
விஜயராஜ் சேர்க்கப்பட்ட ரோஸரி பள்ளியில், ஆங்கிலம் பேசும் ஆங்கிலோ இந்திய சீமாட்டிகள் ஆசிரியைகளாக இருந்தனர். ஏ, பி, சி, டி... வாசிக்கச் சொல்லி தந்தனர். வீட்டுப் பாடம் எழுத கூறினர்.
விஜயராஜுக்கு எதுவும் ஒத்து வரவில்லை. சக மாணவர்கள் எல்லாரும் ஆசிரியர் சொல்படி கேட்டு கொண்டிருந்தனர். சாயங்காலம் பள்ளி விட்டு திரும்பும்போது சாலையோர விளையாட்டுகள் அவனை ஈர்த்தன.
விஜியின் வயதையொத்த சிறுவர்கள் வீதிகளில், கோலி, முதுகு பந்து, கண்ணாமூச்சி, ஐஸ்பாய், கில்லி என, விதவிதமாக உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் ஒருவன் ஆனான், விஜி.
விஜயராஜ் பெரிய இடத்து பிள்ளை. ஆனால், அவன் சினேகிதம் எப்போதும் குடிசை வாழ் குசேலன்களோடு கழிந்தது. அறியாப் பருவத்திலேயே வறுமையில் வாடும் ஏழைகளை கண்டால், இரக்கம் தன்னாலேயே சுரக்கும். சோற்றுக்கில்லாதவர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்து கொள்ளும் அற்புதமான குணம், பால்ய பருவத்திலேயே, விஜிக்கு உண்டானது.
விஜியின் இயல்பு, போகப் போக வீட்டுக்கு தெரியவந்தது. கூடிய விரைவில், ரோஸரி ஸ்கூலுக்கு நிரந்தரமாக, டாட்டா காட்டி விட்டான், விஜி. விளையாட்டே வாழ்வென உல்லாசமாக நாட்கள் நகர்ந்தன.
விஜியை மீண்டும், வேறொரு பள்ளிக்கு படிக்க அனுப்பினார், அழகர்சாமி. பள்ளிக்கூடம் மாறியதே தவிர, படிப்பு ஏறவில்லை. ஊர் சுற்றுவதற்கு பசங்க இல்லை என்றால், இருக்கவே இருக்கு சினிமா கொட்டகை.
வீட்டை சுற்றிலும் இருந்த சினிமா தியேட்டர்களான சென்ட்ரல், சிந்தாமணி, நியூ சினிமா மற்றும் மீனாட்சி ஆகியவை, வா ராஜா வா என, அழைத்தது.
அழகர்சாமியிடம், 'விஜி தொடர்ந்து, பள்ளிக்கு வருவதில்லை...' எனச் சொல்ல அஞ்சினர், ஆசிரியர்கள். தாயில்லாத பிள்ளையை அடித்து நொறுக்கி விட்டால் விபரீதமாகி விடும். ஆனால், அப்படியே இருந்து விடுவதும், விஜியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என, உணர்ந்தார், ஓர் ஆசான்.
அழகர்சாமியின் செவிகளில், விஜியின் அடாவடித்தனத்தை, அவன் படிப்பில் காட்டும் அலட்சியத்தை ஓதினார்.
அ ப்பாவின் பெயரை சொல்லி, சுற்று வட்டாரத்தில் எதையும் வாங்கிக் கொள்ள முடியும் என்ற சூழல் இருந்தது. எதற்கும் உடனடியாக பைசா தர வேண்டாம். எந்த தின்பண்டத்தையும், விஜி தனியாக தின்றதாக வரலாறே கிடையாது.
சின்னஞ்சிறு வயதிலும் உடன் வசிக்கும் சிறுவர்களுக்கும், கூட விளையாட வரும் பாட்டாளி வீட்டு தோழர்களுக்கும், அப்பாவின் காசில் வாங்கித் தந்து விட்டு, அவனும் சாப்பிடுவான்.
ஒவ்வொரு மாத முடிவிலும் அனைத்துக்கும் கணக்கு தீர்த்து விடுவார், அழகர்சாமி. நங்கூரம் பாய்ச்சியது மாதிரியான நேர்மையான குணம். விஜயராஜுக்கு பால்ய பருவம் சொர்க்கபுரியாகவே கழிந்தது.
வாத்தியார் வந்து வத்தி வைத்து விட்டு போன பின்பே, அழகர்சாமிக்கு தன் தவறு புரிந்தது.
விஜியை சற்றுத் தொலைவில் உள்ள பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க முடிவு செய்தார். உடன் துணைக்கு பெரியவன், நாகராஜையும் அனுப்ப திட்டமிட்டார்.
