sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேப்டன் விஜயகாந்த்! (7)

/

கேப்டன் விஜயகாந்த்! (7)

கேப்டன் விஜயகாந்த்! (7)

கேப்டன் விஜயகாந்த்! (7)


PUBLISHED ON : அக் 05, 2025

Google News

PUBLISHED ON : அக் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயகாந்தை சந்திக்க, அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றார், இயக்குனர் செந்தில் நாதன்.

அங்கு, ராவுத்தரை ஓர் இயக்குனராக முன் நிறுத்தி, கண்ணாடிக்கு முன்பாக நடித்து கொண்டிருந்தார், விஜயகாந்த். செந்தில் நாதனுக்குள், விஜி மீண்டும் ஒப்பனை உலகில் உயிர்த்தெழுவார் என்ற வலுவான நம்பிக்கை ஏற்பட்டது.

மறுநாள், முதல், 'டேக்'கிலேயே காட்சி, 'ஓகே' ஆகி, கரகோஷத்தில் முடிந்தது.

சாட்சி திரைப்படம் மிகக் குறுகிய காலத் தயாரிப்பு. மிஞ்சிப் போனால், மூன்றே வாரங்களில் படம் முடிந்து போனது. எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, சாட்சி படத்தை தவிர, ஹிந்தி சினிமாவின், 'ஷூட்டிங்'கும் மும்பையில் காத்திருந்தது. படத்தொகுப்பு உள்ளிட்ட மிச்ச வேலைகளை, செந்தில் நாதனிடம் விட்டுவிட்டு, அவர் மும்பைக்கு பறந்தார்.

எடிட்டிங் வேலைகள் நடப்பதை அறிந்து, விஜியும், ராவுத்தரும் வாகினிக்கு விரைந்தனர். ஆர்வத்தோடு, சாட்சி படம் எப்படி வந்திருக்கிறது என, பார்க்க துடித்தனர்.

'தோழமை வேறு; தொழில் வேறு...' என, சாட்சி படம் திரையிடுவதற்கு முன் காட்ட மறுத்தார், செந்தில் நாதன்.

'டைரக்டர் ஊரில் இல்லை. அவர் சம்மதம் இல்லாமல் உங்களுக்கு காட்ட முடியாது...' என, விளக்கினார்.

செப்., 16, 1983ல், பாரதிராஜாவின், மண்வாசனை படத்தோடு, சாட்சி திரைப்படமும் வெளியானது. மண்வாசனை, 'ஷூட்டிங்' நடந்து கொண்டிருந்த போதே, அதன் பாடல்கள், 'சூப்பர் ஹிட்' ஆகி, படத்துக்கு நல்லதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

சாட்சி படம் துவங்கப்பட்ட போது, கே.பாக்யராஜ், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கைப்பற்றி இருந்தார். எங்கும், முருங்கைக்காய் என்பதே பேச்சு. முந்தானை முடிச்சு திரைப்படம் வரலாறு காணாத வெற்றி ஓட்டம், 'கே.பாக்யராஜ் என்னுடைய கலை உலக வாரிசு...' என, எம்.ஜி.ஆரைப் பேச வைத்தது.

குற்றவாளி ஒருவனின் வாழ்க்கைக் கதை, மலையூர் மம்பட்டியான் என்ற பெயரில், மற்றொரு பக்கம் வசூலில் முரசு கொட்டிக் கொண்டிருந்தது.

பிரபு நடிப்பில், மூன்று மாறுபட்ட படங்கள் தேவி பாரடைஸில், ஏவி.எம்.குமரனின், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, சபையரில், ராகங்கள் மாறுவதில்லை, சாந்தியில், மிருந்தங்கச் சக்கரவர்த்தி என, சாட்சி படத்துக்கு முன்னும் பின்னுமாக களம் கண்டன.

மிகக் கடுமையான வணிகப் போட்டிகளுக்கு மத்தியில், விஜயகாந்துக்கு வாழ்வா, சாவா என்ற நிலை. சின்ன பட்ஜெட் சினிமா ஒன்று, பெரிய பேனர் படங்களை, வசூலில் முந்தி, போட்ட முதலீட்டை எடுக்க உதவுமா?

சாட்சி படம் வெற்றி பெற்றால் மட்டுமே, ஒரு கலைஞனாக வெற்றி நடை போட முடியும். தன்னை நம்பி வரும் நாலு பேருக்கு நல்லது செய்ய முடியும். இல்லாவிட்டால், மதுரைக்கே திரும்பிவிட வேண்டியது தான் என, நினைத்து கொண்டார், விஜயகாந்த்.

முதலில் திருப்பதிக்கு டிக்கெட் எடுத்து, மொத்த பாரத்தையும், ஏழுமலையான் மேல் போட்டு, திரும்பினார்.

