PUBLISHED ON : ஆக 10, 2025

முன்கதைச் சுருக்கம்: தான் வேலையை ராஜினாமா செய்து விட்டதையும், குடிமைப் பயிற்சி மையம் ஆரம்பிக்க இருப்பதைப் பற்றியும், விரிவாக தன் அப்பாவிடம் கூறினான், புகழேந்தி. அவனது முடிவு சரியாகத்தான் இருக்கும் என நினைத்து, வீட்டு பத்திரத்தை எடுத்து வந்து, புகழேந்தியிடம் தந்தார், அவன் அப்பா. பயிற்சி மையம் துவங்க, வங்கியில் கடன் வாங்க, இது உதவும் எனக் கூறி, நெகிழவும் வைத்தார்.
இரவு, தோட்டத்தில் அமர்ந்திருந்த, கயல்விழியிடம், புகழேந்தி பற்றி உயர்வாக பேசினார், சமையற்கார பெரியவர்.
''ராத்திரி நேரங்களுக்கே தனியான ஒரு அழகு உண்டு இல்லையா, பெரியவரே?'' கயல்விழி தான் முதலில் வாய் திறந்தாள்.
''ஆமா, சின்னம்மா. பகலை விட ராத்திரி ரொம்ப அழகு தான். பகலில் வாட்டி எடுக்கிற வெயிலும், வாகனங்களின் பேரிரைச்சலும், அவைகளால் ஏற்படுகிற புழுதியும், ராத்திரி நேரத்துக்கு கிடையாதில்ல. இயற்கை போல மனுஷங்க மனசும் ஓஞ்சு போய், நிம்மதியாக துாங்குகிற நேரம் இந்த ராத்திரி தானே, சின்னம்மா.''
''நீங்க சொல்றது ரொம்ப சரி, பெரியவரே. பவுர்ணமிக்கு இன்னும் ரெண்டு, மூணு நாள் தான் இருக்கும் போலிருக்கே!''
''நாளை மறுநாள், பவுர்ணமி சின்னம்மா. அந்த ஊருன்னா அப்படி திமிலோகப்படும்.''
''அதையெல்லாம் மிஸ் பண்றீங்களா பெரியவரே?''
''இல்லீங்க சின்னம்மா. 20 வருஷத்துக்கு மேல கலெக்டர் பங்களாவுல நான் வேலை செய்திருக்கேன். நாலைஞ்சு கலெக்டருங்க, அவங்க சம்சாரம், குடும்பம்ன்னு பார்த்திருக்கேன். ஆனா, நம்ப சின்னய்யா மாதிரி இதுவரை ஒருத்தரைக் கூட பார்க்கல. இனி பார்க்கவும் முடியாது, சின்னம்மா.''
அதை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தாள், கயல்விழி. அவரே மேலும் தொடர்ந்தார்...
''சின்ன வயசு தான். ஆனா, என்ன மாதிரி மனுஷர். எத்தனை அன்பு. எல்லார் மேலேயும் எவ்வளவு பிரியம். ஏழை, பணக்காரன், ஜாதி வித்தியாசம் இல்லாம, மனுஷனை மனுஷனா பார்க்கிற இவரோட குணம், வேற யாருக்கும் வராது.
''இங்க வந்து பார்த்தப்புறம் தானே தெரியுது. இது, வாழையடி வாழைன்னு. நல்ல நிலத்துல போடப்பட்ட தேர்ந்தெடுத்த விதைன்னு. ஊரென்ன ஊரு சின்னம்மா? மனுஷங்களால் தானே ஊரு. உள்ள இருக்கிறவங்களால் தானே வீடு.''
''அடேங்கப்பா...'' என, கண்கள் அகல கேட்டாள், கயல்விழி.
''ஏன் சின்னம்மா. நான் ஏதும் தப்பாப் பேசிட்டேனா?''
''எவ்வளவு அழகாப் பேசுறீங்கன்னு பிரமிப்பா பார்க்கறேன்.''
''அட நீங்க வேற சின்னம்மா. அழகான மனசுள்ளவங்களோட சேர்ந்தா, பேச்சும் அழகா வரும். அப்படித்தான் இப்ப நான் பேசுனதெல்லாம்.''
''என்ன இந்த நேரத்துல இங்க வந்து உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கீங்க,'' என்ற, புகழேந்தியின் குரல் கேட்டு, இருவரும் சடாரென்று எழுந்து நின்றனர்.
