sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அப்பாசாமி!

/

அப்பாசாமி!

அப்பாசாமி!

அப்பாசாமி!


PUBLISHED ON : ஆக 25, 2024

Google News

PUBLISHED ON : ஆக 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாக்கத்தில் வந்த கனவால், திடுக்கிட்டு விழித்த சுதா, பக்கத்தில் படுத்திருந்த கணவன் இல்லாதது கண்டு, எழுந்து உட்கார்ந்தாள்.

'இன்னைக்கு, லீவு நாள் தானே. ஏன் அதுக்குள்ள எழுந்துட்டாரு...' என நினைத்து, 'ராம் ராம்' என, கணவனை கூப்பிட்டாள். பதிலேதும் வரவில்லை.

'அதுக்குள்ள, 'வாக்கிங்' கிளம்பிட்டாரா?' என்று முனகியபடி, ஹாலுக்கு வந்தாள்.

அங்கு, டேபிள் ஓரத்தில் வைத்திருந்த பேப்பரைப் பார்த்ததும், சற்று படபடப்புடன் அதை எடுத்து படித்தாள்.

அன்பு சுதா,

என்னைத் தேட வேண்டாம். நான் ஞானத்தைத் தேடிப் போகிறேன். கண்டிப்பாக நலமாக இருப்பேன். கவலை வேண்டாம்.

அன்புடன்,

ராமகிருஷ்ணன்

என, எழுதியிருந்தான், அவள் கணவன்.

சுதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அழுவதா, கோபப்படுவதா எப்படி எதிர் கொள்வது இந்த சூழலை என, விழித்தாள். எதுவும் யோசிக்க தோன்றாது, அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தாள்.

சற்று நேரத்தில் மகனும், மகளும் எழுந்து வந்து, அப்பா எங்கே என்றால், என்ன பதில் கூறுவது. ஏற்கனவே காவி வேட்டி கட்டும் ராமை, 'அப்பாசாமி' என்று அழைக்கும் அவர்களிடம், அப்பா, சாமியாராக எங்கேயோ போய் விட்டதாக சொல்ல முடியுமா... இல்லை, எல்லாம் விதிப்படி நடக்குதுன்னு தத்துவம் பேச முடியுமா?

மனம் கலங்கியது.

இவருக்கு இங்கு என்ன குறை, பக்தி அதிகமானால் இப்படி செய்வரா... மனக்குழப்பத்தில் சுதாவுக்கு தலை வலித்தது.

'உனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை பக்தி பழமாய் இருக்காருடி...' அம்மாவும், அக்காவும் சொன்ன போது, ரசித்து சிரித்தவள் தான்.

சுதாவின் அப்பாவுக்கு அவர்கள் வீட்டருகே இருந்த கோவிலில் தான் அறிமுகம் ஆனான், ராமகிருஷ்ணன்.

'என்ன ஒரு அருமையான பிள்ளை. இந்த காலத்தில் இப்படி ஒரு பையனை பார்க்கவே முடியாது...' என்று வீட்டில் சிலாகித்தவர், அவனை தன் மாப்பிள்ளையாகவே ஆக்கிக் கொண்டார்.

'நல்லா படிச்சுருக்கான். பெரிய ஐ.டி., கம்பெனியில் வேலை. ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அம்மா அப்பாவுக்கு அடங்கின பிள்ளை. என் பெண்ணையும் நல்லா வைச்சுக்குவான்னு நினைச்சீங்களே அப்பா. இப்படி பாதியில் என்னை நட்டாத்துல விட்டுட்டு, ஞானத்தை தேடிப் போறேன்னு போயிட்டாரே...' மனம் புலம்பியதில், கண்களில் நீர் வழிந்தது.

''அம்மா, ஏன் அழுதுட்டு இருக்க... அப்பாசாமி எங்கம்மா?'' துாங்கி எழுந்த மகள் கேட்டாள்.

கண்களை துடைத்தபடி, ''அப்பா, அவசர வேலையா வெளியூர் போயிருக்கார்,'' என்று கூறி, பிரச்னையை அப்போதைக்கு தள்ளி வைத்தாள், சுதா.

மடமடவென காபி, டிபன் தயாரித்தாள். பிள்ளைகள் இருவரையும் டியூஷனுக்கு அனுப்பினாள். அடுத்து இந்த விஷயத்தை தங்கள் பெற்றோரிடம் சொன்னால், அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வர் என்ற சிந்தனையில், மனம் கவலையில் ஆழ்ந்தது.

வாசலில், அழைப்பு மணி சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள், சுதா. உள்ளூரில் வசிக்கும் அவள் பெற்றோர் அங்கு நிற்பதைப் பார்த்ததும், அவளையும் அறியாமல் கண்கள் கலங்கின.

