
ரா.ச.மித்ரன், விருதுநகர்: 'ஹோம் லோன்' வாங்கி, வீடு கட்டுவது பற்றி, தங்கள் கருத்து என்ன?
சொந்த வீடு என்பது, அனைவரின் வாழ்நாள் கனவு. அதை நிறைவேற்ற, வங்கிகள் உதவும் போது, பயன்படுத்திக் கொள்ளலாமே!
அவரவர் சக்திக்கு உட்பட்டு கடன் வாங்கி, சரியாக திருப்பி செலுத்தினால், குறிப்பிட்ட காலத்துக்கு பின், கனவு நனவாகுமே!
டி.எல்.குமார், விழுப்புரம்: கன்னட மொழி குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ள கமல், 'அரசியல்வாதிகள், மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள்...' என்கிறார். அப்படியெனில், இவர் அரசியல்வாதி இல்லையா?
மாற்றி மாற்றி பேச கற்றுக் கொண்டு விட்டார் எனக் கொள்ளலாம். அதாவது, அரசியல்வாதி ஆக, முழுத் தகுதியும் பெற்று விட்டார்.
இதையும் தாண்டி, சிந்தனைகள் இவருக்கு, 'ஓவர்லாப்' ஆவதால், தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் வகையில் பேசுகிறார்; பாவம்... இனி, ராஜ்யசபா உறுப்பினர்களும் மண்டையைப் பிய்த்துக் கொள்ளப் போகின்றனர்!
* கொ.மூர்த்தி, ஆதனுார்: 'ஈ.டி., என்ன... பிரதமர் மோடிக்கே பயப்பட மாட்டோம்...' என்கிறாரே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்?
முதல்வர் ஸ்டாலின் பேசுவதற்கு உரை எழுதிக் கொடுப்பவர், இப்போது, உதயநிதிக்கும் எழுதிக் கொடுக்கிறார் போல் இருக்கிறது.
துணை முதல்வர் உதயநிதி, தன் பொறுப்பு உணர்ந்து பேசுவது நல்லது!
அ.செந்தில்குமார், சூலுார்: 'கங்கை நதியை மேம்படுத்தியதை போல, காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி நதிகளையும் சுத்தம் செய்யும் புதிய திட்டத்தை, மத்திய அரசு உருவாக்க வேண்டும்...' என, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது பற்றி...
மாநில அரசு, பலமுறை முயன்றும் முடியாமல் போனது துரதிருஷ்டமே; மத்திய அரசிடம் கோரி இருப்பது, நல்ல யோசனை!
ந.மாலதி, துாத்துக்குடி: 'இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த, உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும். உள்நாட்டில், உலக தரம் வாய்ந்த பொருட்களை தயாரிக்க வேண்டும்...' என, பிரதமர் மோடி பேசியுள்ளாரே...
'மேக் இன் இந்தியா...' எனக் கூறியவர், 'தரமாக தயாரியுங்கள்...' என்றும் வலியுறுத்தியுள்ளார். தரமான தயாரிப்புகள் வந்தால், உள்ளூர் பொருட்களையே வாங்குவர், நம் மக்கள்; நம் நாட்டு பொருளாதாரத்தில் பெரும் புரட்சி ஏற்படும்!
எம்.கல்லுாரி ராமன், ராமநாதபுரம்: 'எம்.ஜி.ஆரும் என்னிடம் ஆலோசனை கேட்டுள்ளார்...' என, ஜெ., தோழி சசிகலா கூறி உள்ளாரே...
இந்த, 2025ம் ஆண்டின், மிகப் பெரிய ஜோக் இது எனக் கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர்., தான் இப்போது உயிருடன் இல்லையே... இன்னும் என்னென்ன பொய் மூட்டைகளை சசிகலா அவிழ்த்து விடப் போகிறாரோ...
* சின்னஞ்சிறு கோபு, சிகாகோ, அமெரிக்கா: 'இளைஞர்கள் படித்து விட்டு, வேலை இல்லை எனக் கூறாமல், கறவை மாடுகள் வாங்கி, பால் உற்பத்தியை பெருக்கி, வருமானம் ஈட்ட வேண்டும்...' என, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொல்லி இருப்பது பற்றி...
'வேலை கிடைக்கவில்லை...' என, சோம்பி இருப்பதை விட, சுய தொழில் செய்வது புத்திசாலித்தனம். பசு, எருமை மாடுகளை வளர்த்து, பால் உற்பத்தி செய்வதன் மூலம், வெண்மைப் புரட்சி ஏற்படும்!