PUBLISHED ON : ஜூன் 08, 2025

முன்கதைச் சுருக்கம்: கயல்விழியின் பிரச்னையே இன்னும் முழுவதுமாக முடியாத நிலையில், நீர்வளூர் என்ற கிராமத்தில், ஜாதி மோதல் உச்சத்தை அடைந்தது. மேல் ஜாதியினருக்கும், தலித் சமூகத்துக்கும் இடையிலான ஜாதி மோதல், இதுவரை தன் கவனத்துக்கு வராதது பற்றி எண்ணினான், புகழேந்தி.
எஸ்.பி., ஈஸ்வரி மூலமாக பிரச்னையின் தீவிரத்தை அறிந்த, புகழேந்தி, உடனடியாக, நீர்வளூர் கிராமத்துக்கு சென்றான். விஷயத்தை அறிந்த அத்தொகுதி அமைச்சர், உடனடியாக அங்கு வந்து, நிலைமையின் தீவிரத்தை பார்த்து, புகழேந்தி அருகில் சென்றார்.
''நீங்கள் இந்த மாவட்டத்திற்கு புதிதாக வந்திருக்கிறீர்கள். இன்னும் இந்த மக்களோடு நெருங்கிப் பழக ஆரம்பிக்கவில்லை. இவர்களது ஜாதி வெறி, உங்களுக்கு தெரியாது. நீங்கள் நினைக்கிற மாதிரி இந்த பிரச்னை இதோடு முடிந்து விடாது. கதவடைத்து உள்ளுக்குள் கிடக்கிற இந்த முற்பட்ட சமூகத்தினர், உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருப்பர்.
''நீரு பூத்த நெருப்பாக இருப்பது, நாளையே கொழுந்து விட்டு எரியலாம் அல்லது இன்றிரவே கூட பற்றி கொள்ளலாம். நாம் எப்போது அகலுவோம் என, காத்துக் கொண்டிருப்பர். ஆகவே, நீங்கள் ரொம்ப, 'அலர்ட்'டாக இருக்க வேண்டியது அவசியம்.''
''புரியுது, சார்.''
''போலீஸ் பந்தோபஸ்து போட்டு விடுங்கள். இரவு, பகல் பாதுகாக்கட்டும். தேவை ஏற்பட்டால், 144 கூட போடலாம்.''
''எஸ், சார்.''
''இதற்கு மேல், இதை எரிய விட்டு விடக் கூடாது. எப்பாடு பட்டாவது அணைக்க வழி பாருங்கள். இது, ஆட்சிக்கோ, முதல்வருக்கோ சங்கடத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதை, ஆழமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.''
''சரி, சார்.''
''எக்காரணம் கொண்டும், நிலைமையை கட்டுப்படுத்த, 'ஷூட்டிங் ஆர்டர்' மட்டும் கொடுத்து விடாதீர்கள். அது, ஆட்சிக்கே களங்கத்தை ஏற்படுத்தும்.''
''நோ சார், நிச்சயம் செய்ய மாட்டேன்.''
''நிலைமை சற்று சீரடைந்ததும், முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அந்த இடுகாட்டு வழியை சீர் செய்து, கான்கிரீட் சாலை போட்டு கொடுத்து விடுங்கள்.''
''அவசியம் செய்கிறேன், சார்.''
''அப்போ நான் கிளம்புறேன். அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு நிலைமையை தெரியப்படுத்துங்கள்.''
''எஸ், சார்.''
அமைச்சர் கார் ஏறிப் போனதும், எஸ்.பி., ஈஸ்வரியிடம் பேசினான், புகழேந்தி.
''நிலைமை சீராகும் வரை, இந்த போலீஸ் பந்தோபஸ்து, இப்படியே இருக்கட்டும். தேவையானால் அதிக போலீசாரை வரவழைத்துக் கொள்ளுங்கள்.''
''சரி, சார்.''
''நான் இப்போது கிளம்புறேன், ஈஸ்வரி. எப்போது வேண்டுமானாலும் என்னை கூப்பிடுங்கள். அடுத்த, பத்தாவது நிமிடம் இங்கிருப்பேன். எதற்கும் தயங்காதீர்கள்.''
''நான் பார்த்துக்கறேன், சார். நீங்க கவலைப்படாம போங்க.''