''சுதா என்னாச்சு, மாப்பிள்ளை வெளியூர் போயிருக்காரா, எங்க, என்ன விஷயம்? முந்தாநாள் அவரைப் பார்த்தபோது கூட சொல்லலையே,'' என பதட்டத்துடன் வினவினார், சுதாவின் அப்பா.

''சுதா அழறியா, என்னடி?'' என்றாள், அம்மா.

''அம்மா, வாசலிலேயே பேச வேண்டாம். உள்ள வாங்க,'' என, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள், சுதா.

''உன் பொண்ணு தான் போன் பண்ணி, அப்பா வெளியூர் போயிருக்காருன்னு சொல்லிட்டு, அம்மா அழுதுட்டு இருக்காங்கன்னு சொன்னா. ஒண்ணும் புரியாம ஓடி வந்தோம்,'' என்றார், சுதாவின் அப்பா.

''ஏன்டி மாப்பிள்ளை கூட ஏதாவது சண்டை போட்டியா?'' என்று கேட்ட, தன் அம்மாவிடம் ராம் எழுதியிருந்த கடிதத்தை கொடுத்தாள்.

அதைப் படித்த இருவரும், திகைப்பின் உச்சிக்கே போயினர்.

''இதென்ன எங்கேயுமே கேள்விப்படாத கூத்தால்ல இருக்கு,'' என்ற அம்மாவை முறைத்தாள், சுதா.

''ஏம்மா, வீட்டு இ.எம்.ஐ., எல்லாம் கரெக்ட்டா தானே கட்டுறாரு, மாப்பிள்ளை. வேற ஒண்ணும் உங்களுக்கு கடன் கிடையாது. அவரோட நண்பர்களிடம் இது மாதிரி ஏதாவது பேசியிருந்தாரான்னு கேட்டியாம்மா?'' என இழுத்தார், அப்பா.

''அப்பா, அவருக்கு நெருங்கிய நண்பர்கள்ன்னு யாரும் கிடையாது. உங்களுக்கு தெரியாதா, எதுக்கு இப்படி செய்தாருன்னு எனக்கே புரியலைப்பா,'' என்றாள், சுதா.

அப்போது, வாசல் கதவை திறந்து கொண்டு, ராமகிருஷ்ணனின் அக்காவும், அவள் வீட்டுக்காரரும் உள்ளே வந்தனர்.

''என்ன சுதா, அப்பாசாமி எங்கேயோ போயிட்டாரு, அம்மா அழுதுட்டு இருக்காங்கன்னு, போன் செய்தான், உன் பையன். என்ன விஷயம்?'' என்றாள், ராமின் அக்கா.

நாத்தனாரிடம் ராமின் கடிதத்தை காண்பித்தாள், சுதா.

''அடக் கடவுளே இதென்ன புதுசா இருக்கு. பொண்டாட்டி, பிள்ளைகளை விட்டுட்டு, ஞானத்தை தேடப் போறானா. இவனுக்கு யார் இந்த புத்தியை கொடுத்தது?'' என, புலம்பினாள்.

அதைக் கேட்டதும், சுதாவுக்கு ஒரு விஷயம் மனதில் பளிச்சிட்டது. ஒருவேளை அதுதான் காரணமோ என நினைத்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன் சாமியார் ஒருவர், பக்கத்து கோவிலில் கதா காலட்சேபம் செய்தார். அதை கேட்டு வந்ததிலிருந்து, 'நாம் ஏன் இப்படி மாயையிலேயே உழண்டுட்டு இருக்கோம். எது சத்தியம்ன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா... இறைவனை உணர இந்த மாயையிலிருந்து விலகணும்...' என்றான்.

'நம் வேலையை நாம சரியா செய்துட்டு எல்லாரிடமும் அன்பா இருந்தாலே போதுங்க...' என்று அவள் சொன்னது நினைவில் வந்தது. ராம் சொன்னதை பெரிசா கண்டுக்காம போயிட்டேனே... அதிர்ச்சியில் உறைந்து போனாள், சுதா.

''ஏம்மா, நீ வீட்டுல சரியா இருந்தா, அவன் ஏன் வெளிய போறான்,'' நாத்தனார் வீட்டுக்காரர் குதர்க்கமாக கேட்டார்.

சுதாவின் அப்பா கோபத்துடன், ''ஆமாங்க, நாங்க கூட நல்ல பையன்னு தான் கட்டி வைச்சோம். இப்படி பாதியில் கடமையை விட்டுட்டு ஓடினவரை என்ன மாதிரி ஆளுன்னு சொல்றது,'' என இரைந்தார்.

