PUBLISHED ON : அக் 12, 2025

நடிகர் மோகனின் வளர்ச்சியால், விஜயகாந்த் எந்த பொறாமையும் கொள்ளவில்லை. அடுத்தடுத்து, நுாறாவது நாள் மற்றும் வேங்கையின் மைந்தன் ஆகிய படங்களில், மோகனுடன் இணைந்து நடித்தார், விஜயகாந்த். அவை, சென்னையில், 100 நாட்கள் ஓடின.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கைகளால் முதன் முதலாக, விழா கேடயம் பெற்றார், விஜயகாந்த். அதுவரையில் கம்யூனிஸ்ட் அனுதாபியாக கருதப்பட்டவர், விஜயகாந்த். அவர் மீது, தி.மு.க.வின் கவனம் விழுந்தது. ராம.நாராயணன் இயக்கத்தில், நடிகர்கள் சந்திரசேகர், ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன் போன்ற தி.மு.க.வினரோடு, விஜயகாந்த் தினமும் பணியாற்றியதால் நேர்ந்த விளைவு அது.
பல வெற்றி படங்களை தந்த பட நிறுவனமான, தேவர் பிலிம்ஸ்சிலிருந்து, விஜயகாந்த்துக்கு அழைப்பு வந்தது. படத்தின் பெயர், நல்ல நாள். மலையூர் மம்பட்டியான் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன், 'ஹீரோ' தியாகராஜன் மிகவும் பிரபலமானார்.
விஜயகாந்த் - தியாகராஜன் இருவரும் இணைந்து பங்கேற்ற ஒரே படம், நல்ல நாள். தங்கையின் கணவனை கொல்லக் காத்திருக்கும் அண்ணனின் கதை. அண்ணன் - விஜயகாந்த், தங்கை - நளினி. படம் வசூலில் சாதனை படைத்தது.
ஐ ந்து ஆண்டுகளுக்கு பின், இளையராஜா இசை அமைத்த, விஜயகாந்தின் படம், நுாறாவது நாள். மூன்று பாடல்களை தாண்டியும் பின்னணி இசை, ரசிகர்களின் இதயத்தை வேகமாகத் துடிக்க செய்தது. இந்த, 'சஸ்பென்ஸ் திரில்லர்' படம் மூலம் டைரக்டர் மணிவண்ணன் - விஜயகாந்த் இருவரும் முதன் முதலில் இணைந்தனர். படத்தில் நாயகனாக நடிக்காவிட்டாலும், டாக்டர் வேடத்தில், நளினியின் அண்ணனாக வெகு இயல்பாக நடித்தார், விஜயகாந்த்.
நுாறாவது நாள் படத்தில், விஜயகாந்த், மோகன் இருவர் தவிர, மொட்டைத்தலை கொலைகாரனாக மக்களை கதிகலங்க வைத்தவர், சத்யராஜ். அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம், நுாறாவது நாள்.
சத்யராஜின் நடிப்பை மனம் விட்டுப் பாராட்டினார், விஜயகாந்த். சாமந்திப்பூ படத்தில் நடித்த சமயத்திலிருந்தே, சத்யராஜுடன், விஜிக்கு நெருக்கமான நட்பு இருந்தது.
வெ ள்ளைப் புறா ஒன்று, நல்ல நாள் மற்றும் நாளை உனது நாள் போன்ற, விஜயகாந்த் படங்கள் இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவானவை. இருந்தும், மோகன் நடித்த படப்பாடல்கள் போல, 'சூப்பர் டூப்பர் ஹிட்' ஆகவில்லை. தமிழகமெங்கும், விஜயகாந்த் நடித்து ஒரு படமாவது, மிகச்சிறந்த தேவ கானங்களுடன், பிரமாதமாக ஓடி, வெள்ளி விழா காண வேண்டும். அதற்கு, இளையராஜாவின் இசை, அவசியம் தேவை என்பது அவரது ரசிகர்களின் ஏக்கமாக இருந்தது. அதைப் பூர்த்தி செய்ய வந்தது, வைதேகி காத்திருந்தாள் திரைப்படம்.
சத்யா மூவிஸில், கமல் நடித்த முதல் படம், காக்கி சட்டை. காக்கி சட்டை பட பாடல்களுக்கு மெட்டமைக்க வேண்டிய வேலை. மூன்று நாட்கள் வெளியூரில் முகாமிட்டு இருந்தார், இளையராஜா.
காக்கி சட்டை படத்துக்கான மெட்டு சேர்க்கும் பணியை அரை நாளில் துரிதமாக முடித்து விட்டார், இளையராஜா. அற்புதமான ட்யூன்கள் அமைந்ததில், சத்யா மூவிஸ் நிர்வாகத்துக்கும், டைரக்டருக்கும் திருப்தி.
