
டி.பசுபதி, பொள்ளாச்சி: தற்போதும் தபால் கார்டு மற்றும் அஞ்சல் உறை வாயிலாக, வாசகர்களின் கேள்விகள் தங்களை வந்தடைகிறதா?
தினமும் நுாற்றுக்கணக்கான வாசக, வாசகியரிடமிருந்தும், வயதானவர்களிடமிருந்தும், அஞ்சல் உறை மற்றும் தபால் கார்டுகளில் கேள்விகள் வருகின்றன; இவை தவிர, உலகம் முழுவதிலுமிருந்து, 'இ-மெயில்' மூலம் வாசகர்கள் கேள்விகளை எழுதுகின்றனர்! அவர்கள், 'தினமலர்' நாளிதழை தினமும் இணைய தளத்தில் படித்து விடுகின்றனர்.
சாய் செந்தில், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி: 'தி.மு.க., போல கட்சி நடத்த அறிவு வேண்டும்...' என்கிறாரே, ஸ்டாலின்?
தி.மு.க.,வைப் போல, 'விஞ்ஞான ஊழல்' செய்ய உழைப்பும், அறிவும் வேண்டும் என்பதை மறைமுகமாக இப்படி சொல்கிறார் போலும்!
கே.முருகேசன், தஞ்சாவூர்: 'டாஸ்மாக்' குடிமகன்கள் இனி, 'அரசின் முதலீட்டாளர்கள்' என்று அழைக்கப்படுவர் தானே...
ஆஹா... 'அரசின் முதலீட்டாளர்கள்' என்பது அருமையான பெயர்! தமிழக ஆட்சியாளர்கள் எப்பேர்ப்பட்ட சாதனையாளர்கள் பாருங்கள்; ஏராளமான முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளனரே!
மு.நாகூர், சுந்தரமுடையான்: 'உள்ளூர் மொழி தெரிந்த வங்கி ஊழியர்களை நியமிப்பது அவசியம்...' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே...
உள்ளூர் மொழி தெரிந்தவரை நியமித்தால், வாடிக்கையாளர் பயனடைவர்; படிப்பறிவில்லாத பலரும் வாழ்த்துவர்; அவர்களுக்கு இந்த திட்டம் வசதியாக இருக்கும். நிர்மலா சீதாராமன் நன்கு யோசித்து இதைக் கூறியுள்ளார்; நடைமுறைப்படுத்தி விடுவார் என நம்புவோம்!
* கே.அப்புக்குட்டி, பாலக்காடு: சிறப்பு வாக்காளர் திருத்தம் என்பதே, போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரை நீக்குவது, இரட்டை வாக்காளர்களை நீக்குவது, தகுதியான வாக்காளர்களை மட்டும் கண்டறிவது தானே... இதற்கு ஏன், தமிழக அரசு பதற்றப்படுகிறது?
நீங்கள் கூறியதெல்லாம் நடந்தால், தங்களது ஓட்டு வங்கியில், பெரிய ஓட்டை விழுந்து விடும்; வட மாநிலத்தவர் சேர்க்கப்பட்டால் தங்களுக்கு ஓட்டு விழாது என்பது புரிந்ததால் இந்த பதற்றம்!
* பெ.பொன்ராஜபாண்டி, மதுரை: தி.மு.க., ஆட்சியில், 6,999 சிறுமியர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு, 104 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் கீதா ஜீவன் பெருமையாக கூறுகிறாரே...
அடேடே... எப்பேற்பட்ட சேவை! அமைச்சரது புள்ளி விபரங்கள், நாமெல்லாம் போற்றிப் புகழ்பாட வேண்டிய விபரம் அல்லவா!
சிவசுப்ரமணியன், நெல்லை: ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால்; ரேஷனில் பொருட்கள் வாங்கினால்; மின் கட்டணம் கட்டினால், மொபைல் போனில், 'மெசேஜ்' வருகிறது. தேர்தலில் ஓட்டு போட்டால், 'மெசேஜ்' வரும் நடைமுறையை கொண்டு வந்தால், கள்ள ஓட்டுகளை தடுக்கலாமே!
சரியான யோசனை. தேர்தல் ஆணையம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய ஒரு தீர்வு, நீங்கள் கூறியிருப்பது!