''கொஞ்ச நேரம் பேசாம இருங்க. யாருக்கும் காரணம் தெரியாது. அதுக்குள்ள இரண்டு பேரும் கோபத்தில் வார்த்தையை விடாதீங்க,'' என, இருவரையும் அடக்கினாள், ராமின் அக்கா.

மறுநாள் ராமின் பெற்றோரும், சுதாவின் சகோதரியும் வந்து, ஒரு மூச்சு பேசித் தீர்த்தனர். ஆனால், யாருக்கும் இதற்கான தீர்வு என்ன என்பது தெரியவில்லை.

முடிவாக, ஒரு வாரம் பார்த்து விட்டு, போலீசில் புகாரும், பேப்பரில் விளம்பரமும் கொடுக்க முடிவு செய்தனர்.

வந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சுதாவால் பதில் சொல்லி மாளவில்லை.

'ஏம்மா, அப்பா, சாமியாரா போயிட்டாராம்மா. இனிமே வீட்டுக்கே வர மாட்டாரா. அத்தை - மாமா சொன்னாங்க...' என்று கேட்கும் பிள்ளைகளிடம், ஏதோ சொல்லி சமாளித்தாள். பிள்ளைகளிடம் இப்படியா பேசுவாங்க பெரியவங்க என வருத்தமும், கோபமும் வந்தது சுதாவுக்கு.

ஒரு வாரம் ஆபீஸ் போகாமல், கணவன் இல்லாமல், வீடு வெறிச்சோடியது. மேலும், வீட்டில் மற்ற உறவினர்களோடு இருப்பது சுதாவுக்கு மன அழுத்தத்தில் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. இரவு வெகு நேரம் துாக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த, சுதா, 3:00 மணிக்கு மேல் தான் உறங்கினாள்.

திடீரென, 'சுதா, சுதா...' என, ராமின் குரல் கேட்டு, திடுக்கிட்டு விழித்தாள். பிரமையாக இருக்குமோ என நினைத்தவள் காதில், 'நான் திரும்பி வந்துட்டேன். கதவைத் திற...' என்று ராமின் குரலும், ஜன்னலில் அவன் முகமும் தெரிய, வேகமாக வந்து வாசல் கதவைத் திறந்தாள்.

அங்கு நின்றிருந்த ராமின் கன்னத்தில், 'பளார்' என அறைந்த சுதா, துக்கமும், கோபமும் ஒன்று சேர விம்மி அழுதாள்.

சத்தம் கேட்டு எழுந்த அனைவரும், ராம் திரும்பி வந்ததைக் கண்டு, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

''மாப்பிள்ளை... இன்னொரு முறை இந்த மாதிரி ஒரு இக்கட்டை, உங்க மனைவி, குழந்தைகளுக்கு ஏற்படுத்தாதீங்க,'' என்றார், சுதாவின் அப்பா.

அன்று இரவு பிள்ளைகள் துாங்கியதும், சுதாவின் கைகளைப் பிடித்து, கண்களில் நீர் வழிய, ''சுதா, என்னை மன்னிச்சுடும்மா. பந்த பாசத்தை விட்டு விலகுவது அவ்வளவு சுலபமில்லைன்னு இந்த ஒரு வாரத்தில் புரிஞ்சுக்கிட்டேன்.

''அடிப்படை தேவைகள் இல்லைங்கிறது கூட, எனக்கு பெரிசா தெரியலை. ஆனா, உன்னையும், குழந்தைகளையும் பிரிஞ்சு என்னால இருக்க முடியலை. என்னை மன்னிச்சேன்னு சொல்லும்மா,'' என, கெஞ்சினான், ராம்.

சற்று நேரம் பேசாமல் இருந்த சுதா, ''வீட்டை விட்டு வெளியே போனது நீங்க. ஆனா, இந்த ஒரு வாரத்தில் ஏச்சும், பேச்சும் கேட்டது, நான் தான். பொம்பள சரியில்லைன்னா தான் புருஷங்காரன் வெளிய போவான், இன்னும் என்னென்னவோ.

''இப்படி செய்யறது ஆண்களுக்கு ஒண்ணும் புதுசு இல்லைங்க. ஆனா, பெண்களுக்கு இப்படி செய்ய மனசும் வராது; நாங்க செய்யவும் மாட்டோம். இந்த சமுதாயமும், பெண்களை சுமைதாங்கிகளாகத் தான் பார்க்குது. ஆனா, இனியும் எங்களை அப்படி எதிர்பார்க்க வேண்டாம்,'' என்று, கூறினாள்.

பதில் கூற முடியாமல் வெட்கி தலை குனிந்தான், ராம்.

பவானி உமாசங்கர்






      Dinamalar
      Follow us