
மனம் விட்டு பேசுங்கள்!
உறவினரின் மகன், தன் ஆண்மைக் குறைவை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டது இப்போது பெரிய பிரச்னையாகி விட்டது. அவனுக்கு மும்முரமாக பெண் தேடும் போது, காரணம் கூறாமல் திருமணம் வேண்டாமென்று மறுத்து வந்தான். விஷயம் தெரியாத உறவினரும், அவர் மனைவியும், ' சென்டிமென்ட்'டாக மிரட்டி திருமணம் செய்து வைத்தனர்.
முதலிரவன்று தன் மனைவியிடம் தன்னைப் பற்றிக் கூறி, தன் குறையை வெளியில் சொல்ல வேண்டாமென்று சத்தியம் வாங்கிக் கொண்டான். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்துள்ளாள், அந்த பெண்.
சில ஆண்டுகளுக்கு பின், தங்கள் சொத்துக்களை மகனுக்கு பிறக்கும் வாரிசுகள் அடையும்படி உயில் எழுதி விட்டார், உறவினர். இதையறிந்த அந்த பெண், தன் கணவனின் நண்பனுடன் தகாத உறவு கொண்டு, ஒரு பிள்ளையை பெற்றுக் கொண்டாள். அவள் கணவனால் வெளியில் சொல்ல முடியாத நிலை. குழந்தை ஓரளவு வளர்ந்ததும், விவாகரத்து வாங்கிக் கொண்ட அந்தப் பெண், சட்டப்படி சொத்துக்களை தன் வசப்படுத்தி கொண்டாள்.
தற்போது சொத்துக்களையும் இழந்து, வாழ்க்கையையும் தொலைத்து, நோயாளியாக, வயதான பெற்றோருக்கு பாரமாக இருக்கிறான், அவன்.
திருமண வயதில் உள்ள இளைஞர்களே... உங்கள் உடல் நிலையில் எந்த பிரச்னை இருந்தாலும், அதை மனம் திறந்து பேசி, தீர்வு காண முயலுங்கள். தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்தாலும், மனம் திறந்து பேசுவதால் விபரீதங்கள் தவிர்க்கப்படும்.
எல்.ஆர். தாமோதரன், காரைக்குடி.
வெளிநாட்டு மாப்பிள்ளையா?
சமீபத்தில், திருமணம் செய்து கொண்ட தோழியை சந்தித்தேன். திருமணம் முடிந்ததும், 'தீபாவளிக்கு வரும்போது உன்னை உடன் அழைத்து செல்கிறேன்...' என்று கூறி, பணி நிமித்தம் துபாய்க்கு பறந்து விட்டார், மாப்பிள்ளை.
தற்போது, தலை தீபாவளி முடிந்ததும், கணவனுடன் துபாய் செல்லும் குஷி மூடில் இருப்பாள் என்ற நம்பிக்கையில் நலம் விசாரித்தேன். ஆனால், அவள் கூறிய தகவல் அதிர்ச்சி அளித்தது.
தங்கள் மகனின் சம்பாத்தியத்தில் சுகபோக வாழ்வை அனுபவித்து வரும் அவன் பெற்றோரும், சகோதரிகளும், 'அவனுடன் சென்று, குடும்பம், குழந்தை என்று நீ செட்டிலாகி விட்டால், எங்களை யார் கவனிப்பது? அதனால், நீ அவனுடன் செல்லக்கூடாது. மீறி செல்ல முயற்சித்தால், நீ தவறானவள் என்று கூறி, அவனுடன் சேர்ந்து வாழ முடியாமல் செய்து விடுவோம், ஜாக்கிரதை...' என்று மிரட்டுவதாக கூறி, தோழி ரத்தக் கண்ணீர் வடித்தாள்.
பையனின் நல்வாழ்வை விட, அவனது சம்பாத்தியமும், தங்களது சுகபோக வாழ்வே முக்கியம் என்று கருதுபவர்கள், அவனுக்கு திருமணம் செய்து வைத்து, ஒரு பெண்ணின் வாழ்வை ஏன் பாழாக்க வேண்டும்?
பெண்ணுக்கு வரன் தேடும் பெற்றோரே... பையன் கை நிறைய சம்பாதிக்கிறான், பொறுப்புள்ளவன், குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காமல், இப்படி ஒரு ஆபத்தான மறுபக்கமும் உண்டு என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.
— சங்கீதா ராகவன், சென்னை.
இப்படியும் செய்யலாமே!
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருக்கு வங்கியில் வேலை இருந்ததால், என்னையும் உடன் அழைத்து சென்றார்.
அந்த வங்கியில், ‛மக்கள் உதவி மையம்' என்ற பெயரில், பிரத்யேக கவுன்ட்டர் அமைக்கப்பட்டு, ஒரு பயனுள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை கண்டேன்.
கிராமப்புற மக்கள், முதியவர்கள், படிக்காதவர்கள், கணக்கு துவங்குதல், கடன் விண்ணபங்கள், ‛டெபாசிட்' படிவங்களை பூர்த்தி செய்ய திணறுவது வழக்கம். இதை சரி செய்ய, அந்த மையத்தில் மாதிரிப் படிவங்கள், எளிய தமிழில் விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
அங்கு வாடிக்கையாளர்களுக்கு படிவங்களை நிரப்ப உதவி செய்து, தேவையான ஆவணங்கள், கையெழுத்திட வேண்டிய இடங்கள் குறித்து வழிகாட்டினார், ஊழியர் ஒருவர்.
அதோடு, அங்கே தானியங்கி சேவை இயந்திரங்கள் மூலம், ஏ.டி.எம்., பயன்பாடு, ‛ஆன்லைன்' வங்கி சேவைகள், கணக்கு விபரங்கள் போன்றவை குறித்து, வீடியோ விளக்கங்களும் காட்டப்பட்டன.
இதனால், வாடிக்கையாளர்கள் குழப்பமின்றி சேவைகளை எளிதாகப் பெற்றனர். காத்திருப்பு நேரம் கணிசமாக குறைந்து, வங்கி வேலைகள் மேம்பட்டது. குறிப்பாக, படிக்காதவர்களுக்கு மிகவும் பயனளித்து, அனைவருக்கும் வங்கி சேவைகளை அணுகுவதை எளிதாக்கியது.
இதை மற்ற வங்கிகளும் பின்பற்றலாமே!
எம். முகுந்த், கோவை