
இப்படியும் உதவலாமே!
பணம் எடுக்க, சமீபத்தில் வங்கிக்கு சென்றிருந்தேன். பொதுவாக திங்கட்கிழமைகளில், கூட்டம் நிரம்பி வழியும். வங்கி வேலை முடிந்து, வீடு செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஆனால், நான் சென்றபோது, பெரிதாக கூட்டமும் இல்லை; வந்தவர்களும் 'கடகட'வென வந்த வேலை முடிந்து திரும்பியது ஆச்சரியமாக இருந்தது.
வங்கி வாசலில் டேபிள் போட்டு உட்கார்ந்திருந்த ஒருவர், நான் வந்த நோக்கத்தை கேட்டறிந்து, தேவையான வங்கி விவரங்களை அதற்குரிய படிவங்களில் தானே நிரப்பி, என் கையெழுத்தை பெற்று, டோக்கன் எடுக்கச் செய்தார்.
'மளமள'வென சில நிமிடங்களில், சிரமமின்றி பணத்தைப் பெற்றுக் கொண்டேன். அவர் எனக்கு மட்டுமின்றி, வங்கிக்கு வந்த அனைவருக்கும் சலிக்காமல் இந்த உதவியை செய்து கொண்டிருந்தார். அவரது சேவைக்காக பணம் கொடுத்த போதும் பெற்றுக் கொள்ளவில்லை.
அவரைப் பற்றி விசாரித்தேன்...
அவர் இந்த வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்று சில மாதங்களே ஆனவர். தான் பணி புரிந்த காலத்தில், வங்கி செயல்பாடுகள் மற்றும் படிவங்கள் நிரப்புதல் குறித்த சரியான புரிதல் இன்றி மக்கள் தடுமாறுவதை கண்டு, தான் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தன்னார்வத்துடன் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார் என்று அறிந்தேன்.
ஓய்வு காலத்தை பயனுள்ளதாக்க அவர் செய்த சேவை, வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்ததோடல்லாமல், வங்கி ஊழியர்களின் வேலைகளையும் மிகவும் எளிதாக்கியது.
பல வங்கிகளில், வாடிக்கையாளர்களுக்கு படிவங்களை, சரியாக நிரப்ப தெரிவதில்லை. இதனால், அவர்களுடைய மற்றும் வங்கி ஊழியர்களின் நேரம் விரயமாகிறது.
மற்ற வங்கிகளும் இப்படி, படிவங்களை நிரப்பிக் கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஒருவரை நியமிக்கலாமே!
- எம்.ஆன்டனி ஜேம்ஸ் சுரேஷ், திருநெல்வேலி.
கிராமத்து புதையல்கள்!
தஞ்சையில் என்னுடன் படித்த பள்ளி தோழியை, 15 ஆண்டுகளுக்கு பின், பார்க்க சென்றேன். அவருடன் பேசும் போது, 'நான் சென்னையில், ஐ.டி., துறையில் வேலை செய்கிறேன். கை நிறைய சம்பாதிக்கிறேன்...' என்றேன்.
'நானும் தான் இந்த கிராமத்து வாசத்தை முகர்ந்தபடி, இயற்கையோடு இழைந்து பெரிய வருமானத்தை ஈட்டுகிறேன்...' என சொல்லி, 'விவசாய பயிர் நிலங்களில் இறங்கி, இதோ இந்த வழவழப்பான களிமண்ணை சேகரித்து, இதோடு முல்தாணி மட்டி, ஆவாரம் பூ சாறு, குப்பை மேனி சாறு இவைகளை சேகரித்து, முகத்துக்கு பூசும் கிரீமை தயாரித்து மதிப்பூட்டி சந்தைப்படுத்துகிறோம்.
'நகரங்களில் உள்ள, 'பியூட்டி பார்லர்'களுக்கு வினியோகம் செய்கிறோம். வெளிநாடு, 'ஆர்டர்'களுக்கும் வினியோகம் செய்வதோடு, 10 பேருக்கு வேலையும் தந்து, அவர்களின் பொருளாதாரத்தையும் உயர்த்தி இருக்கிறோம். நானும், மாதம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறேன்...' என, மூச்சு விடாமல் கூறினாள்.
ஊருக்கு ஊர் இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கின்றன. அதன் பெருமை தெரிந்தவர்கள், பணம் ஈட்டும் புதையலாக மாற்றுகின்றனர்.
இந்த விழிப்புணர்வு மற்றவர்களுக்கும் போய் சேர்ந்தால் நன்மை தான்!
—ஜி.கீர்த்தனா, சென்னை.
மோசடி பலவிதம்!
பிரபல துணிக்கடையில் பணிபுரியும் நண்பரை பார்க்க, அக்கடைக்கு சென்றிருந்தேன். அவர் ஆண்கள் அணியும் உள்ளாடை பிரிவில் வேலை பார்த்து வந்தார். அவரை சந்தித்து சிறிது நேரம் பேசியதும், இரண்டு ஜட்டிகள் வாங்கிச் சென்று விடலாம் என, நல்ல தரமான ஜட்டிகள் இரண்டு வேண்டுமெனக் கேட்டேன்.
ஜட்டியில் இருக்கும், 'ஸ்டிக்கரை' பிரித்துப் பார்த்து, மீண்டும் அதே இடத்தில் ஒட்டினார், நண்பர்.
அதுபற்றி விசாரிக்க, அவர் கூறிய தகவல் அதிர்ச்சி அளித்தது.
'நாங்கள், வழக்கமாக ஒரு தொழில் நிறுவனத்திடமிருந்து தான் உள்ளாடைகளை மொத்த விலைக்கு வாங்குவோம். அவர்களும் முதல் தரத்தை எங்களுக்கும், இரண்டாம் தரத்தை அதாவது, சிறு ஓட்டைகள் உள்ள சரக்குகளை, ஓட்டையை மறைக்க சிறு, 'ஸ்டிக்கர்'களை ஒட்டி நடைபாதை வியாபாரிகளுக்கு, பாதி விலைக்கு கொடுத்து விடுவது வழக்கம்.
'விழாக் காலங்களில் இதுபோன்ற பெரிய துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இவர்கள், பாதி விலை சரக்குகளை வாங்கி, முழு விலைக்கு வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுவர். இதனால், தள்ளுபடியையும் தாராளமாக அறிவிப்பர். வீட்டிற்கு வந்து பார்த்ததும் தான், சிறு ஓட்டைகள் இருப்பது தெரியும்.
'அதை, வாஷிங் மெஷினிலோ அல்லது கைகளால் துவைக்கும் போது, நாளடைவில் ஓட்டை பெரிதாகி கிழிந்து விடும்...' என்றார்.
பெரிய கடைகளுக்கு சென்று இதுபோன்ற உள்ளாடைகளை வாங்குவோர் விழிப்புணர்வுடன் இருங்கள். ஏமாந்து விடாதீர்கள்.
— ந.தேவதாஸ், சென்னை.