அன்றைக்கு பார்த்து, இளையராஜாவுக்கு, புத்தம் புதுக் கற்பனைகள் பெருகி புரண்டன. 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...' என்று சங்கீத சாம்ராஜ்யம் தன்னை தானே கேட்டுக் கொண்டது. தன்னுள் எழுந்து எழுந்து அடங்கிய, ஏழு ஸ்வரங்களையும் வீணாக்க விரும்பவில்லை, இளையராஜா. எல்லாவற்றையும் ஒரு மாலையாக கோர்த்தார். புதிதாக, ஆறு புஷ்பங்கள் மலர்ந்திருந்தன.
இளையராஜாவின் புதிய ஸ்வரங்களைக் கேட்ட, பாலு மகேந்திராவும், இயக்குனர் ராஜசேகரும் அசந்து போயினர். தங்களுக்கே அதைக் கொடுத்து விடுமாறு இருவரும் போட்டி போட்டனர். இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர், பஞ்சு அருணாசலம். அவர் கேட்டும், பணிவாக முடியாது என்றார், இளையராஜா.
அவர் விதித்த ஒரே நிபந்தனை, 'இந்த ஆறு ட்யூன்களையும் யாருக்கும் தனித்தனியாக தர மாட்டேன். இந்த, ஆறும் ஒரே நதியில் சங்கமிக்க வேண்டும். அப்படியொரு கதையோடு வருபவர்களுக்கே கொடுப்பேன்...' என்றார்.
அதுவரையில் ஆச்சரியக்குறியாக இருந்த, இளையராஜா, கோலிவுட்டின் கேள்விக்குறியாக மாறிய தருணம் அது. தன் ஜிப்பா பைக்குள் கோடம்பாக்கத்தை கொண்டு வந்து அடக்கிவிட முடியும் என்ற தொழில் ஆளுமை.
நீங்கள் எந்த வேலையை செய்தாலும், அதை ரசித்து ரசித்து செய்யும்போது, நீங்கள் அந்த பணியின் எஜமானன் ஆகி விடுகிறீர்கள். உலகில் அநேக சாதனை சிகரங்களின் வாழ்க்கை கதைகள் அதையே வலியுறுத்துகின்றன.
ஆர்.சுந்தர்ராஜன், இளையராஜாவின் இசையில் தொடர்ந்து, வெள்ளி விழா கொண்டாடிய பல குடும்ப சித்திரங்களை இயக்கிய அனுபவசாலி. அவரிடம், இளையராஜாவின் கட்டளையை பேச்சு வாக்கில் ஆதங்கத்துடன் தெரிவித்தார், பஞ்சு அருணாசலம்.
இளையராஜாவின் சவாலை ஏற்றார், ஆர்.சுந்தர்ராஜன். ஆறு சங்கீத கற்பனைகளையும் தன் ஒரே படத்தில் அருமையாக அரங்கேற்ற எண்ணினார். வளரும் கலைஞர்களுக்காக வாசலை அகல திறந்து வைத்துக் காத்திருந்தது, ஏவி.எம்., நிறுவனம். அங்கு சென்று கதை சொன்னார், ஆர்.சுந்தர்ராஜன். உடனடியாக காசோலை கை மாறியது.
சென்னையில் சொந்த மனை வாங்கி, வீடு கட்டிக் குடியேறும் ஆசையில் இருந்தார், ஆர்.சுந்தர்ராஜன். ஏவி.எம்., விதித்த ஒரு நிபந்தனையில், அழகிய இல்ல கனவு மெல்லச் சரியும் போல் தோன்றியது. தங்கள் படத்தில், சிவகுமார் தான் நாயகன் என்றது, ஏவி.எம்.,
ஏற்கனவே, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், நான் பாடும் பாடல் திரைப்படத்தில் நாயகனாக, சிவகுமார் நடித்திருந்ததால், அவரை மறுக்க மாட்டார் என நினைத்திருந்தது, ஏவி.எம்., நிறுவனம்.
கருப்பு நிற கதாநாயகனுக்காக உருவாக்கிய வேடம். விஜயகாந்த் நடித்தால் வித்தியாசமாக இருக்குமே. அதுவரையில், 'ஆக்ஷன் ஹீரோ'வாக மட்டுமே அதிரடி காட்டியவர், விஜயகாந்த். அவரை நடிக்க வைக்க, ஏவி.எம்.,மிடம் பேசினார், ஆர்.சுந்தர்ராஜன்.
விஜயகாந்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது, ஏவி.எம்., நிறுவனம்.
- தொடரும்
பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தொலைபேசி எண்: 72000 50073