காரில் ஏறி புகழேந்தி கிளம்பிய போது, மொபைல் போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டார், தலைமைச் செயலர்.
இவன் சுருக்கமாக விபரம் முழுவதையும் தெரிவித்தான்.
இடையில், குறுக்கிடாமல், மவுனமாக கேட்டு, ''கவலைப்படாதீங்க, புகழேந்தி. எங்களுக்கெல்லாம் உங்க திறமையில் ரொம்ப நம்பிக்கை இருக்கு. முதல்வரின், 'குட் புக்'ல இருக்கீங்க. எந்த உதவி வேணும்ன்னாலும் கேளுங்க. தயங்காதீங்க,'' என்றார், தலைமைச் செயலர்.
''சரி, சார்.''
அவனுக்கு தலைமைச் செயலரை மிகவும் பிடிக்கும். இவனது, 'ரோல் மாடல்' அவர் தான். அவரைப் பார்த்தும், கேட்டும் தான், தன்னை செதுக்கிக் கொண்டான்.
அவரது எழுத்துக்களும், மேடைப் பேச்சுத் திறனும், இவனை கவர்ந்தவை. அவற்றால் ஈர்க்கப்பட்டு, குடியுரிமைப் பரீட்சை எழுத தீர்மானித்தான். இவன் மட்டுமின்றி, எத்தனையோ இளைஞர்களும், இளம் பெண்களும் இவரால் குடியுரிமை பயிற்சிக்கும், தேர்வுக்கும் சென்றவர்கள்.
இத்தனைக்கும், அவர் ஒன்றும் வயதானவரல்ல. பெரிய பதவிகளில் இருந்த பின்னரே, தலைமைச் செயலராகி இருப்பவர். அவரே அழைத்து பேசியதில், தன் களைப்பை மறந்தான், புகழேந்தி.
முதல்வரே தன்னை அழைத்துப் பேசியதை போல் உணர்ந்தான். அவர்கள் அனைவரும், தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வீணடித்து விடக்கூடாது. இந்த பிரச்னையை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
முதல்வரும், அமைச்சரும் மற்றும் தலைமைச் செயலரும் திருப்திப்படும் வகையில், நடந்து கொள்ள வேண்டும். நீதி, நியாயம் என்னவோ, அதன்படி செயல்பட வேண்டும்!
வீட்டை அடைந்த போது, தனக்காக பிரபாகர், வாசலிலேயே காத்து நிற்பதைப் பார்த்தான்.
''என்ன, பிரபா?''
''என்னாச்சு புகழ்? ராத்திரி போனவன் இதோ இப்பத்தான் வர்ற. என்ன விஷயம், புகழ்?''
''பதவியில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் சகஜம் தானே, பிரபா. பிரச்னைன்னு ஏற்பட்ட பின், பஞ்சு மெத்தையில் படுத்து துாங்கிக்கிட்டா இருக்க முடியும்?''
''இப்ப என்ன பிரச்னை, புகழ்?''
''நீர்வளூர் கிராமத்து பிரச்னை, பிரபா.''
புகழேந்தி மாடிக்கு போனதும், துாங்கிக் கொண்டிருந்த, சுபாங்கி எழுந்து உட்கார்ந்தாள்.
''ரெண்டு நாளா எங்க போனீங்க?''
''வேலை இருந்துச்சு!''
''அப்படி என்ன வேலை?''
''சொன்னாப் புரியாது.''
''அப்பா, போன் பண்ணி எல்லாம் சொன்னாரு.''
''சரி,'' என, நகர முயன்றான். ஆனால், அவள் விடவில்லை. உடை மாற்றக் கூட நேரம் தரவில்லை.
''அப்பா என்ன சொன்னாருன்னு கேட்க மாட்டீங்களா?''
''சரி சொல்லு,'' என்றான், அலுப்பான குரலில்.
''நான் பேச ஆரம்பிச்சாலே உங்களுக்கு சலிப்பும், அலுப்பும் வந்துடுமே.''
தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றியது, அவனுக்கு. ஆனாலும், அமைதியாகவே பேசினான்.
''இதப் பாரு, சுபாங்கி. ரொம்ப களைச்சுப் போய் வந்திருக்கேன். கொஞ்ச நேரம் படுத்துத் துாங்கறேன். அப்புறம் பேசலாமா?''
''இல்ல... இப்பவே சொல்லிடறேன்.''
