sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேப்டன் விஜயகாந்த்! (32)

/

கேப்டன் விஜயகாந்த்! (32)

கேப்டன் விஜயகாந்த்! (32)

கேப்டன் விஜயகாந்த்! (32)


PUBLISHED ON : மார் 29, 2026

Google News

PUBLISHED ON : மார் 29, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி ப்., 21, 2016. சட்டப்பேரவையின், 16வது எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை துறக்க வேண்டிய நிலைக்கு ஆளானார், விஜயகாந்த். காரணம், அதிருப்தி எம்.எல்.ஏ.,கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர்.

எப்படியும், விஜயகாந்தை தங்கள் வலையில் சிக்க வைக்க வேண்டும் என்று, எவ்வளவோ இறங்கி வந்தது, தி.மு.க., 2011ல் நடந்த, திருவாரூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், வடிவேலு, விஜயகாந்தை பகிரங்கமாக, கலாய்த்ததை மறக்கவில்லை, பிரேமலதா. '41 சீட்டுகளில் முதல் அமைச்சராகி விடுவாரா?' என்று, வடிவேலு, கேட்டது, திரும்ப திரும்ப, பிரேமலதா நெஞ்சிலும், நினைவிலும் எதிரொலித்தது.

எல்லாவற்றுக்கும் நெத்தியடி பதில் சொல்ல வேண்டுமென்று மனக்கணக்கு போட்டார், பிரேமலதா. முடிவு, விஜயகாந்தை அரியணையில் அமர வைக்க உறுதி எடுத்தார். அதற்கு ஒப்புக் கொள்கிறவர்களுடன் கூட்டணி வைக்கவும் தீர்மானம் கொண்டு வந்தார்.

தே.மு.தி.க., 104, வைகோவின் ம.தி.மு.க., 29, வாசனின் த.மா.கா.,வுக்கு 26, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் 25, கம்யூனிஸ்டுகளுக்கு தலா, 25 என, மக்கள் நலக் கூட்டணி அமைந்தது.

ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த், சீமான் தவிர, பா.ஜ.க., ஜெயித்தால் அதன் சார்பில் ஒரு முதல்வர் என, ஆறு முதல் அமைச்சர் வேட்பாளர்கள், 2016 தேர்தலில் களம் இறங்கினர்.

தங்கள் வெற்றிக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டன மாநிலக் கட்சிகள். முன் எப்போதும் இல்லாத வகையில், 8 ஆயிரம் பறக்கும் படைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன.

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் என, மிக முக்கியமான மூன்று தலைவர்களும் உடல் சற்றே நலிவடைந்த நிலையில், தேர்தலை சந்தித்தனர். விஜயகாந்தால் முன்புபோல் கொள்கை முழக்கம் செய்ய இயலவில்லை.

விஜயகாந்த் என்ன சொல்கிறார் என்று புரியாமல், கூட்டம் திகைத்தது. 2016ல், உளுந்துார்பேட்டையில் தேர்தலை சந்தித்தார், விஜயகாந்த். வழக்கத்தை விடவும் போட்டி கடுமையாக இருந்தது. அவரது பேச்சை, மக்கள் மிகவும் சிரமப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள், விஜயகாந்தின், பேச்சை சரியாக பதிவு செய்ய இயலாமல் தவித்தனர்.

தேர்தல் முடிவு வெளியானது. விஜயகாந்த் படுதோல்வி அடைந்தார். அ.தி.மு.க., 135 தொகுதிகளை கைப்பற்றி, மீண்டும் ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும், 89 உறுப்பினர்களுடன் வரலாறு காணாத வகையில் கம்பீரமாக காட்சி அளித்தது, தி.மு.க.,

வி ஜயகாந்தின் வீழ்ச்சிக்கு ஒரே காரணம், சட்டசபையில் முதல்வர், ஜெயலலிதா மீதான அவரது நேரடியான குற்றச்சாட்டுகள். அதனால், கொந்தளித்த, ஜெ.வின் அடங்காத ஆவேசம் எரிமலையாகி, ஒட்டுமொத்தமாக தகர்க்கப்பட்டது, தே.மு.தி.க.,

அடுத்து, பிரேமலதாவின் அதிரடி ஆணைகள், தே.மு.தி.க.,வினரை அதிகப்படியாக குழப்பின. முக்கிய நிர்வாகிகள் ஓரிருவர் தவிர, ஏராளமான விஜயகாந்த் விசுவாசிகள், இயக்கத்தை விட்டு வெளியேற, பிரேமலதாவே காரணம் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.

