PUBLISHED ON : அக் 20, 2024

வேலை எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. தவிர்க்கவே முடியாத வேலைகளை பரபரவென்று ஓரிரு நாட்களுக்கு முன்பே முடித்துவிட்டு, தள்ளிப் போடக் கூடிய வேலையாக இருந்தால் ஜாலியாக ஓரம் கட்டிவிட்டு, பண்டிகை கால மனநிலைக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
* சந்தோஷங்களை அள்ளிக் குவிக்கும் தருணங்கள் கிடைப்பது அரிது. குழந்தைகள் சட்டென்று வளர்ந்து பெரியவர்களாகி விடுவர். அனைவரும் பேசி சிரித்து மகிழவே, இத்தகைய தினங்கள் உள்ளன. அப்போதும், 'டிவி' முன்போ, திரைப்பட அரங்கிலோ நேரத்தை செலவழிக்காமல், மனம் விட்டுப் பேசுவதற்கான காலமாக, இதை மாற்றிக் கொள்ளுங்கள். 'டிவி' எங்கேயும் போகாது. தியேட்டரும் அப்படித்தான். முக்கியமாக, குழந்தைகளுக்கு நற்பண்புகளை நம் அடையாளங்களை சொல்லித் தாருங்கள். அடுத்த தலைமுறையினரை சரியாக வழிநடத்துவதும் நம் கடமை.
* பண்டிகைக்கு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை முன்னரே தயாரித்து, உங்கள் பட்ஜெட்டிற்கு தகுந்த படி, வாங்கி வைத்து விடுங்கள். சமையல் பொருட்களாக இருந்தாலும், புத்தாடைகளாக இருந்தாலும், கடைசி நேர பரபரப்பில் சிலவற்றை வாங்க முடியாமல் போகலாம். அதனால், தேவையற்ற, 'டென்ஷன்' ஏற்படலாம். அதேபோல் நெருங்கிய உறவினருக்கு அல்லது நண்பர்களுக்கு பரிசளிக்க விரும்பும் போது, அதற்குரிய பொருட்களை, கடையை முன்னரே தேர்ந்தெடுத்து வாங்கி, 'பேக்' செய்து வைத்துவிடுங்கள். குழந்தைகளுக்கான தேவைகளையும் முதலிலேயே கவனித்து விடுங்கள்.
* பண்டிகைக்காக உறவினர்களை அல்லது நண்பர்களை அழைக்க முடிவு செய்தால், யாரை அழைக்க வேண்டும் அல்லது நாம் செல்லவிருந்தால் யார் வீட்டிற்கு போவது என்று முன் கூட்டியே முடிவு செய்து விடுங்கள். போகும் முன், மெசேஜ் அல்லது போனில் அழைத்து முன் அறிவிப்பு செய்துவிட்டு செல்லுங்கள். 'சர்ப்ரைஸ் விசிட்' எல்லாம் இந்தக் காலத்திற்கு ஒத்து வராது.
* வீட்டுக்கு வரும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டு செய்யும் நேரம் இதுவல்ல. எல்லாருக்கும் பிடிக்கக் கூடிய பொதுவான மெனு தான் பெஸ்ட்.
* வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் அல்லது நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் இருந்தால், அவர்களுக்கான உணவை முதலிலேயே தயார் செய்து கொடுத்து விட வேண்டும்.
* பண்டிகை தினமாக இருந்தாலும், எந்த நாளாக இருந்தாலும், மனதை ஒருநிலைப்படுத்தி சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். அடுத்தவர் மனம் நோக எப்போதும் பேச வேண்டாம். இது போன்ற சுப தினங்களில் யாருக்கும் கெடுதல் நினைக்காமல், நல்ல வார்த்தைகளைப் பேசி, சிறியவர்களை ஆசிர்வாதம் செய்தும், நம்மை விட பெரியவர்களிடம் ஆசி பெற்றும் வளமாக வாழ்வோம்.
— ஜி.மனோன்மணி.