விஜயகாந்தின் படங்கள் பெரும்பாலும், மவுன்ட் ரோடு தியேட்டர்களில், மூன்று காட்சிகளாக, 'ரிலீஸ்' ஆகாது. அலங்கார், தேவி காம்ப்ளெக்ஸ் போன்ற அரங்குகளில் காலை காட்சி போடுவர். இல்லாவிட்டால், லிட்டில் ஆனந்த் போன்ற சிறிய திரை அரங்கங்களில் நாலு காட்சிகளில், 'ரிலீஸ்' செய்வர்.

சாட்சி படம், 'ரிலீஸ்' அன்று, சென்னை திரும்பியிருந்தார், எஸ்.ஏ.சி., அவருடன் மனைவி ஷோபா, அசோஸியேட் இயக்குனர், செந்தில் நாதன் எல்லாரும் முதல் காட்சியை காண, அலங்கார் திரையரங்கில் அமர்ந்தனர். டைரக்டர் வந்திருப்பது தெரியாமல், விஜியும், ராவுத்தரும் அதே தியேட்டரில், இன்னொரு பக்கம் படம் பார்த்தனர்.

இடைவேளை. 'அதற்குள்ளாகவா இன்டர்வல்!' என, வியப்போடு வெளிவந்தனர், ரசிகர்கள். அவர்களது கண்ணுக்கெதிரே நாயகன் பளிச்சென்று தெரிந்தார். அப்புறமென்ன... வீழ்ந்து விட்டார் என, சகலரும் நினைத்த விஜயகாந்த், தமிழ் வண்ணத்திரையின் மூன்றாவது, 'ஹீரோ' ஆக விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

விஜயகாத்தை, பட அதிபர்களும், வினியோகஸ்தர்களும் மொய்க்க ஆரம்பித்தனர்.

தமிழ் திரை உலகம், விஜயகாந்த் பக்கம் திரும்பினாலும், பிரபல நாயகிகள் ஏனோ அவரை நிராகரித்தனர். அதை பற்றி எல்லாம் வருந்தவில்லை, விஜி. அச்சமயம் அவரது அன்புள்ள அப்பா, அழகர்சாமி காலமானார். தன்னுடைய புது வாழ்வைக் காண, தந்தை உயிரோடு இல்லையே என்ற கவலை, விஜயகாந்தை பாடாய் படுத்தியது.

தன்னை தேடி வந்த வாய்ப்பையும் உதறித் தள்ளும் நிலையில் இல்லை, விஜயகாந்த். தினமும் அவரை நம்பி வந்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. எல்லாருக்கும் வயிராற சோறு போட்டு, காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணமே மேலோங்கியது.

விஜிக்கு மார்க்கெட் கூடியதால், பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த அவரது முந்தைய படங்களும் திரைக்கு வந்தன. பெரிய, 'ஹீரோ' ஆகிவிட்டதால், மோட்டார் சைக்கிளில் முன்பு போல் பறக்க முடியவில்லை. பழைய அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கி, அதை ஓட்டவும் கற்றுக் கொண்டார், விஜயகாந்த்.

எஸ்.ஏ.சி., மற்றும் ராம.நாராயணன் இருவருடனும் தொடர்ந்து பயணித்தார், விஜயகாந்த். கோழி கூவுது படத்தில் நாயகியாக நடித்த விஜி, சசிகலா ஆகியோரை தொடர்ந்து, நளினியும் விஜயகாந்த் ஜோடியாக நடிக்க துவங்கினார்.

நளினியுடன், 'டூயட்' பாடல் காட்சிகளில், தொட்டு உரசி நடிப்பதற்கு, விஜயகாந்த் ரொம்பவே கூச்சப்பட்டார். விஜயகாந்த்தை உடன்பிறந்த சகோதரனாக நினைத்தார், நளினி. எப்போதும், 'அண்ணே... அண்ணே... விஜி அண்ணே...' என, வாய் ஓயாமல் அழைத்தார்.

ஏவி.எம்.குமரன் தயாரித்த படம், வெள்ளைப் புறா ஒன்று . அதில், விஜயகாந்த் நடிக்க, கங்கை அமரன் இயக்கினார். படத்தில், விஜயகாந்த் கம்யூனிஸ்ட் சின்னத்தை நினைவூட்டும் விதமாக, சுத்தியல் அரிவாள் நட்சத்திர டாலர் அணிந்து தோன்றினார். தலைநகரில் நீண்ட நாட்கள் ஓடாவிட்டாலும், பட்டி தொட்டிகளில் நன்கு வசூலித்தது.

தொ டர்ந்து வெற்றி சித்திரங்களில், சக்கை போடு போட்டார், நடிகர் மோகன். மற்ற பெரிய, 'ஹீரோ'கள் பொறாமைப்படும் அளவுக்கு, மோகனின் வளர்ச்சி அபாரமாக காணப்பட்டது.

- தொடரும்

- பா. தீனதயாளன்

நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொபைல் எண்: 72000 50073






      Dinamalar
      Follow us