மைத்துனர் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் என, எடுத்த எடுப்பிலேயே மீண்டும் ஒரு குடும்ப கட்சியை மக்கள் விரும்பவில்லை என, எழுதின பத்திரிகைகள்.

தே.மு.தி.க.,வின் ஓட்டு சதவீதம், 2.4 ஆக குறைந்து, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தையும் இழந்துவிட்டது.

அவமானங்களின் அணிவகுப்பில் அவரது உடலும், உள்ளமும் உற்சாகம் குன்றிப்போனது நிஜம். ஏறக்குறைய, ஏழு ஆண்டுகள், விஜயகாந்த் பெயரால் அறிக்கைகள் வெளிவந்தபடியே இருந்தன.

க டந்த, 2015ல், உடல்நலம் நலிவடைந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள, மவுன்ட் எலிசெபத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், விஜயகாந்த். வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று சக்கர நாற்காலியில், தாயகம் திரும்பினார், விஜயகாந்த். பிரேமலதா வழிகாட்டுதலிலும், சுதீஷின் பொறுப்பிலும் தீவிரமாக செயல்பட்டது, தே.மு.தி.க.,

மா ர்ச் 10, 2017, சென்னை, மியாட் மருத்துவமனையில் அக நோயாளியாக சேர்க்கப்பட்டார், விஜயகாந்த். அங்கு ஓரளவு நலம் பெற்றதும், மேல் சிகிச்சைக்காக மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றார். ஜூலை 7, 2018ல், அமெரிக்காவில், விஜயகாந்துக்கு கல்லீரல் ஆபரேஷன் நடைபெற்றது.

நுாறு நாட்களுக்கு பின், பிப்., 15, 2019ல் சென்னை திரும்பினார், விஜயகாந்த். அவரது உடல் நலத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டதாக சொல்ல முடியாது. பேச்சு சீராக இல்லாமல் தட்டுத் தடுமாறி ஒலித்தது. கடைசியில் மவுனமே வாழ்க்கையாகி, நடமாட்டமும் இன்றி முடங்கிப் போனார்.

நாளடைவில் சர்க்கரை வியாதியின் பாதிப்பு கூடிக்கொண்டே வந்தது. விளைவு, ஜூன் 21, 2023ல், மியாட் மருத்துவமனையில், விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்டது.

டிசம்பர் 26, 2023ல், விஜயகாந்துக்கு நிமோனியா காய்ச்சல். மறுபடியும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின், அவர் மறுநாள் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், சற்று நேரத்துக்கெல்லாம் சகலமும் மாறியது... 'விஜயகாந்த், நுரையீரல் அழற்சி காரணமாக மரணமடைந்தார்!' என்று அறிவித்தது, மருத்துவமனை.

தொண்டர் கூட்டத்தில், சாலிகிராமம் குலுங்கியது. கோயம்பேடு வரைக்கும் எங்கும் மனித தலைகள்.

முழு அரசு மரியாதையுடன், 72 குண்டுகள் முழங்க, தே.மு.தி.க., அலுவலகத்தில், விஜயகாந்தின் உடல் சந்தனப் பேழையில் வைத்து, அடக்கம் செய்யப்பட்டது.

அதை யாரும், விஜயகாந்தின் சமாதி என்று சொல்வதில்லை; விஜயகாந்தின் திருக்கோவில் என்றே அழைக்கின்றனர்.

க டந்த, 2024 குடியரசு தினத்தையொட்டி, விஜயகாந்துக்கு, 'பத்மபூஷண் விருது' அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு, மே 9, குடியரசு தலைவர், திரவுபதி முர்மு கையால் அந்த உயரிய கவுரவத்தை பெற்றுக் கொண்டார், பிரேமலதா.

துாற்றுவார் துாற்றவும், போற்றுவார் போற்றவும் எப்போதும் போல் காற்றாக, காமதேனுவாக, கற்பக விருட்சமாக, ஏழை நெஞ்சங்களில் உயிர் வாழ்வார், விஜயகாந்த்.

- முற்றும்

- பா. தீனதயாளன்

- நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073






      Dinamalar
      Follow us