''சரி, சொல்லு.''
''தப்பு மொத்தமும், உங்க பேர்ல தானாம். ஆரம்பத்துலயே நீங்க சரியான, 'ஆக்ஷன்' எடுத்திருக்கணுமாம். முளையிலேயே கிள்ளி எறிஞ்சிருந்தா, இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதாம். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பேச்சை, நீங்க காதுலயே போட்டுக்கலையாம்.
''அவுங்களுக்கு தேவையான இடுகாட்டு வழியை சீர் செய்து தரச் சொல்லி, எத்தனையோ தரம், மனு கொடுத்தாங்களாம். நேர்லயும் சந்திச்சு கேட்டுக்கிட்டாங்களாம். ஆனால், நீங்க அலட்சியப்படுத்தி அனுப்பிட்டீங்களாம்.
''ஏற்கனவே, உன் புருஷனுக்கு தாழ்த்தப்பட்டவங்கன்னா ஆகாது. ரொம்ப கேவலமா நடத்துவான். உயர்குடி மக்கள்ன்னா நெருங்கிப் பழகுவான். இப்பவும் உயர்குடி மக்களுக்கு ஆதரவானவன் தான், உன் புருஷன். நீர்வளூர் கிராமத்துலயும் அதான் நடந்திருக்கு.
''பதவிக்கு வந்த உடனே தாழ்த்தப் பட்டவங்களுக்கான இடுகாட்டு வழியை சீர் செய்து, கொடுத்திருந்தா, அரசுக்கும் சங்கடம் ஏற்பட்டிருக்காது. பாதி ராத்திரியில அமைச்சரும், ஓடி வந்திருக்க வேணாம்ன்னு சொன்னாரு!''
அடிவயிற்றில், பகீரென்றது அவனுக்கு. இது என்ன அபாண்டம். எப்பேர்ப்பட்ட பொய். வேண்டுமென்றே பிரச்னையை திசை திருப்ப முயல்கிறாரா? பழியை தன் மீது சுமத்த எத்தனிக்கிறாரா?
சுபாங்கி சொன்ன மாதிரி இதுவும் பழிவாங்கும் படலத்தின் ஓர் அங்கமோ! இவரும், மகளோடு சேர்ந்து வஞ்சம் தீர்க்க முயல்கிறாரே! எப்படியாக இருந்தாலும் தான் அமைதி காப்பது தான் சரியாக இருக்கும். அது தான் முறை.
''அப்படியா சொன்னார். சரி.''
அவனது சலனமற்ற அமைதியும், நிதானமும் அவளை எரிச்சலுாட்டியது.
''என்ன, சரி? அப்பா சொல்றது தானே நியாயம்?''
''அப்படியே வச்சுக்க.”
''வச்சுக்கிறதென்ன. அப்பா சொன்னா சரியாகத்தான் இருக்கும். அவுரு எவ்வளவு பெரியவரு. எத்தனை வருஷமா அரசியல்ல இருக்காரு. கட்சியோட அடிமட்டத்திலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்னைக்கு மந்திரி பதவியை பிடிச்சிருக்காருன்னா, சும்மாவா! அவரோட அனுபவத்துல எத்தனை பார்த்திருப்பாரு. அவரு சொன்னா தப்பாவா இருக்கும்?''
''உங்கப்பா சொல்றது தப்பில்ல. ரொம்ப சரின்னே ஒத்துக்கறேன். மணி என்ன ஆச்சு பாரு? ராத்திரி முழுசும் துாங்கல. நின்னுக்கிட்டு இருந்திருக்கேன். கால் வலி, தலை வலி எல்லாம் இருக்கு. கொஞ்சம் என்னை துாங்க விடறியா? இந்த நேரத்துல எதுக்கு இந்த தேவையில்லாத பேச்செல்லாம்!''
''ஆமாம், நான் பேசுனா தேவையில்லாத பேச்சு. கீழே, அரைமணி நேரம் நின்னு, உங்க பிரண்டு கிட்ட பேசுனீங்களே... அது மட்டும் ரொம்பத் தேவையான பேச்சா.''
''சு... பா...!''
''என்ன அதட்டுறீங்க. உங்க அதட்டலுக்கெல்லாம் பயப்படுறவ இல்ல நான்.''
''கத்தாத சுபா. பிரபா காதுல விழப் போகுது.''
