PUBLISHED ON : டிச 07, 2025

பூந்தோட்ட காவல்காரன் படத்தில் வில்லனாக நடித்த, லிவிங்ஸ்டனுக்கு சம்பள பணம், 5 லட்ச ரூபாயை அவர் விருப்பப்படியே நுாறு ரூபாய்களாக மாற்றி மூட்டையாக கட்டி கொடுத்தனர், விஜயகாந்தும், ராவுத்தரும்.
'மூட்டையை எப்படி வீட்டுக்கு துாக்கிட்டு போறது?' என்று கேட்ட நடிகர், லிவிங்ஸ்டனுக்கு 'வேறு சினிமா கம்பெனியாக இருந்திருந்தால், 'நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம். அந்த மூட்டையை இங்கேயே வெச்சிட்டு இப்படியே கெளம்பு...' என்று வாசலை கைகாட்டியிருப்பர்...' ஆனால், விஜியும், ராவுத்தரும் வாசலில் இருந்த, அவர்கள் கம்பெனியின் ஆட்டோவிலேயே, பண மூட்டையை ஏற்றி, சந்தோஷமாக, நடிகர் லிவிங்ஸ்டனை அனுப்பி வைத்தனர்.
விஜயகாந்தை விரும்பாத, ரஜினி ரசிகர்கள் கூட, பூந்தோட்ட காவல்காரன் படத்தை குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்தனர்.
'நம்ம ஆளுக்கு இப்படியொரு படம் வாய்க்கலியே...' என்று வெளிப்படையாகவே அங்கலாயித்தனர்.
அண்ணன் இளையராஜா - தம்பி பாடலாசிரியர் கங்கை அமரன் இருவரும் இணைந்து, தேன் மழை பொழிந்தனர். அதிலும், 'சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு...' பாடல் தலைப்பிரசவ கால தம்பதியரின் தேசிய கீதம் எனலாம்.
ந டிகர், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நடிகைகள், ரேகா, மந்தாகினி, முன்முன் சென் ஆகியோர் நடித்த ஹிந்தி படம், ஜால். அதை தமிழில் எடுக்க விரும்பினார் இயக்குனர், கே. சங்கர். மிகுந்த பொருட்செலவில், நடிகைகள், லட்சுமி, ரேகா, ரம்யா கிருஷ்ணன் என்று, மூன்று கதாநாயகிகளுடன், விஜயகாந்த் வலம் வர, தமிழில், தம்பி தங்க கம்பி படம் உருவானது.
'தங்க கம்பி, விஜயகாந்த், நோயாளியான அம்மா, கல்யாண வயதுள்ள தங்கைக்கு நடுவே பாசம், வீரம் நிறைந்த நாயகன். சிவந்த கண்கள், கலைத்துப் போட்ட தலை. முரட்டு வசனம். பல்டியடிக்கும் சண்டைகள் - விஜய் சார் திகட்ட ஆரம்பித்து விட்டது...' என்றது, 'கல்கி' விமர்சனம்.
ஒரே நேரத்தில், கருப்பு-வெள்ளை காலப் படைப்பாளிகளுக்கும், திரைப்படக் கல்லுாரி மாணவர்களுக்கும் பாலமாக இருந்தவர், விஜயகாந்த். தயாரிப்பாளர், கலைப்புலி தாணுவுடன் அடுத்த படம், நல்லவன் ஆரம்பமானது. கூலிக்காரன் படத்தின், கோலாகல வெற்றியால், விஜியும், தாணுவும் தொடர்ந்து பயணிப்பது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
முதலில், இயக்குனர், ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில் விஜயகாந்தை வைத்து நல்லவன் படத்தை தயாரிப்பதாக இருந்தார், தயாரிப்பாளர், தாணு.
ஆனால், இயக்குனர், ஆர்.அரவிந்த்ராஜ், ஏற்கனவே நடிகர், சத்யராஜ் நடிக்கும், தாய் நாடு படத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
இதனால், நீண்ட நெடிய அனுபவம் கொண்ட இயக்குனர், எஸ்.பி.முத்துராமனை, இயக்க செய்து, நல்லவன் படத்தை எடுத்தார் தயாரிப்பாளர், தாணு. விஜயகாந்த் இருவேடங்களில் நடிக்க, ராதிகா கதாநாயகி. காஷ்மீரில் வெளிப்புறப் படப்பிடிப்பு. லடாக் பகுதியில், மிகக் கடுமையான பனிப்பொழியும் மலை முகடுகளில் படமெடுக்க சென்றனர்.
வாகனங்களில் செல்ல முடியாத நெட்டுக்குத்தான அபாயமானதோர் ஒற்றையடிப் பாதை அது. கொஞ்சம் தவறினாலும், உயிர் பலி வாங்க, 600 அடி பள்ளம் காத்திருந்தது. அதற்கென்று பயிற்சி பெற்ற குதிரைகளின் ஒத்துழைப்போடு சிகரம் தொட்டனர்.
