
அஞ்ஞான வாசத்தின் போது, வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களுக்கு, விஜயதசமி அன்று தான் பூஜை போட்டனர், பாண்டவர்கள். இதைத் தான் நாம், ஆயுத பூஜையாக கொண்டாடுகிறோம்.
விஜயதசமி நாளில் தான், மராட்டிய மன்னர் வீர சிவாஜி, ஹிந்து தர்மத்தை காக்க, அன்னை பவானி தேவியை வணங்கி, உறுதி எடுத்துக் கொண்டு புறப்பட்டதாக, வரலாறு கூறுகிறது. ஆணவத்தை வீரமும், வறுமையை செல்வமும், அறியாமையை கல்வியும் வெற்றிக் கொண்ட திருநாளே, விஜயதசமி.
*******
கொல்கத்தாவிலுள்ள மியூசியத்தில் ஏழு தலை நாகத்தின் கீழ், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள், சரஸ்வதி தேவி. பத்மாசனத்தில் அமர்ந்து, கையில் ஜபமாலை ஏந்திய நிலையில் இருக்கும் இந்த சிலை, 11ம் நுாற்றாண்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*********
மயிலாடுதுறை அருகிலுள்ள, கூத்தனுாரில் சரஸ்வதி பூஜையன்று, கருவறையில் குடி கொண்டுள்ள சரஸ்வதி தேவியின் திருப்பாதங்கள், கருவறை வெளியிலுள்ள அர்த்த மண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்யப்படுகிறது. இப்படி செய்வதால் பக்தர்களே நேரடியாக தேவியின் திருப்பாதங்களை அர்ச்சிக்க முடியும் என்பதால், இன்று வரை இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
*********