''விழட்டும். நல்லா விழட்டும். விழணும்ன்னு தானே கத்துறேன். கட்டின பொண்டாட்டி கிட்ட எப்படி நடந்துக்கறீங்கன்னு, உங்க அருமை நண்பர் தெரிஞ்சுக்கட்டும்.''
அருகில் போய் அவள் வாயைப் பொத்தினான், புகழ்.
''என் வாயைப் பொத்தலாம். ஊர் வாயைப் பொத்த முடியுமா? உலகத்தின் வாயைப் பொத்த முடியுமா? நாளைக்கே இது பெரிய விஷயமாகி, பத்திரிகைகள் எல்லாம் எழுதுமே. மீடியா மொத்தமும் பேசுமே. அந்த எல்லா வாய்களையும் பொத்துவீங்களா?''
''அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். முதல்ல நீ உன் வாயை மூடு.''
''அது சரி. வேண்டாத பொண்டாட்டி கைபட்டா குத்தம். கால் பட்டா குத்தம்.''
''சரி சண்டை வேண்டாம். இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லு?''
''இப்பவே அப்பாவைக் கூப்பிட்டு பேசணும். அவர் சொல்கிறா மாதிரி நடந்துக்கணும்.''
''ஏன், எனக்கென்ன சொந்த புத்தி இல்லையா?''
''இருந்திருந்தா இப்படியெல்லாமா நடந்துக்குவீங்க. யாரோ ஒரு பொண்ணுக்காக ஓடுறது. கீழ் ஜாதிக்காரங்களுக்கு எதிரா நடந்துக்குறது... இதெல்லாம் நல்ல புத்தியுள்ள, படிச்சவங்க செய்யுற வேலையா?''
''சுபாங்கி!''
''சீ, எதுக்குடா கத்துற? நீ குரலை ஒசத்தனா, நான் அடங்கிடுவேன்னு நினைச்சியா? கீழே போய் நின்னு பேசுவேன். தெருவுக்கு போய் நியாயம் கேட்பேன்.''
திடீரென்று சுபாங்கி, தன் குரலை உயர்த்தி, மரியாதை குறைவாக, 'டா' போட்டு பேச ஆரம்பித்தாள். கீழே தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் படுத்திருந்த, பிரபாகர், தன் காதுகளை பொத்திக் கொண்டான். உடலும், மனமும் அவனுக்குக் கூசின.
'ச்சீ... என்ன பெண் இவள்? பணத்தின் திமிரா அல்லது அவளது அப்பாவின் பதவி கொடுக்கிற தைரியமா?'
புகழேந்தியை நினைத்து வருத்தப்பட்டான். அழகாக வலைவிரித்து அவனை சிக்க வைத்து விட்டதாக, வருத்தப்பட்டான்.
அம்மா இன்றி அப்பா பெண்ணாக வளர்ந்தவள், சுபாங்கி. அப்பாவை ஆதர்ஸமாக கொண்டவள். அவரது நிழலிலேயே இருந்தவள். அவரது குணத்தைத்தானே கொண்டிருப்பாள். அப்பாவின் பிம்பத்தை தானே, கணவரிடமும் எதிர்ப்பார்ப்பாள்.
அரைமணி நேரம் கூட துாங்கியிருக்க மாட்டான், புகழேந்தி. மொபைல் போன் ஒலித்தது. எஸ்.பி., ஈஸ்வரி பேசினார். அவர் குரலில் பதட்டமும், படபடப்பும் தெரிந்தது. பாதி துாக்கத்தில் விழித்தெழுந்த, புகழேந்திக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
''சொல்லுங்க... என்ன சொன்னீங்க?'' எனக் கேட்டான்.
''நீங்க உடனடியாக இங்க வரணும் சார்.''
''எங்க?''
''எஸ்.பி., ஈஸ்வரி பேசறேன், சார். நீர்வளூர் வரணும், சார்.''
சடாரென்று எழுந்து உட்கார்ந்தான். துாக்கம் முற்றிலும் கலைந்து போயிற்று. உள்ளுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது.
''ஏதாவது விரும்பத்தகாதது நடந்து விட்டதா?''
''ஆமாம், சார்.''
''இதோ, வரேன்,'' என்ற புகழேந்தி, உடனே கிளம்பினான்.
- தொடரும்
இந்துமதி