
இந்தியாவில், கடந்த 1950ல், முதல் குடியரசு தலைவர் பதவியில் இருந்தார், ராஜேந்திர பிரசாத். 1952 பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகும், ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் அருமை பெருமைகளை உணர்ந்திருந்த, நேரு, ராதாகிருஷ்ணனை குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என, தன் எண்ணத்தை கூறினார்.
ஆனால், கட்சி கண்ணோட்டத்துடன், ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவராக தொடர வேண்டும் என, விரும்பினர், காங்கிரஸ் தலைவர்கள்.
குடியரசு துணைத்தலைவர் பதவி, ராதாகிருஷ்ணனுக்கு அளிப்பதாக இருந்தது.
பெரிய செயல்பாடுகள் இல்லாத பொம்மை பதவியில் இருக்க தயங்கினார், ராதாகிருஷ்ணன்.அறிவுத் திறனுடன், கல்விப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்தவருக்கு குடியரசு துணைத்தலைவர் பதவி என்பது, கூண்டில் அடைத்து வைப்பதற்கு சமம் என, கருதினார்.
ஆனால், பெரிய தலைவர்கள் அவரை கேட்டுக் கொண்டதால், பெருந்தன்மையுடன் குடியரசு துணைத்தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்த போது, மாநிலங்களவைக்கும் தலைவராக பணியாற்றினார், ராதாகிருஷ்ணன். இந்தியாவின் பல பாகங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்கு சொற்பொழிவுகள் ஆற்றினார்.
வளர்ச்சியில் மெத்தனம் காட்டாமல், நாட்டு முன்னேற்றத்துக்கு விரைந்து செயலாற்ற வேண்டும் என்ற கருத்தை கூறினார். காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், மனம் வருந்தி, பதவி விலக முன் வந்தார். அவரை சமாதானம் செய்து, தொடர்ந்து குடியரசு துணைத்தலைவராக இருக்க கேட்டுக் கொண்டார், நேரு.
*********
அ றியாமை என்னும் இருளைப் போக்குகிற வெளிச்ச தீபங்கள்; வழிகாட்டுகிற கலங்கரை விளக்குகள், ஆசிரியர்கள்.
அதனால் தான், 'நான் வாழ்வதற்கு என் பெற்றோருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். முறையாக வாழ்வதில், என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்...' என, போற்றிப் புகழ்ந்தான், உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற, அலெக்சாண்டர்.
இளைய சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கு, ஆசிரியர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதனால் தான், 'ஆசிரியர் பணி, புனிதமான பணி...' என்பார், குடியரசு தலைவர் அப்துல் கலாம்.
அவரிடம் ஒருவர், 'உங்களால் நாடு பெருமை அடைகிறது...' எனக் கூறினார்.
அதற்கு, 'நான் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்ததற்கு, என் ஆசிரியர்கள் தான் காரணம். அவர்களுக்கு தான் வணக்கத்தையும், நன்றியையும் சொல்ல வேண்டும்...' என்றார், அப்துல்கலாம்.
குடியரசு தலைவராக பதவியேற்ற வேளையிலும், தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியப் பெருமக்களை மறக்காமல் அழைத்து, மரியாதை செய்தார், அப்துல்கலாம்.
'அக்னிச் சிறகுகள்' என்ற அவரது வாழ்க்கை சரிதத்திலும் அவர்களை பதிவு செய்தார். வழிகாட்டிகளுக்கு வணக்கம் செலுத்தியதால் தானே, இன்றும் அவரை போற்றிக் கொண்டே இருக்கிறோம்.
'ஆசிரியர்கள், எரியும் மெழுகுவர்த்தி விளக்குகள்...' என்றார், கவிஞர் தாகூர்.
***********
ஆ ந்திரா மாநிலம் அமைவது குறித்தும், பல்கலைக்கழகம் விரிவு பற்றியும், ராதாகிருஷ்ணனிடம் கலந்து பேச விரும்பினார், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், 'ஆந்திர கேசரி' என அழைக்கப்பட்டவருமான, பிரகாசம்.
பிரகாசம் விருப்பப்படி ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை ஏற்றார், ராதாகிருஷ்ணன்.
துணை வேந்தரானதும், பாரபட்சம் பார்க்காமல் திறமையின் அடிப்படையில் பலருக்கு பதவிகளையும், உதவிகளையும் அளித்தார்.
தொழில்நுட்பக் கல்வித் துறையை முதன்முதலில் புகுத்தி, அதற்கு மூத்த பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யாவை பொறுப்பாளர் ஆக்கினார். இயற்பியல் கவுரவ பேராசிரியராக, சர். சி.வி. ராமனை நியமித்தார்.
பல்கலைக்கழக நுால் நிலையத்தில் பல்வேறு பட்ட நுால்கள் சேர்க்கப்பட்டன.
பல்கலைக்கழகத்திற்கு, தாகூர், சீனிவாச சாஸ்திரி போன்ற மேதைகளை வரவழைத்து சிறப்பு செய்தார், ராதாகிருஷ்ணன்.
நடுத்தெரு நாராயணன்

