
தம்பியாக நடிக்க மறுத்த, இயக்குனர்!
அமரன் படத்தை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார், சிவகார்த்திகேயன். அடுத்து, சுதா கொங்கரா இயக்கும், புறநானுாறு என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.
இப்படத்தில் இன்னொரு, 'ஹீரோ'வாக இயக்குனர், லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்தார், சுதா. பின்னர் கதையில் செய்த திருத்தம் காரணமாக, அந்த இன்னொரு, 'ஹீரோ' வேடத்தை சிவகார்த்திகேயனின் தம்பியாக மாற்றினார். இதனால், அந்த படத்தில் இருந்து, வெளியேறி விட்டார், லோகேஷ் கனகராஜ். தற்போது அந்த தம்பி வேடத்தில் நடிக்க, அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார்.
சினிமா பொன்னையா
பேய் வேடத்தில் நடிக்க விரும்பும், மாளவிகா மோகனன்!
தங்கலான் படத்தை அடுத்து, சர்தார்- 2 படத்தில் நடித்து வரும், மாளவிகா மோகனன், 'சோஷியல் மீடியா'வில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுகிறார். அப்படி உரையாடும் போது, பெரும்பாலான ரசிகர்கள் அவரை, 'ஹாரர்' படத்தில் மிரட்டலான பேயாக பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தற்போது, சில, 'ஹாரர்' பட இயக்குனர்களை சந்தித்து, தன்னை அதிரடியான பேய் வேடத்தில் நடிக்க வைக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார், மாளவிகா மோகனன்.
— எலீசா
'அட்வைஸ்' அம்புஜமான, பிரியங்கா மோகன்!
'செல்பி' எடுக்க வேண்டும் என்பதற்காக, தன் காரை ரசிகர்கள் பைக்கில் துரத்தினால், காரை நிறுத்தி, 'செல்பி'க்கு, 'போஸ்' கொடுக்கிறார்,பிரியங்கா மோகன்.
அத்துடன், 'இப்படி என்னை பின் தொடர்ந்து வரும் போது, விபத்து ஏதேனும் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள். ஒரு 'செல்பி' எடுப்பதால் பெரிதாக என்ன லாபம் வந்துவிடப் போகிறது...' என, அவர்களுக்கு புத்திமதி கூறிய பிறகே அங்கிருந்து நகர்கிறார்.
எலீசா
சிம்புவை காப்பாற்றும், துபாய்காரர்!
சிம்புவின், 48வது படத்தை, கமலஹாசனின், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதிலிருந்து பின் வாங்கி விட்டார், கமலஹாசன். இதனால், அந்த படமும் கிடப்பில் இருந்தது.
ஆனால், அப்படத்தின் கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்து விட்டதால், அதை விட மனம் இல்லை. தற்போது, துபாயிலிருந்து ஒரு தயாரிப்பாளரை அழைத்து வந்து, அப்படத்தை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார், சிம்பு.
சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
தமிழில் நடித்த இரண்டு படங்களும், அந்த பீஸ்ட் நடிகைக்கு, 'ஹிட்'டாக அமையாத போதும் தற்போது, மூன்று படங்களை அதிரடியாக கைப்பற்றி இருக்கிறார், அம்மணி. இதற்கு முக்கிய காரணம், மும்பையில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்து, ஸ்டார் ஓட்டலில் முகாமிட்டுள்ள நடிகை, பிரமாண்ட படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு பாலிவுட் சினிமா பாணியில், 'மிட் நைட் பார்ட்டி' கொடுத்து அசர
வைப்பதுதான்.
இதையடுத்து, அம்மணி நடித்த படங்கள் தோல்வி அடைந்த போதும், அவரது அரவணைப்பு காரணமாக, அடுத்தடுத்து புதிய படங்களுக்கு ஒப்பந்தம் போட்டு வருகின்றனர். இதனால், சத்தம் இல்லாமல், பீஸ்ட் நடிகையின், 'கால்ஷீட் டைரி புல்' ஆகி வருகிறது.
தளபதி நடிகர் கடைசியாக நடித்து திரைக்கு வந்த இரண்டெழுத்து படம் எதிர்பார்த்தபடி வசூலாகவில்லை. இருப்பினும், தங்கள் சார்பில் ஒரு குழுவை வைத்து, அப்படம் 450 கோடி ரூபாய் வசூலித்ததாக, 'பில்டப்' செய்திகளை, 'சோஷியல் மீடியா'வில் வைரல் ஆக்கியிருக்கிறார், தளபதி.
இதன் காரணமாக அப்பட தயாரிப்பாளருக்கு, வருமான வரித்துறையினரால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர், தளபதியை தொடர்பு கொண்டு, 'இதுபோன்று பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம். உங்களது இந்த செயல்பாட்டால் எனக்கு வருமான வரித்துறையினர், 'செக்' வைக்கின்றனர்...' என, அந்த செயலை நிறுத்திக் கொள்ளுமாறு தளபதியை கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார்.
சினி துளிகள்!
* எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கும், 69வது படம், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.
* முகமூடி மற்றும் பீஸ்ட் படங்களில் நடித்த, பூஜா ஹெக்டே மீண்டும் விஜயுடன் அவரது, 69வது படத்தில் இணைந்திருக்கிறார்.
* அதர்வா நடித்துள்ள, டி.என்.ஏ., படத்தில், அவருக்கு ஜோடியாக, நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.
அவ்ளோதான்!