''எதுக்காக இப்படி பதட்டப்பட்டு எழுந்துக்கறீங்க, உட்காருங்க.''
''இல்லீங்க சின்னய்யா. சேர் கொண்டு வந்து போடுறேன். நீங்க, உட்காருங்க,'' என, கைப்பிடியோடு கூடிய பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து போட்டார், பெரியவர்.
அதில் அமர்ந்து கொண்ட புகழேந்தி, ''உட்காரு கயல். நீங்களும் உட்காருங்க பெரியவரே...'' என்றான்.
''இல்லீங்கய்யா. நான் போய் படுக்கறேன். நீங்க பேசிட்டு வாங்க.''
பெ ரியவர் உள்ளே போனதும், துணி துவைக்கும் கல்லின் மீது உட்கார்ந்தாள், கயல்விழி. சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை.
''உனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா, கயல்?'' என்றான், புகழேந்தி.
''யாருக்காவது இந்த இடம் பிடிக்காமல் போகுமா? அந்த இடத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், இது சோலைவனம்ங்க.''
''அது கலெக்டர் பங்களா. ஒரு குட்டி அரண்மனை. இது ரொம்ப சின்ன வீடு, கயல்.''
''இருக்கலாங்க. ஆனால், கோவில்! அன்பும், பண்பும் குடியிருக்கும் கோவில்.''
''நல்ல காலமாக நான், வேலையை ராஜினாமா செய்தேன். இல்லாவிட்டால் அந்த நரகத்தில் தான் உழன்று கொண்டிருக்க வேண்டும். அது, என் உயிருக்கே உலை வைத்திருக்கும், கயல்.''
''ஏன், இப்படி சொல்கிறீர்கள்?'' பயம் கலந்த பார்வையோடு, கலவரமான குரலில் கேட்டாள், கயல்விழி.
''ஆரம்பத்திலிருந்து சொன்னால் தான் உனக்கு புரியும், கயல்,'' என, சுபாங்கி தன் வீட்டிற்கு வந்ததிலிருந்து சொல்ல ஆரம்பித்தான்.
சுபாங்கியின் அப்பா, நீர்வளூர் கிராமத்தில், தன் அடியாட்களை வைத்து நடத்திய அராஜகம் வரை சொல்லி முடித்ததும், வேதனை கலந்த ஆழமான பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது, புகழேந்தியிடமிருந்து.
''அந்த உறுமலுக்கு பயந்தா, நீங்கள் பதவியை ராஜினாமா செய்தீர்கள்? அந்த ஊரை விட்டு வந்தீர்கள்?'' என, சிறிது கூட யோசிக்காமல் சட்டென்று, கயல்விழி கேட்டதும் திடுக்கிட்டான், புகழேந்தி. அவன் முகம் வாடிப் போயிற்று; மனசு கலங்கியது.
''என்னைப் பற்றி நன்றாக தெரிந்துமா நீ, இந்த கேள்வியை கேட்கிறாய், கயல்?''
கீழ் உதட்டை கடித்துக் கொண்டவள், கெஞ்சுகிற குரலில், ''ஐயம் சாரி. வெரி சாரி. நான் அப்படி கேட்டிருக்கவே கூடாது தான். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்,'' என்றாள், கயல்விழி.
''ச்சே... ச்சே... இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, கயல். உயிருக்கெல்லாம் பயந்து ஓடி வருகிறவன் இல்லை, நான். எனக்கு இந்த அரசியல், அரசாங்க வேலை எதுவும் பிடிக்கவில்லை, கயல்.''
''பிடித்துத்தானே ஐ.ஏ.எஸ்., எழுதி, பத்தாவது ராங்கில் பாஸ் பண்ணினீர்கள்?''
''ஆம், பிடித்து தான் படித்தேன். நியாயம் மறுக்கப்பட்ட அப்பாவிகளுக்கும், ஏழை - எளிய மக்களுக்கும் உதவி செய்ய நினைத்தேன். ஆனால், என் பதவியே அந்த தாழ்த்தப்பட்ட, எளிய மக்களுக்கு எமனாகும் என, நினைக்கவில்லை. அதை, என் மாமனார் அமைச்சர் பரமசிவம் செய்வார் என, கனவு கூட காணவில்லை.''
