது. அதை அங்கு வைத்து இருப்பதே, தண்டனைக்குரிய குற்றமாகும்.
சில நாடுகளில், தலைவலி மாத்திரைகள், வயிற்று வலி மாத்திரைகளைக் கூட வைத்திருக்க கூடாது என, விதிகள் உண்டு.
- எம். சித்தார்த்