தேவகோட்டை டி.பிரிட்டோ உயர்நிலைப்பள்ளி தங்கும் விடுதியோடு தயாராக இருந்தது. நீண்ட நாள் ஹாஸ்டல் வாழ்க்கையில் நீடிக்கவில்லை, நாகராஜ். மதுரையிலேயே படிப்பை தொடர்ந்தார்.
விஜயராஜுக்கு மட்டுமே சிறை வாசம் என்பதாக இருந்தது, தேவகோட்டை. அங்கு, தமிழாசிரியர் சார்லஸ் தமிழை கற்பித்த விதத்தில், விஜி, தமிழ் காதலன் ஆனான். நாளொரு விளையாட்டும், பொழுதொரு திருக்குறளுமாக தமிழ்ப் பித்து தலைக்கேறியது.
தமிழில் இருந்த ஆர்வம் மற்றப் பாடங்களில் அறவே இல்லாமல் போனது.
தேவகோட்டையில் தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகராக மாறிப் போனான்.
சினிமாவோடு, என்.சி.சி., மற்றும் கால்பந்தாட்டம் என, கவனம் செலுத்தினான், விஜயராஜ். மீசை அரும்பும் கிளர்ச்சிப் பருவம். தி.மு.க.,வின் தாக்கத்தால் தமிழகத்து இளைஞர்கள், அண்ணாதுரையின் பின் அணிவகுக்கத் துவங்கினர். அக்கட்சியினர் நடத்திய ஊர்வலம், போராட்டங்கள் அனைத்திலும் முன் நின்றான், விஜயராஜ்.
கல்விக்கும், ஒழுக்கத்துக்கும் அடையாளமாக திகழ்ந்த, தேவகோட்டை டி.பிரிட்டோ உயர்நிலைப்பள்ளி, விஜயராஜை கூப்பிட்டு எச்சரித்தது. தமிழாசிரியர், சார்லஸ் அன்பாக எடுத்துரைத்தார்.
'விஜி, உனக்கு இப்ப படிப்பு முக்கியம். அதை மட்டும் கவனி. ஹிந்தியை எதிர்க்கப் பெரிய பெரிய தலைவருங்க இருக்காங்க...' என்றார்.
தைரியம் புருஷ லட்சணம். புருஷ பருவத்துக்கு வரும் முன்பே தலைவனான களிப்பில், காவல் துறை எச்சரிக்கும் அளவுக்கு, விஜயராஜின் அட்டகாசங்கள் அதிகரித்தன. கடைசியில் பொறுமையை இழந்தது, பள்ளி. விஜயராஜை நீக்கிய பின்னரே, மறு காரியம் பார்த்தது.
இப்போது தோளுக்கு வளர்ந்த பிள்ளை, விஜயராஜ்.
மறுபடியும் மதுரை தெற்கு வாசல் நாடார் பள்ளியில், 9ம் வகுப்பில் சேர்ந்தான்.
அ ழகர்சாமிக்கு பிறகு, விஜயராஜின் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் தீர்மானித்தவர், இப்ராகிம் ராவுத்தர். அவர், பாபு என்ற பெயரில், விஜியின் எதிர் அணிக்காரராக அறிமுகமானார். எட்டாம் வகுப்பு மாணவர், பாபு. விஜி அவரை விட ஓராண்டு சீனியர்.
இருப்பினும், பள்ளியில் இருவரது குழுக்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டன. அவ்வப்போது, அவர்களை ராசியாக்கி வைத்தனர், ஆசிரியர்கள். அந்த தருணம் முதல், ஒரு சரித்திர தோழமை உருவானது.
ஒருவழியாக, ஒன்பதாம் வகுப்பு பாஸ் செய்து விட்டான், விஜி. மதுரையில் இருந்தால், 10ம் வகுப்பு தாண்டுவதிலும் நிச்சயம் பிரச்னை வந்து விடும் என, தீர்மானித்தார், அழகர்சாமி. விக்கிரமசிங்கபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர் விடுதி, விஜிக்காக காத்திருந்தது.
பழைய அடிச்சுவட்டிலேயே நடந்தன கால்கள். எப்போதும் போல், எம்.ஜி.ஆர்., சினிமா, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், ஆசிரியர்களுடன் மோதல், சக மாணவர்களிடையே கலாட்டா, அடிதடி என, சுவாரஸ்யமாக பொழுது கழிந்தது. பத்தாவது பெயில் என்றானது.
அதற்கு மேல் கல்வியை களங்கப்படுத்த வேண்டாம் என, முடிவெடுத்தார், அழகர்சாமி.
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொபைல் எண்: 7200050073
- தொடரும்
- பா. தீனதயாளன்