''இதைப் பற்றி முதல்வருக்கு தெரியாதா? உளவுத்துறை, 'ரிப்போர்ட்' எல்லாம் போகாதா?''
''உளவுத்துறை, 'ரிப்போர்ட்' தரும். ஆனால், எல்லாமே முதல்வர் காதுக்கு போய் விடாது, கயல்.''
''ஏன்?''
''எல்லாவற்றையும் அவர் ஒருவரே பார்க்க வேண்டும் என்றால், அமைச்சர்கள் எதற்காக? அமைச்சர்களின் கீழ் உள்ள, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற செகரெட்ரிகள் எதற்காக?''
''ஆனாலும், நீர்வளூர் பிரச்னை மிகப்பெரிது இல்லையா? ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதல்லவா?''
''அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், இது ஜாதிக்கலவரம் என்றே இன்னமும் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.''
''அது தவறு தானே? குற்றம் புரிந்தவர் தண்டிக்கப்படத்தானே வேண்டும்... உண்மையை வெளிப்படுத்தி சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!''
''இல்லை, கயல். அது தப்பு. இது அரசியல். எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என, செய்து விடக் கூடாது. அதுவும் அந்த அமைச்சரை அப்படிப் பதவி நீக்கம் செய்து விடவும் முடியாது.''
''அது தான் ஏன் எனக் கேட்கிறேன்?''
''வெளியிலிருந்து சொல்வது சுலபம். ஆனால், உள்ளே நுழைந்து பார்த்தால் தான், நெளிவு சுளிவுகள் பிடிபடும். அமைச்சர் பரமசிவம், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சித் தலைவரின் நெருங்கிய உறவினர்.
''அவரைப் பதவி நீக்கம் செய்வது கூட்டணியையே பாதிக்கும். சில நேரம் ஆட்சி கவிழும் அபாயமும் ஏற்படும். இதுபோன்று குட்டையைக் கலக்கி, தலைமைக்கு நெருக்கடி கொடுக்க நான் விரும்பவில்லை. அதனால், பழி என் மீது விழுந்தாலும் பரவாயில்லை என, ஏற்றுக் கொண்டு, நானாகவே பதவி விலகி வந்து விட்டேன்.''
''நீங்கள் பதவி விலகி வந்தாலும் கூட, அவர் செய்தது மாபெரும் குற்றம் அல்லவா? டில்லி ஆணையத்தில் இருந்தெல்லாம் வந்து உங்களை விசாரித்தனரே...''
''விஷயம் இந்த அளவிற்கு விபரீதமாகும் என, அவர் நினைத்திருக்க மாட்டார். நினைத்திருந்தால் செய்திருக்க மாட்டார். முதல்வரின் நல்லெண்ணத்தில் இருக்கும் யாரும் அதை கெடுத்துக் கொள்ளும் செயல்பாட்டில் இறங்க மாட்டார்கள்.''
''என்னவோ போங்கள். எனக்கு இந்த அரசியல், ஆட்சி எதுவும் பிடிபடவில்லை.''
''கட்சி, அரசியல், ஆட்சி எல்லாமே யூகங்களும், வியூகங்களும் தான். விளையாட்டு என்றால் மைதானத்தில் நின்று விளையாடி விடலாம். ஆனால், யுத்த களத்திற்கு வியூகங்கள் தான் வகுக்க வேண்டும்.
''வியூகம் வகுக்க எல்லாராலும் முடியாது. அது, தந்திரத்தால், சாணக்கியத்தனத்தால், நுண்ணறிவால், கூர்மையான செயல்பாட்டால், முன் யோசனையின் காரணமாக வகுக்கப்படுவது!''
''நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது, அரசியல், ஆட்சி எல்லாமே, மகாபாரதம் போன்றது தான் போலிருக்கிறதே?''
''கிட்டத்தட்ட அதே தான். அதே தந்திர விளையாட்டு தான்.''
''நான் கேட்டது ஒரே ஒரு சின்ன கேள்வி! அதற்கு இத்தனை பெரிய பதிலா. கேட்ட எனக்கே மூச்சு முட்டுகிறதே. அந்த சக்கர வியூகத்தினுள் நுழைந்து வெற்றி பெற்று, நாற்காலியில் அமருகிறவர்களுக்கு எப்படி இருக்கும்?''