எது சாத்தியமற்றதோ, அதைச் செயலாக்கி காட்டுவது தானே, விஜயகாந்தின் சாதனை. அத்தனை எளிதாக எட்ட முடியாத மலைக்குன்றுகளில், அடிதடியோடு ஆடல் பாடல் என்றால், விஜயகாந்துக்கு கேட்கவா வேண்டும்.
நல்லவன் படத்துக்கு சிறப்பானதொரு தருணம் அங்கு காத்திருந்தது. பனிச்சரிவினால் அதற்கு மேலே ஊருக்குள் செல்ல முடியாமல், ஏறக்குறைய நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் உணவுப் பொருட்களுடன், பாதையை அடைத்தவாறு நின்று கொண்டிருந்தன.
விஜயகாந்துடன், இயக்குனர், எஸ்.பி.முத்துராமன் மிகுந்த ஈடுபாட்டோடு இயங்கிய ஏவி.எம்.,மின், தர்மதேவதை படத்தில், அவர்கள் இருவருக்கும் பரிச்சயம் இருந்தாலும், அதில் இருவருக்குமே முழுத் திருப்தி கிடைக்கவில்லை. இப்போது அதற்கு சந்தர்ப்பமாக, நல்லவன் படம் வாய்த்தது. விஜியின் திரை வாழ்வுக்கு மேலும் ஒரு மகுடமாக, நல்லவன் படம் அமைய வேண்டும் என்ற உந்துதலோடே, இயக்குனர், எஸ்.பி.எம்.,மின் ஒவ்வொரு செயலும் அமைந்தது.
பாடல் காட்சிக்காக சென்ற நேரத்தில், எதிர்பாராத லாரிகளின் அணிவகுப்பை பார்த்ததும் துரிதமாக செயல்பட்டார், இயக்குனர், எஸ்.பி. முத்துராமன். லாரிகள் அந்தப் பகுதியை கடந்து செல்வதற்குள், அதன் பின்னணியில் வேகமாக சண்டைக் காட்சியை எடுத்து விட முடிவு செய்தார். தன் எண்ணத்தை நாயகனிடம் சொன்னார்.
'அதுக்கென்ன சார், எடுத்துடலாம். நாம, 'பிளான்' பண்ணிட்டு வந்தா கூட சில நேரம் மிஸ் ஆகிடும். 100 லாரியை இந்த மாதிரி உசரத்துக்கு, நாம கொண்டு வரணும்ன்னா எத்தனை செலவாகும்? தன்னால வந்து நிக்குது. இதை விட்றாதீங்க...' என்று கூறி, உற்சாகமாக தயாரானார், விஜயகாந்த்.
'மாஸ்டர், நீங்க எப்படி பண்ணலாம்ன்னு சொல்லுங்க, செஞ்சிடறேன்...' என, 'ஸ்டன்ட்' கலைஞரான சூப்பர் சுப்பராயனிடம் சொன்னார், விஜயகாந்த்.
நல்லவன் படம், 100 நாட்கள் ஓடியது. விழாவும், வழக்கம் போல், கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இ யக்குனர், ஆபாவாணன், சத்ய ராஜுக்காக எழுதிய கதை, ஏனோ, சத்யராஜுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் விஜியிடமே வந்தார், ஆபா.
மற்றுமொரு சிறப்பு தோற்றம். கவுரவ வேடம் மாதிரி தெரிந்தாலும், வீரதீர சாகசங்களுக்கு பஞ்சமில்லாத, மிலிட்டரி கேப்டன் வேடம். விஜயகாந்த் ஒப்புக்கொண்டார். செந்துாரப்பூவே திரைப்படம் உருவானது.
விஜயகாந்தின், 'பிலிமோகிராபி'யில், செந்துாரப்பூவே படத்துக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அந்தப் படத்தின் வரலாறு காணாத வெற்றிக்கு பிறகே, விஜியை, அவரது சுற்றமும், நட்பும், 'கேப்டன்' என்று மரியாதையாக அழைக்க ஆரம்பித்தது. காரணம், விஜயகாந்த் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர், கேப்டன் சவுந்தர பாண்டியன்.
செந்துாரப்பூவே படத்துக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, வெள்ளைப்புறா ஒன்று படத்தில், 'ரயில்வே ட்ராக்கில் போகிற வருகிற ரயில்களுக்கு இடையே, விஜயகாந்த் சண்டை போடும் இடம் டாப்...' என்று, 'கல்கி' இதழ் பாராட்டி எழுதியது.
செந்துாரப்பூவே படத்தில், அதைவிட ஆக்ரோஷமான, கொதிக்கும் வெயிலில், சரக்கு ரயிலின் சூடான இரும்புத் தகடுகளின் மீது, 'டூப்' வேண்டாம் என்று நேரடியாக களத்தில் இறங்கினார், விஜயகாந்த்.
செந்துாரப்பூவே படத்தின், 'கிளைமேக்ஸ்' காட்சியில் இடம்பெற்ற ரயில் சண்டைக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது?
- தொடரும்
பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தொலைபேசி எண்: 7200050073

