
சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா: நீங்கள், டீ வாங்கிக் கொடுக்கும் ஆபீஸ் பாய் ஆக இருந்தபோது பயன்படுத்தி வந்த, 'அட்லஸ்' சைக்கிள், இப்போதும் ஒரு பொக்கிஷம் போல், உங்கள் கைவசம் இருக்கிறதா?
சைக்கிள் இன்னும் நல்ல நிலையில் இருப்பதால், யாருக்காவது பயன்படட்டும் என யோசித்து, என் உதவியாளர் மகனுக்குக் கொடுத்து விட்டேன்! அவர் அதில் தான், பள்ளிக்குச் செல்கிறார்!
எம்.செல்லையா, சாத்துார்: 'அதிகாரம் இருந்தால், 'வெல்கம் மோடி' என்றும், எதிர்க்கட்சியாக இருந்தால், 'கோ பேக் மோடி' எனச் சொல்வதும், தி.மு.க.,வினரின் வாடிக்கை...' என, நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளாரே...
துாத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவுக்கு பிறகு, 'கோ பேக் மோடி' என்றால், 'மோடி பின்னால் செல்லவும்' என, தி.மு.க., அமைச்சர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனும் புரிந்து கொண்டிருக்கின்றனர்; அதைத் தானே அவர்கள் அன்று செய்தனர்! அவர்களின் ஆங்கிலப் புலமை, ரொம்ப ஜோர்!
* மா.தருண்ராஜா, தென்காசி: 'நன்றாக படித்த என் தாய் மாமா, டாக்டர் ஆன நிலையில், சரியாக படிக்காததால் நான், துணை முதல்வர் ஆனேன்...' என, உதயநிதி பேசியுள்ளாரே... இதன் மூலம் இளைஞர்களுக்கு என்ன சொல்கிறார்?
மிக மோசமான முன் உதாரணமாக திகழ்கிறார். இன்னும், 'விளையாட்டு' பிள்ளையாகவே இருக்கிறார். உதயநிதியா, 'உதவாத நிதியா' என தெரியவில்லை!
ஆர்.பிரகாஷ், பொன்மலை: 'ஓய்வு எடுக்க விருப்பமில்லை...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?
வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு சேர்க்க, அனுதாப அலை உருவாகும் என்பது, ஒரு காரணம்; துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் மேல், நம்பிக்கை இல்லாமல் இருப்பது, இன்னொரு காரணம்!
* பாபு கிருஷ்ணராஜ், கோவை: திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையே, அடுக்கு மொழி பிரசாரமும், மேடைப் பேச்சும் தான் என்ற சித்தாந்தத்தை உடைத்து, பா.ஜ., 'ரோடு ஷோ'வால் அனைவரையும் ஈர்த்து விட்டது. திராவிட கட்சிகள், தங்கள் கொள்கை பிடிமானத்தை கைவிட்டு, பா.ஜ., மாடலை பின் தொடர்வது என்ன நியாயம்?
தமிழ்ப் புலமையோடும், அடுக்கு மொழியிலும் மக்களைக் கட்டிப் போடும் திறன், அண்ணாதுரை, கருணாநிதியோடு நின்று விட்டது. இப்போதெல்லாம் துண்டுச் சீட்டு தான்; அதையும், தப்பும் தவறுமாக படிக்கின்றனர். இதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், 'ரோடு ஷோக்கு' நடக்கிறது!
ஜே.அருணா, கோவை: கர்நாடகா, ஆந்திராவில் எல்லாம், தமிழ் 'தினமலர்' வெளியிட்டால் என்ன?
பெங்களூரில் அச்சடிக்கப்பட்டு, கர்நாடகாவின் பல இடங்களில், நம் நாளிதழ் விற்பனை ஆகிறது! நம் நாட்டின் தலைநகரான டில்லியிலும், நம் நாளிதழ் அச்சடிக்கப்பட்டு, பல இடங்களில் விற்பனை ஆகிறதே!
கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: நம் நாடு இவ்வளவு முன்னேறியும், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில், இன்றும் சைக்கிள் ரிக் ஷா பயன்பாட்டில் உள்ளதே...
சைக்கிள் ரிக் ஷா மட்டுமல்ல; மனிதர்களால் இழுத்து செல்லப்படும் கை ரிக் ஷாக்களும் உண்டு. கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் இப்படி தான் இருக்கும்!
அகிலா பாரதி கண்ணம்மா, கோவை: அந்துமணி புத்தகங்கள், கொடிசியா புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாவது பற்றி...
வாராவாரம் வாரமலர் இதழில் படித்து விட்டாலும், புத்தக வடிவில் தொகுப்பாக படிக்க, வாசகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்! அதனால், அதிகம் விற்பனையாகின்றன!