''மணி ஐந்தாகி விட்டது, கயல். நேரம் போனதே தெரியவில்லை. வா போய் படுக்கலாம்,'' என, புகழேந்தி எழுந்து கொண்டதும், கூடவே எழுந்து அவனைப் பின் தொடர்ந்தாள், கயல்விழி.
அ ன்று கடற்கரையில் கூட்டமே இல்லை. காற்று சிலுசிலுவென்று வீசியது. மாலையும், இரவும் சந்திக்கும் பொன்னிற வெயிலில் கடலலைகள் மின்னின.
சிறு பெண்ணைப் போல், கடலலைகளில் கால்களும், புடவையும் நனைய நனைய நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாள், கயல்விழி.
குழந்தை மாதிரி சிரித்து அலைகளில் நனையும் அவளை, மவுனமாகப் பார்த்துக் கொண்டு நின்றான், புகழேந்தி.
''என்ன அப்படி பார்க்கிறீர்கள்?''
''இன்னும் எத்தனை நேரம் இப்படி அலையில் நிற்கப் போகிறாய்?''
''எத்தனை நேரமானாலும், எவ்வளவு முறையானாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க வைப்பது, மூன்றே முன்று விஷயங்கள் தான். ஒன்று கடல். இரண்டாவது வானம். மூன்றாவது, ரயில் பயணம்.''
''உண்மை தான். இவை மூன்றும் சலிக்கவே சலிக்காத விஷயங்கள் தான்,'' என, ஆமோதித்த புகழேந்தி, ''வாயேன் மணலில் போய் உட்கார்ந்து பேசலாம்,'' என்றான்.
''உங்கள் நண்பர் இன்னும் வரலையே!''
''வருவான். பத்திரிகை துறையில் இருப்பவர்களால் சொன்ன நேரத்துக்கு வந்து விட முடியாது.''
''நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டீர்களே,'' என, சிரித்தாள், கயல்விழி.
''ஒரு நிமிடம் பெரிய அலையாக ஒன்று புறப்பட்டு வருகிறது. அது வந்து விடட்டும். அடித்துக் கொண்டு போகாமல் நிற்கிறேனா என, பார்க்கலாம்,'' என்றாள்.
ஆதிசேஷன் படமெடுத்தது போல் பெரிதாக உயர்ந்து சுருண்டு வந்த அலை, கயல்விழியை சிறிது கூட லட்சியம் பண்ணாதது மாதிரி அருகில் வராமல், அப்படியே திரும்பி போய் விட்டது.
''துாரத்தில் அத்தனை பிரமாண்டம் காட்டியது. ஆனால், அருகில் கூட வராமல் அப்படியே சுருண்டு திரும்பிப் போய் விட்டது?''
''சில மனிதர்கள் கூட இப்படித்தான், கயல். துாரத்தில் இருக்கிற போது, பெரிதாக, பிரமாண்டமாக தோன்றுவர். அருகில் சென்று பழகினால் தான், அவர்களின் சுயரூபம் வெளிப்படும். அதனால், எதையும் துாரத்திலிருந்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.''
''இதனால் தான் நீங்கள் எழுத்தாளராக இருக்கிறீர்கள்,'' என்றாள், கயல்விழி.
''அது மட்டும் இல்லை, கயல். அனுபவம் பேசுகிறது,'' என்றவாறு வந்து சேர்ந்து கொண்டான், பிரபாகர்.
மூவரும் கடலை விட்டு வெளியில் வந்து மணலில் உட்கார்ந்தனர்.
''தாமதமாக வந்ததற்கு மன்னிக்கணும், கயல்.''
''அதற்கான காரணத்தை உங்கள் நண்பரே சொல்லி விட்டார்.''
''என்ன சொன்னாய், புகழ்?''
''உனக்கு வரக்கூடிய கடைசி நேர வேலைகளைப் பற்றி சொன்னேன்.''
''இன்னிக்கு வந்த வேலை, உன் ஆள் கூப்பிட்டு அனுப்பியதால் ஏற்பட்டது.''
''யாரு பிரபா?''
''அமைச்சர் பரமசிவம். கூடவே அவரது அருமை மகள், சுபாங்கி.''
சட்டென்று அமைதியானான், புகழேந்தி. கயல்விழியின் முகத்தில் லேசாகக் கலவரம் படர்ந்தது.
- தொடரும்
இந்துமதி