sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 23, 2025

Google News

PUBLISHED ON : நவ 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா-கே

'அசைன்மென்ட்டுக்காக, வெளியே போய் வருகிறேன்...' என்று கூறி, வெளியே போன, லென்ஸ் மாமா, அடுத்த, இரண்டாவது நிமிஷம் மீண்டும் உள்ளே வந்தார். 'டிவி சீரியல் நடிகை ஒருவரை, 'அவுட்டோரில்' படம் எடுப்பதற்கு நேரம் குறித்திருந்தேன். இந்த மழை வந்து கெடுத்து விட்டது. இவ்வளவு நேரம் வெயில் காய்ந்தது; இப்ப திடீர்ன்னு மழை பெய்கிறது. பிழைப்பை கெடுக்கும் மழை என்று இதைத்தான் சொன்னார்களோ!' என்று அலுத்துக் கொண்டார், மாமா. 'இது மழை சீசன் ஓய்... இப்படித்தான் இருக்கும். மழை பெய்யாவிட்டால், தண்ணீர் இல்லாமல் நாம் அதோகதி தான்...' என்றவர், தொடர்ந்து, 'துாறலில் ஆரம்பித்து பெருமழை வரை மழைக்கு ஏராளமான பெயர்கள் நம் கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது தெரியுமா?' என்றார், 'திண்ணை' நாராயணன். 'இவர் ஏதாவது சொல்ல போய், மாமாவுக்கு கோபம் வந்து விட போகிறதே...' என்று, அவரை, 'வாங்க நாணா டீ குடித்து விட்டு வரலாம்...' என்று கேன்டீனுக்கு அழைத்து சென்றேன். இரண்டு டீக்கு, 'ஆர்டர்' செய்து விட்டு, 'மழைக்கு வேறு பெயர்கள் உள்ளன என்று ஏதோ சொன்னீர்களே... அது என்ன?' என்று கேட்டேன். 'அதுவா சொல்கிறேன், மணி...' என்று கூற ஆரம்பித்தார்: மிக நுண்ணிய தண்ணீர் துகள்கள் நம் மீது விழுவதை, ஊசி துாற்றல் என்பர். ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் மழை, சார மழை.

இதுதவிர, பூந்துாறல், பொசும்பல், எறி துாறல் என, துாறல்களுக்கு பல பெயர்கள் உள்ளன.

மழைக்கு, எறைசல், பறவல் மழை எனவும், மேலெழுந்தவாரியாக பெய்யும் மழைக்கு, பருவட்டு மழை எனவும், மிகவும் சொற்பமான மழைக்கு அரண்ட பருவம் எனவும் பெயருண்டு.

பகலில் பெய்யும் மழையை தொடர்ந்து, இரவோ, மறுநாளோ, அதற்கும் அடுத்த நாளோ பெய்வது, துணை மழை. இடைவிடாமல் தொடர்ந்து பெய்யும் மழையை, பேமழை, நச்சு மழை என்பர்.

பூமியெல்லாம் சேறாகும்படி பெய்தால், அது, வதி மழை. இதை ஐஸ்கட்டி மழை, ஆலங்கட்டி மழை எனவும் கூறுவர்.

மேலும், காத்து மழை, சேலை நனையும் மழை, கோடை மழை, கால மழை, பாட்டம் பாட்டமாய்(விட்டு விட்டு பெய்வது) மழை, நீருத்து மழை(தரையிலிருந்து, நீர் கசிந்து வெளியேறும் அளவுக்கு தொடர்ந்து பெய்யும் மழை), அடை மழை, விவசாயிகளுக்கு உகந்த மாசி மழை, தை மழை, சுழி மழை (பரவலாக பெய்யாமல், ஆங்காங்கே சுழி சுழியாக பெய்வது), பட்டத்து மழை(சரியான காலத்தில் பெய்வது) எல்லைக்கட்டி பெய்யும் மழை(ஊரின் எல்லை வரை பெய்து நின்று விடும்), மகுளிக்கும் மழை, வெள்ளை மழை (பயனில்லாத வீணான மழை) பரு மழை, பருவ மழை, பத மழை(விதைப்புக்கான ஈரமுள்ள மழை).

இப்படி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது, மாரி என்னும் மழை...' என்று முடித்தார், நாணா.

'மேக வெடிப்பு மழைன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா? சமீபகாலமா நம்மூர் மட்டுமின்றி வட மாநிலங்களில், வானம் பொளந்துக்கொண்டு, ஒரு மணி நேரத்தில், 24 செ.மீ., அளவுக்கு பெய்து நின்றுவிடும்...' என்ற குரல் கேட்டு, திடுக்கிட்டு திரும்பி பார்த்தோம். லென்ஸ் மாமா ஒரு கையில் வடையும், இன்னொரு கையில் டீ டம்ளரையும் பிடித்தபடி, வடை ஒரு கடி, டீ ஒரு வாய் என்று குடித்தபடி நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும், 'குபீர்' என்று சிரிப்பு வந்துவிட்டது எங்கள் இருவருக்கும். ப

பிரபல பத்திரிகையாளரான, சோ எழுதிய, 'திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்!' நுாலிலிருந்து படித்த சுவையான தகவல் இது: அ ந்த காலத்து நடிகர்கள் சிலரின் குணாதிசயங்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. அவர்களில் ஒருவர், எம்.ஆர்.ராதா.

