sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விசேஷம் இது வித்தியாசம்: ஆண்களுக்கு ஒரு விரதம்!

/

விசேஷம் இது வித்தியாசம்: ஆண்களுக்கு ஒரு விரதம்!

விசேஷம் இது வித்தியாசம்: ஆண்களுக்கு ஒரு விரதம்!

விசேஷம் இது வித்தியாசம்: ஆண்களுக்கு ஒரு விரதம்!


PUBLISHED ON : அக் 05, 2025

Google News

PUBLISHED ON : அக் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்., 8 - அசூன்ய சயன விரதம்

விரதம் என்றால், ஆண், பெண் இருபாலரும் அனுஷ்டிக்கும்படி தான் இருக்கும். வரலட்சுமி விரதம் போன்ற பெண்களுக்கான சிறப்பு விரத காலங்களில் கூட, ஆண்களும் சுத்தமாக இருந்து கொள்வர்.

ஆனால், ஆண்களுக்கான சிறப்பு விரதம் ஒன்று, ஆவணி அல்லது புரட்டாசி மாதம், தேய்பிறை துவிதியை திதியன்று அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. கால வெள்ளத்தில் இது மறைந்து போனாலும், இது ஒரு அருமையான விரதம். ஆண்கள், இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதன் பெயர், அசூன்ய சயன விரதம்.

அசூன்ய என்றால், நிறைவாக இருத்தல் என, பொருள். சயனம் என்றால், உறக்கம். ஒரு ஆணுக்கு எப்போது, படுக்கையில் படுத்தவுடன் நிறைவான உறக்கம் வரும் என்றால், அவனுக்கு நல்ல குணமுள்ள மனைவி அமைந்திருக்க வேண்டும்.

தன் மனைவி வாழ்நாள் முழுவதும் தன்னோடும், தன் குடும்பத்தோடும், உறவுகளோடும் நல்ல முறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என, பகவான் விஷ்ணுவையும், லட்சுமி தாயாரையும் எண்ணி அனுஷ்டிக்கப்படும் விரதமே, அசூன்ய சயன விரதம்.

இந்த விரதத்தை கடைபிடிப்பது மிகவும் எளிமையானது. மஞ்சள் அல்லது தரமான சந்தனத்தில் இரண்டு உருண்டை பிடித்து, விஷ்ணு மற்றும் லட்சுமியாக கருத வேண்டும். இது முடியாவிட்டால் விஷ்ணு, லட்சுமி பொம்மைகளை வாங்கிக் கொள்ளலாம்.

விஷ்ணுவுக்கு ஒரு சிறிய துண்டை, தலைப்பாகை போல் கட்ட வேண்டும்; லட்சுமிக்கு ஒரு சிறு பட்டுத்துணி கட்டி அலங்காரம் செய்து, பூச்சூட வேண்டும்.

ஒரு மெத்தை அல்லது வெல்வெட் போர்வையில் விஷ்ணு, லட்மியை சயனத்தில் வைக்க வேண்டும். அவர்களின் தலைக்கு பஞ்சில் செய்த ஒரு சிறு தலையணை வைக்கலாம். ஒரு சிறிய தட்டில், ஏழு துளசி இலைகளையும், அதன் மேல் சிறிது வெல்லமும் வைக்க வேண்டும்.

இனிப்பு பண்டம் படைத்து, 'ஓம் நமோ பகவதே லட்சுமி நாராயணா' என்ற மந்திரத்தை, 21 முறை சொல்ல வேண்டும். பின், தீபாராதனை காட்ட வேண்டும். தம்பதி ஒற்றுமை சிறப்பாக அமைய, மனதார பிரார்த்திக்க வேண்டும். குழந்தைகளுக்கு இனிப்பு பண்டத்தை கொடுக்க வேண்டும்.

மஞ்சள் சிலை வழிபாடு செய்பவர்கள், பவுர்ணமியன்று நீர் நிலையில் கரைத்து விட வேண்டும். மிக எளிமையான விரதம் தான். மனைவி, இந்த விரதத்துக்கு கணவனுக்கு உதவி செய்யலாம். தங்கள் ஒற்றுமை நீடிக்க, பிரார்த்தனை செய்யலாம்.

இந்த விரதத்தன்று காலையில் நீராடியதும், பறவைகளுக்கு பூந்தி, போளி போன்ற இனிப்பு பண்டங்களும், ஒரு மண்பாண்டத்தில் தண்ணீரும் வைக்கலாம். இவ்வாறு செய்தால் மனைவிக்கு உங்கள் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும். அவர், உங்களிடம் மென்மையாக நடந்து கொள்வார்.

எந்த வீட்டில் கணவன் - மனைவி ஒற்றுமை இருக்கிறதோ, அந்த வீட்டில் லட்சுமி நிரந்தரமாக தங்குவாள். அவர்கள் தங்கள் சொத்துக்களை இழக்கும் நிலை வராது.

நம் வீட்டுக்கு வந்த விஷ்ணுவும், லட்சுமியும் எப்படி பஞ்சு மெத்தையில் சுகமாக உறங்கினரோ, அதுபோல் காலம் முழுவதும் மனைவியுடன் நிம்மதியாக வாழ, இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாமே!

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us