பார் மகளே பார் படத்தில் மட்டுமே இவருடன் நடித்திருக்கிறேன். அவருடைய நாடகங்கள் சிலவற்றை நான் பார்த்திருக்கிறேன். எங்களுடைய நாடகங்கள் சிலவற்றை அவர் பார்த்திருக்கிறார். இதுவே, எங்களுக்குள் உள்ள பரிச்சயம்.

மனதில் பட்டதை சற்றும் தயங்காமல், அந்த இடத்திலேயே பேசி விடும் இவரது குணத்தை ரசிக்காமல் இருக்க முடியாது. நான், முதன் முதலாக சினிமாவில் நடிக்க வந்திருக்கிறேன் என்பதை அறிந்து, என்னைப் பற்றி, என்னிடமே விசாரித்து தெரிந்து கொண்டார்.

'தம்பி இதுக்கு முன்னாலே சினிமாவிலே கொஞ்சம் கூட அனுபவமே கிடையாதா?' என்று கேட்டார்.

'ஸ்டூடியோவையே இப்போது தான் பார்க்கிறேன். 'ஷூட்டிங்' கூடப் பார்த்தது கிடையாது. 'அவுட்டோர் ஷூட்டிங்' கடற்கரையிலோ, வேறு எங்காவது நடந்தால் கூட, நின்று பார்த்தது கிடையாது...' என்றேன்.

கரகரத்த குரலில், 'தம்பி, இதை என்கிட்டே சொன்னதோட நிறுத்திக்க. மத்தவன்கிட்டெல்லாம் சொல்லாதே. ஸ்டூடியோ, 'ஷூட்டிங்' எல்லாம் ரொம்ப பழக்கம் மாதிரி பேசு. இல்லாட்டி ஏச்சுடுவானுங்க...' என்று அறிவுறுத்தினார்.

அவரும், நானும் சேர்ந்து நடிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. எனக்கு, 'மெட்ராஸ் பாஷை' பேசி நடிக்கும் பாத்திரம். 'ஷாட்' எடுக்கும் போது, அவர் திடீரென்று, வசனகர்த்தா எழுதி கொடுக்காத வசனம் பேச, நானும் அதற்கு பதிலை கூறி விட்டேன். 'நாங்கள் இருவரும் இப்படிப் பேசப் போகிறோம்...' என்று தெரியாத இயக்குனர், நான் பேசிக் கொண்டிருக்கும் போதே, 'ஷாட்'டை, 'கட்' செய்ய சொல்லி விட்டார்.

ராதா, தானாகவே முன் வந்து, 'தம்பி சொன்ன, 'டயலாக்' நல்லா இருந்திச்சே, இன்னொரு, 'டேக்' எடுப்போம். நான் சொன்ன, 'டயலாக்'கை சொல்கிறேன். தம்பியும், பதிலுக்கு, அதே, 'டயலாக்' சொல்லட்டும்...' என்று கூற, அப்படியே படமாக்கப்பட்டது.

இதற்கு பிறகு ஒரு, 'அட்வைஸ்'சும் கொடுத்தார்...

'மெட்ராஸ் பாஷை பேசற கேரக்டர் தான் செய்யறே. இருந்தாலும், ரொம்ப அதிகமா அந்த, 'ஸ்டைல்' வேண்டாம். அப்புறம் வெளியூர் ஜனங்கள், 'இந்த ஆள் பேச்சே புரியலை'ன்னுருவானுங்க. அப்பப்ப கொஞ்சம் சாதாரணமாகவும் பேசினால் தான் எல்லாருக்கும் புரியும்...' என்ற உபதேசத்தை கூறி, ஒரு சர்ட்டிபிகேட்டும் கொடுத்தார். அது...

'என்கிட்டேயே, 'ஷாட்'லே பதில் பேசறியே நீ! என்னைப் பத்தி தெரியாதா உனக்கு?' என்றார்.

'உங்களை படத்திலே பார்த்திருக்கேன், சார்...' என்றேன்.

'வேற ஒண்ணும் என்னைப் பத்தி தெரியாது போலிருக்குது. அதான் தைரியமா பதில் பேசற. எப்ப நீ என்கிட்டயே அசரலையோ, நீ எவனுக்கும் அசர மாட்டே. தைரியமா நடி, தம்பி...' என்றார்.

இப்படி, புதிய முகம் என்று அலட்சியப்படுத்தாமல் ஊக்குவிக்கும் குணம், எல்லா சக நடிகர்களுக்கும் வந்து விடுவதில்லை. தன்னம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான், மற்றவர்களை ஊக்குவிக்கும் மனம் வரும்.

- இப்படி எழுதி இருந்தார்.






      Dinamalar
      Follow us